அண்ணலாரின் அழகிய பண்புகளில் கடுகளவு கூட நம்மிடம் இல்லாமல் இருப்பது வேதனையல்லவா?

Vinkmag ad

அண்ணலாரின் அழகிய பண்புகளில் கடுகளவு கூட நம்மிடம் இல்லாமல் இருப்பது வேதனையல்லவா?

அண்ணலாரின் அழகிய வாழ்வுதனை பாடலாக்கி மகிழ்ந்த நாகூர் சலீம் அவர்களின் எழுத்துக்களை தனக்கே உரிய அழகிய நடையில் கம்பீரமாக பாடிச்சென்றவர் நாகூர் ஹனீபா அவர்கள்.

இசை கூடுமா? கூடாதா? என்று விவாதக்களம் நடத்திய அன்றைய சூழலில் யாருடைய விமர்சனத்தையும் பொருட்படுத்தாது அண்ணலாரின் வாழ்க்கை வரலாற்றை பாடல்கள் மூலம் மக்களிடம் கொண்டு சேர்த்தார் நாகூர் ஹனீபா.

இன்று எதார்த்தமாக அவரது பாடலை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது; இருளில் நிலவாக பிறந்தார்…நபி இருளில் நிலவாக பிறந்தார்….

இந்த இகத்தோரின் மனக்கதவை திறந்தார்….இருளில் நிலவாக பிறந்தார்…நபி இருளில் நிலவாக பிறந்தார்….

இறைத்தூதர் தாம் என்று மொழிந்தார் நபி, இங்கு எளியோரின் துணையாக இருந்தார் நபி…

பணத்தாசை பிடித்தோரை பழித்தார் நபி, பண்பு கெடுத்தோரை பலத்தோடு எதிர்த்தார் நபி….

இருளில் நிலவாக பிறந்தார்…நபி இருளில் நிலவாக பிறந்தார்….என்று அந்த பாடல் போய்க்கொண்டிருந்தது.

வெறுமனே இதை பாடலாக காணாமல், அதில் உள்ள பொருளை உணர்ந்த போது தான் இன்று நம்மில் இருக்கும் எந்த பண்புமே அண்ணலார் காண்பித்து தந்த பண்பல்ல என்பதை உணர முடிந்தது.

பெருமானாரின் அன்பும் அரவணைப்பும் ஏழை எளிய மக்களோடு இருந்ததை நாம் நன்கறிவோம்; பணத்தாசை பெருமானாரின் கொள்கைக்கு எதிரானதென்பதையும் நாமறிவோம்.

இன்றோ நமது வீடுகளில் நடைபெறும் திருமண வைபவங்களின் விருந்தோம்பல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வரும் முகம் தெரிந்த அல்லது தெரியாத ஏழைகளை பிறகு வாருங்கள் என்று விரட்டி அடித்து விட்டு வசதி படைத்தோரை முதல் பந்தியில் வைத்து அழகு பார்க்கும் பெருமை குணம் நம்மில் மேலோங்கி விட்டது.

மது,மாது,போதை போன்ற பண்பை கெடுக்கும் கலாச்சார சீர்கேடுகளை பலம் கொண்டு எதிர்த்த அண்ணல் நபி(ஸல்) அவர்களின் அன்றைய வரலாற்றை படித்த நாம் இன்று தெருக்கள் தோறும் பரவி கிடக்கும் இந்த கலாச்சார சீர்கேடுகளை எதிர்ப்பதில் நம்மிடம் பலம் உள்ளதா?

மதுவுக்கு எதிராக சகோதரி நந்தினியிடம் இருக்கும் தைரியம் கூட நம்மிடம் இல்லை என்பது தானே இன்றைய நிலை? மார்க்கம் கற்றறிந்த அறிஞர்கள் கூட பண்பு கெடுக்கும் கலாச்சார சீர்கேடுகளை எதிர்த்து களமாடவில்லை என்பது வேதனையல்லவா?

பணம் பணத்தோடு சேரும், குணம் குணத்தோடு சேரும் என்ற பழமொழிக்கேற்ப இன்று பணக்காரர்கள் பணக்காரர்களோடு உறவாடுவதும் ஏழைகளை புறந்தள்ளுவதுமான இன்றைய மனிதர்களின் வாழ்வியலில் பெருமானார் (ஸல்) அவர்களின் பண்பில் கடுகளவு கூட இல்லையே?

பணக்காரர் என்னும் ஒரே தகுதி தான் பெரும்பாலான மஹல்லாக்களின் தலைவர்,செயலாளர் பதவிகளை அலங்கரிக்கின்றது. இத்தகைய போக்கினை அன்றே அண்ணல் நபி(ஸல்) அவர்கள் வெறுத்துள்ளார்கள் என்பதற்கு ஹழ்ரத் பிலால்(ரலி) அவர்களுக்கான அதான் என்னும் பாங்கோசை விடுக்கும் தகுதியை ஏற்படுத்தி காண்பித்தார்கள்.

பிலால்(ரலி) அவர்கள் அடிமையாக இருந்தவர்கள் மட்டுமல்ல பரம ஏழை என்பதும் முக்கியமான விடயமாகும்; அதனால் தான் இன்றைய பாங்கு சொல்லும் மோதினார்களை நாம் மிகவும் இளக்காரமாக பார்க்கும் நிலை நீடிக்கிறது.

அதான் என்னும் பாங்கு சொல்லும் பணி என்பது அண்ணல் நபி(ஸல்) அவர்களின் அங்கீகாரம் பெற்ற சிறப்பான பணியாகும்; பணப்பெருமை, குலப்பெருமை நிறைந்த அன்றைய சூழலில் பாங்கு சொல்லும் உரிமை எங்களுக்கே வேண்டுமென்று எதிர்பார்த்த போதும், அந்த சிறப்பினை பிலால்(ரலி) அவர்களுக்கு கொடுத்து கண்ணியம் காத்தார்கள் நபி(ஸல்) அவர்கள்.

மோதினார் என்பது இன்றைய காலத்தில் மிகவும் இளக்காரமான பணியாக பார்க்கப்படும் சூழலை நாகூர் ஹனீபாவின் பாடல் உணர்த்துகிறது.

அண்ணலாரின் அழகிய பண்புகளில் கடுகளவு கூட நம்மிடம் இல்லாமல் இருப்பது வேதனையல்லவா? இனியாவது நம்மிடையே நல்ல பண்புகளை உருவாக்கி நாளை மறுமைக்கான நன்மைகளை சேமிக்க முயல்வோம்.
-கீழை ஜஹாங்கீர் அரூஸி.

News

Read Previous

தமிழைப் போற்ற வாருங்கள்!

Read Next

ஐரோப்பாவில் வேதியியல் வல்லுநராகப் புகழுடன் திகழும் முனைவர் செ.அன்புச்செல்வன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *