வரலாற்றின் பக்கத்தில் ஒருநாள்…!

Vinkmag ad

வரலாற்றின் பக்கத்தில் ஒருநாள்…!
ஹஜருல் அஸ்வத் – கறுப்புக்கல் …! பாகம் – 5


மக்கம் –
இறையருள் பெருகும்
மாண்புகளின் பக்கம்
அங்கே
குல உயர்ச்சி என்பது
குறைஷிப் பெருமக்களின்
மற்றொரு பக்கம்…

சுவனக்கல் பற்றி –
சுவனத்தின் கறுப்புக்கல் பற்றி –
சுற்றி நின்றவர்கள்
இளைஞர் முஹம்மதின்
கவனத்தில் வைத்தனர்…

தாங்கள் பிளவு படும் பகையைத்
தீர்த்திடும் வகையை
அவரிடம் கேட்டுத்
தங்கள் குல கவுரவம் கவிழா வகையில்
தீர்ப்புசொல்ல
இனிப்பைச் சாரும்
எறும்பைப் போல் மொய்த்தனர்…

தோழர்களின் பேச்சைத்
தூயவர்
உள்ளத்தில் வாங்கினார் …
அதற்கும் முன்பே
க அபா ஆலயச் சிறப்பும்
கருப்புக்கல் பற்றிய நினைப்பும்
அகத்தில் தாங்கினார்….

பிறகு
அவர்களை நோக்கிப்
பேசலானார்
தேன்மாரி இசைக்கும்
தென்றல் போல்
வீசலானார்…

” அன்பர்களே…!
நண்பர்களே…!
மக்க நிலத்தின்
நாற் குலத்தவர்களே…
க அபாவின் நலம் நாடும்
நலத்தவர்களே …
தமக்குள் பிரிவு வரக்கூடாது
என்றெண்ணும்
நல்ல மனத்தவர்களே…!

நாமெலாம் கூடும் இந்த
க அபா ஆலயம்
அனைத்துலக மக்களுக்கும் பொது …
நீங்கள் அறிவீர்கள்….
ஆதியிறைத் தூதர் ஆதமொடும்
அருள் இறைநேசர்
இபுராஹிம் நபிகளோடும்
அடையாளப் பட்டது
இது…

இந்த
அருளிறை ஆலயத்துக்கு
அப்போது அவர்களே
வெவ்வேறு சூழல்களில்
நாட்டினர் அடிக்கல் ..
அப்படிப் போல்தான்
அந்த அருட் கல்…

அது இந்த ஆலயத்தின் புனிதமாய்
இத்தனை ஆண்டுகள்
இருந்தே வந்தது…
இதன் பூர்விகம் என்பது
சுவனத்தில் என்பதும் நம்
கவனத்தில் இருந்தே வந்தது…

இதற்காக நீங்கள்
மோத வேண்டாம்
உங்களுக்குள்
ஒரு பேதம் வேண்டாம்….

நீங்கள் அறிய மாட்டீர்களா…
பேரிறைவன் படைப்பில்
உயர்வென்றும் தாழ்வென்றும் இல்லை …
நாம் அனைவருமே
மக்காவின்
ஒரே தோட்டத்து முல்லை…
மனங்கள் ஒன்றானவர்க்கு
வானமே எல்லை….

நாம் அனைவரும் ஒன்றே
பிறப்பின் வகையில் …
அவரவர் பெறும் உயர்வெலாம்
இறைக்குவப்பான
செயல்களின் மிகையில் …
அப்படி இருக்க
ஏன்வீ ணாக விழ வண்டும்
வெறுப்பெனும் பகையில் …?

இது –
ஆதி யிறை வீடு
இங்கே பகையாய் நின்று
காய்தல் கேடு…

எனவே அன்பர்களே …
இதிலிந்து மீள
நானொரு உத்தி சொல்கிறேன்
உங்களுக்கு நலமென்று தோன்றும்
ஒரு நல்ல புத்தி சொல்கிறேன்….
அதைக் கேட்டால் நன்று…
அதனால் உமை கெடுக்கும் பகையெனும்
கேடு கெடும் இன்று…”

புண்ணியர் மொழிந்த
பூந்தேன் மொழிகள்
சுற்றி நின்ற
கண்ணியர் செவிகளில்
தேனாய் பாய்ந்தது …
புனிதர்
சொல்லப் போவதை எண்ணி
அவர்களின்
உள்மனம் ஆய்ந்தது…!

இறையறிவதனால்
நிறையறி மிகுந்தோர் – தம்மிடம்
குறை புக நின்றவர்க்கு
முறை செய விழைந்தார்….

எனவே
தம் பொன் மேனி தழுவிய
மேல் துண்டை எடுத்தார் …
அதைக் க அபாவின்
தரை மேல் விரித்தார் …
அவர்களிடம்
கறுப்புக்கல்லை எடுத்து- அதை
அந்தத் துணியில் வைத்திட பணித்தார் ….

அண்ணலின் கட்டளையேற்று
நாற்குலம் வந்தது…
கறுப்புக்கல்
கம்பீரத்துடன் ஏறி
அண்ணலின் போர்வையில்
அமர்ந்து கொண்டது ..

“அன்பரே…!
நீங்கள் நாற்குலமும் எழுக – எழுந்து
துணியின் நான்கு புறமும்
பிடித்துத் தூக்கி வருக.. .”

இளைஞர் முஹம்மது
இயம்பிய உரையில்
இதயம் நனைந்தவர்
இறுக்கம் தளர்ந்தனர்….
முஹம்மதின் மொழிக்குத்
தம் சம்மதம் தந்தனர்….

விம்மி வெடித்த குலங்கள்
கும்மி அடித்துக் கூடி வந்தன
கறுப்புக் கல்லின்
நான்கு முனைகளையும் பிடித்து
ராஜ நடை நடந்து வந்தன…

மீண்டும் பேசினார்
மென்மையின் காவலர் – ஒரு
வன்மையின் போக்கை – தம்
வாய்மையால் தீர்த்த
சாதுர்ய நாயகர்….

“உங்கள் அனைவரின் சார்பில்
அடியேன் எனக்கு
அனுமதி தருக ..
அப்படித் தந்தால்
உங்கள் சார்பில்
அடியேன் அதனைப் பொருத்தலாம்
நீங்கள் இதனைப் பொருந்தினால்
என் கோரிக்கையைப் பொருந்தலாம்…

அதனால் வீண் பகை மாளும்
எவருக்குள்ளும் கசப்பின்றி
மக்காவின் புகழ் வாழும் ..
இந்த சிறப்பு
இந்த க அபா ஆலயம் உள்ளவரை
மங்கலமாய் அனைவரையும் சூழும்…!”

அண்ணலின் சொல்
அவர்களின் அகமேற ..
அடுத்த கணமே
நெஞ்சை
அடைத்து நின்ற
பகைமைப் புகை வெளியேற …
‘அவ்வாறே ஆகட்டும் ‘ – எனத்
தந்தனர் சம்மதம்
அண்ணல் தம் வசம்…!

பாவக்கறை அழுக்குகளால்
கறுப்பான கல் –
மீண்டும் உயர்
சாதிக்கறை அழுக்குகளால்
வழக்காகா வண்ணம்- உயர்
வேதக்கரை ஒழுக்கங்களால் உயர்வான
நாயகக் கரம் தொட்டு அதனை –
அதன் இடத்தில்
வைத்தான் ஒருவன் – அவன்
அனைத்துலகுக்குமான அருள் பேரிறைவன்…

அண்ணலின் செயலால்
க அபாவும்
கறுப்புக் கல்லும்
பெருமை பட்டுக் கொண்டன….!

வாள் பிடித்து எழுதும் தீர்ப்பை
அண்ணல் அன்று
தம் மதியால் எழுதினார் ..
எல்லோர்க்கும் சமநீதி
எனும் விதியால் எழுதினார்

கொலைக்குக் கொலை
பழிக்குப் பழி எனக்
குற்றம் குவிந்த மண்ணில்
தம் மதித் திறத்தால்
பெரும்போர் மூளாமல்
அதைத் தடுத்து நிறுத்தினார் …

பகையில் எழுந்து
பகையில் உளைந்த
ஒரு சமூகத்தைத்
தங்கள் பண்பால் நிமிர்த்தி
பணிவால் உயர்த்தி
எல்லோர்க்கும் சமன்செய்து
பார் புகழும்படி ஆக்கினார் …

அது உலக வரலாற்றின்
உன்னதமானது …
ஈடிணையில்லா
தனித்துவமானது ….
க அபா வாழும்
கவித்துவமானது….!

(அடியேன் எழுதிக் கொண்டிருக்கும்
‘அகிலத்தின் அருட்கொடை- நாயகக் காவியம்’ நூலில் இருந்து ஒரு பகுதி)

அத்தாவுல்லா…

News

Read Previous

பிளஸ் டூ தேர்வில் சிறப்பிடம் பெற்ற பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி மாணார்க்கர்கள்

Read Next

நீலகிரி மலை பாதையில் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் சாலையில் பழுதடைந்து நின்றால்…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *