மே தினக் கவிதை

Vinkmag ad

மே தினக் கவிதை


அசத்தியங்களைப் புரட்டும்
சத்திய நெம்புகோல்
இவன்!

இமயச் சிகரங்களையும்
இற்று விழச் செய்யும்
இந்த சூத்திரதாரியின்
சூத்திரம் –
உழைப்பு மாத்திரம்!

காய்ப்பேறிப்போன
இவன்
கைத் தழும்புகளிலும்
கால் வெடிப்புகளிலும்
நாள்தோறும்
பூமியின் புதிய ரேகைகள்
புதுப்பித்துக் கொள்ளும்!

நதிகளின் ஜீவியம்
இவன் சுக மூச்சுக்களின்
நலம் விசாரிக்கும்!

பிறக்கும்
ஒவ்வொரு அதிகாலையிலும்
பறக்கும் பறவைகளின் இசை போல
ஒலிக்கும்
இவனது உழைப்பின் பாட்டு!

இவன்தான்
இந்த பூமியின்
பூமத்திய ரேகை!
அழிந்து போகாத
ஆயுள் ரேகை!

ஏனெனில்-
இவனது கை
எவரிடமும் யாசிக்காத
உழைப்பின் நம்பிக்கை!

இனிய மே தின வாழ்த்துக்கள்!

அத்தாவுல்லா…

( துபாயிலிருந்து வெளி வந்த ஓர் ஆண்டு மலரில் எழுதிய கவிதை)

News

Read Previous

வாசிப்பு நம் வசமாகட்டும் 

Read Next

லஞ்ச ஒழிப்புத் துறை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *