உலகக் காற்பந்துப் போட்டி 2018

Vinkmag ad
அந்த ஒரு நொடி…
13.7.2014ம் ஆண்டு.
அன்று மாலை ஜெர்மனியின் பல சாலைகளில் பகல் வேளையிலேயே ஒரு வாகனமும் ஓடவில்லை.  பலர் உணவகங்களிலும், பப்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பெரிய தொலைக்காட்சிகளைச் சுற்றி கூட்டம் கூட்டமாக அமர்ந்திருந்தனர்.
நானும் என் நண்பர்கள் சிலருடன் ஒரு பெரிய உனவகத்திற்குச் சென்றிருந்தேன். அனைவரும் ஜெர்மனி கொடி போட்ட டிஷர்ட், கையில் கொடி சகிதம் சென்றிருந்தோம்.
முதல் பாதி ஆட்டம் முடிந்து விட்டது.  வல்லமை பொறுந்திய அர்ஜெண்டினாவா ? எடுத்து வைக்கும் ஒவ்வொரு நகர்வையும் யோசித்து அளந்து செய்யும் ஜெர்மனியா…? யார் கோல் போடப்போகின்றனர் என மனம் திக் திக் என அடித்துக் கொண்டிருந்தது.
அர்ஜெண்டினா வெற்றி பெறுவதை மனம் ஏற்கவில்லை, ஜெர்மனியின் தோமஸ் முல்லரோ, பிலிப் லாமோ, டோனி க்ரூஸோ, மரியோ கோமெசோ, ஊட்சிலோ ஒரு கோல் போட மாட்டார்களா என எங்கள் என்ணம் முழுவதும் அவர்கள் நகர்விலேயே அழுந்திக் கிடந்தது.
ஜெர்மனியின் கோல் கீப்பர் மனுவல் நோயருக்கு 2 கண்களில்லை. ஆயிரம் கண்கள். நினைத்தபடி தாவும் கால்கள். நினைத்தால் நீளும் கைகள். எங்கிருந்து பந்து வந்தாலும் பார்த்து  தட்டி விடும் திறமையாளர். ஆயினும் கூட சில வேளைகளில் பந்து அவரிடம் சேட்டைகள் செய்து வலைக்குள் விழுந்து ஜெர்மனி குழுவின் காலை வாரிவிட்ட தருணங்களும் உண்டு. ஆனால் முதல் பாதி வரை அன்று  100 விழுக்காடு அல்ல… 1000 விழுக்காடு மேனுவலின் கண்கள் பந்திலேயே குறியாக இருந்தன.
எனக்கு டென்ஷன் ஏறிக்கொண்டிருந்தது. பக்கத்தில் உள்ள நண்பர்களின் அதிருப்தி கலந்த குரலும் உணவகத்தில் எழும்பிய கூச்சலும் சற்றே தலைவலியை உருவாக்கியிருந்தது.  இடைவேளை வரை எந்த அணியும் கோல் ஒன்றும் போடவில்லை.  உள்ளே அமரமுடியாத வகையில் கூட்ட நெருக்கடி. வெளியில் உலாவிவிட்டு மீண்டும் உள்ளே வந்தேன். வெளியே ஒரு வாகனும் சாலையில் அந்த நேரத்தில் ஓடவில்லை.
அடுத்த சில நிமிடங்களில் இரண்டாம் பகுதி விளையாட்டு தொடங்கியது.  உணவகத்தில் இருந்தோர் இப்போது மிக உணர்ச்சிவயப்பட்டவர்களாக இருந்தனர். அந்த கூட்டத்தின் உணர்ச்சி என்னையும் தாக்கியது. ஒவ்வொரு முறை பந்து அர்ஜெண்டினாவின் கோல் பகுதிக்குச் செல்லும் போதும் உணவகத்தின் கூரை இடிந்து விழுவது போல கூச்சல். எல்லோரின் எதிர்பார்ப்பும் அந்த ஒலியில் அடக்கம்.
எதிர்பாராத ஒரு நொடி. எதிர்பாராத வகையில்.
இளம் விளையாட்டாளர் கூட்ஸே.. எங்கிருந்து வந்தார் அப்படி போட்டார்.. தெரியாது..
உணவகமே மகிழ்ச்சியில் அலறியது. எல்லோரும் மகிழ்ச்சியில் கணவா நனவா என அறியாது மகிழ்ச்சியில் குதித்து மகிழ்ந்தோம்.
அர்ஜெண்டினாவின் குழு அதிர்ச்சியில் உறைந்து நின்றது. ஜெர்மனியின் குழு ஓடிக் குதித்து மகிழ்ந்தது. பயிற்சியாளர் யோகி லூவின் உடல் மொழி நாம் வென்று விட்டோம் என்று பறைசாற்றியது.
அடுத்த சில நிமிடங்களில் அர்ஜெண்டினா அசுர பலத்தைக் காட்டி விளையாடியது. கிட்டிய வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ள ஜெர்மனி அசுரனை எதிர்க்கும் அசுரனாக ஓடி அரங்கத்தை தன் வசப்படுத்தி வேறு எந்த கோலும் விழாதவாறு பார்த்துக் கொண்டது. இறுதியில் வெற்றி ஜெர்மனிக்கே.  வெளியே வாகனங்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து கொண்டு சாலையில் பறந்தன.
2014ம் ஆண்டு மகிழ்ச்சியுடன், ஜெர்மனியை பேரானந்ததிலும் வெற்றிக் களிப்பிலும் ஆழ்த்தி ஜெர்மனி குழு நாடு திரும்பியது.
இப்போது மீண்டும் அந்த வெற்றிக் கோப்பை அடுத்த வெற்றியாளருக்காகக் காத்திருக்கின்றது.
மீண்டும் ஜெர்மனி வெற்றி பெறுமா என்பது பெரிய கேள்வியே. ஆயினும் வாய்ப்புக்களை தம் வசப்படுத்திக் கொள்ள பிரேசில், அர்ஜெண்டினா, ஸ்பெயின், போர்த்துக்கல், நெதர்லாந்து, ஜெர்மனி, போலந்து, ரசியா ஆகிய நாடுகளின் குழுக்கள் நிச்சயம் போராடும்.
-சுபா



°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Dr.K.Subashini
http://www.subaonline.net – எனது பக்கங்கள்
http://www.tamilheritage.org/– Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/– மரபு விக்கி

 

News

Read Previous

தைரியம்

Read Next

தமிழை வளர்ப்போம்…

Leave a Reply

Your email address will not be published.