ஐரோப்பாவில் வேதியியல் வல்லுநராகப் புகழுடன் திகழும் முனைவர் செ.அன்புச்செல்வன்

Vinkmag ad

ஐரோப்பாவில் வேதியியல் வல்லுநராகப் புகழுடன் திகழும் முனைவர் செ.அன்புச்செல்வன் (உடுமலை) சொல்கிறார் :
“தமிழ்வழிக் கல்வியால் உலகம் முழுதும் தமிழர்கள் உயர்வாய் வாழ்கிறோம் !
தமிழ்வழிக் கல்வியைக் காப்பாற்றுவோம் !”
~~~~~~~
“நெடும் பதிவுகள் எழுதுமளவுக்கு நேரமில்லை.ஆயினும் இதுகாறும் நான் கடந்து வந்த பாதைகள், அறிவியல் ஆய்வுகள், இந்திய அரசு நிறுவனங்களான CSIR, UGC மற்றும் DST மூலம் ஆராய்ச்சி(உதவித்தொகை) விருதுகள், போர்ச்சுகல் அரசின் FCT முதுமுனைவர் ஆராய்ச்சி விருது, ஐரோப்பியஆணையத்தால் (European Commission-Marie-Curie Action),உலகெங்குமிருந்து வரும் போட்டி ஆராய்ச்சியாளர்களுடன் ஒப்பிட்டுத் தேர்வுசெய்து வழங்கப்பெறும் மேரி-கியூரி ஆராய்ச்சி விருது (ஆராய்ச்சித்தொகை மட்டும் இரண்டு கோடி உரூபாய்கள்) என்று எனக்குக் கிடைத்த பெருமைகள் யாவற்றுக்கும் அடிப்படை என்னுடைய தாய்மொழிக்கல்வி மட்டுமே. என்னுடைய ஆங்கில மொழியறிவு அல்ல என்பதைச் சொல்லியாக வேண்டிய நிலையில் இருப்பதால் இந்தப்பதிவு.

முழுமையாக, ஆங்கிலத்தில் அரைமணி நேரம் தொடர்ந்துபேசுவது எனக்கு இன்னும் கடினம்தான்.
வெகுஅரிதாக, அதைப்பற்றிக் கவலைப்படுவதுண்டு.

ஆனால், அதற்குமேலும் எனக்கு வேதியியலறிவு உண்டென்ற செருக்கு இருப்பதால் ஆங்கிலத்தைப்பற்றிக் கவலைப்படாமல் ஆங்கிலம்பேசும் நாட்டிலேயே என்னால் இயங்கமுடிகிறது.

ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்ட இந்த மக்களுக்கு என்னுடைய அறிவியல் அறிவுமட்டுமே போதுமானதாக இருக்கிறது.

அறிவியலின் எந்தவொரு புதுப்புலத்தை நான் பார்க்கநேர்ந்தாலும் உடனே அதை தமிழில் மொழிபெயர்த்து, நான்அறிந்த பொருள்களுடன் ஒப்பிட்டு உள்வாங்கிக் கொள்கிறேன். உதாரணமாக MRI என்னும் Magnetic Resonance Imaging தொழில்நுட்பத்தில் புதிதாக SMART-MRI என்றொரு முறை வளர்ந்துகொண்டு இருக்கிறது. நானும் இந்தப் புலத்தில்தான் ஆராய்ச்சி செய்கிறேன். மனதுக்குள் எப்போதும் ‘திறன்-காந்த ஒத்ததிர்வுப் படமாக்கி’ என்றே எண்ணிக்கொண்டு ஆராய்ச்சியில் இயங்கும்போது வரும் தினவை இங்கே சொல்லில் வடித்துவிட முடியாது. அவ்வளவு பெருமையாக உணர்வேன்.

1996 ஆம் ஆண்டிலிருந்து ஐரோப்பிய ஆணையத்தால் தேர்வுசெய்து வழங்கப்பெறும் மேரி-கியூரி ஆராய்ச்சி உதவித்தொகை விருது களை இந்திய அளவில் ஆண்டுக்கு பத்துப்பேர் பெற்றிருக்கலாம் என்றாலும் கூட தமிழ்நாட்டிலிருந்துதான் அதிகமானோர் பெற்றிருக்கின்றனர் என்று அறிகிறேன்.

குறிப்பாக, அவர்களில் பெரும்பாலானோர் தமிழ்வழிக்கல்வியில் பயின்றவர்தாம்.

தாய்மொழியில் சிந்திக்கத்தெரியாமல் மாற்றுமொழிகளைப் பிடித்துத்தொங்கிக் கொண்டிருப்போர் மும்மொழி அருமை என்று பீற்றிக்கொள்வர். காவி மாயையில் சிக்கித்தவிக்கும் இவர்களுக்கு நாம் என்ன சொன்னாலும் உறைக்காது.

தானாகச் சிந்தித்துச் செயலாற்றும் ஆட்சியாளர்கள் இல்லாதது தமிழகத்தின் கெடுவாய்ப்பு.

திருட்டுத்தனமாகக் காவிகளை வைத்து பொதுமக்களின் கருத்துக் கேட்கப்பட்டதாகச் சொல்லிப் புதிய கல்விக்கொள்கை திணிக்கப்பட்டால் இனி எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நாமும் நம் பிள்ளைகளும் பிழைத்துக்கொள்ள வாய்ப்பே இல்லை.

வடக்கத்தியக் காவிகளும் இந்துத்துவ அடிவருடிகளும் மும்மொழிக்கொள்கை வேண்டுமென்று ஆலாய்ப்பறக்கிறார்கள். இந்தப்பதர்கள், நம்மையும் நம் மொழியையும் அழிக்கும்வரை ஓயமாட்டார்கள்.

ஆனால், நாம் அவர்களை அடையாளங்கண்டு நம்முடைய ஆழ்ந்த அறிவுச்செறிவுள்ள கருத்துகளால் முறியடிக்க வேண்டிய நேரம்இது.
தமிழ்வழிக்கல்வியின் தேவையைப்
புரிந்துகொள்வோம்.

– முனைவர் செ. அன்புச்செல்வன்
MSc ,PhD ,MRSC
18/07/2019

News

Read Previous

அண்ணலாரின் அழகிய பண்புகளில் கடுகளவு கூட நம்மிடம் இல்லாமல் இருப்பது வேதனையல்லவா?

Read Next

ஒரு புத்தகம் என்ன செய்யும்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *