மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகள்

Vinkmag ad

மருத்துவம் சார்ந்த
20 பி.எஸ்.சி பட்டப் படிப்புகள்
20 B.Sc. Higher graduate studies in
Allied Health Sciences
பாகம் – ஒன்று
மருத்துவத் துறை சார்ந்த உயர் கல்வி வழிகாட்டுதல் கட்டுரை
Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை
12 ஆம் வகுப்பு பரீட்சை எழுதி விட்டு தேர்வு முடிவுகளுக்காக காத்திருப்பவரா நீங்கள்?
பனிரெண்டாம் வகுப்பில் பயாலஜி / உயிரியல் துறையைத் தேர்ந்தெடுத்து
மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளைத் தேர்ந்தெடுக்கும் ஆர்வம் இருப்பவரா நீங்கள்?
நீட் பரீட்சை எழுதாமல் பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் கொண்டே படிக்கத்தகுந்த மருத்துவம் சார்ந்த பி.எஸ்சி படிப்புகள் குறித்து அறிய ஆர்வம் இருப்பவர்களா நீங்கள்?
உங்களுக்கானது இக்கட்டுரை
இந்த கட்டுரையில்
மருத்துவத்துறையில் அதைச் சார்ந்துள்ள முக்கியமான 20 பி.எஸ்சி படிப்புகளைப் பற்றி விரிவாகக் காண்போம் (பாகம் 1 இல் முதல் பத்தும் பாகம் 2 இல் இரண்டாம் பத்தும் பார்ப்போம் )
அனைத்து படிப்புகளுக்கும் பொதுவான விசயங்கள்

  1. அனைத்து மருத்துவம் சார்ந்த பிஎஸ்சி படிப்புகளும் நான்கு வருட படிப்புகள் ( ஒன்றிரண்டு விதிவிலக்கு இருக்கும்)
  2. மூன்று வருடங்கள் படிப்பும் ஒரு வருடம் பயிற்சியுமாக வடிவமைக்கப்பட்டுள்ளன
  3. அனைத்து படிப்புகளிலும் மனித உடல் அறிவியலின் அந்தந்த படிப்புகளுக்குத் தேவையான அடிப்படை உடற்கூறியல் , இயங்குவியல் , நுண்ணுயிரியியல், நோயியல், மருந்தியல் போன்றவை பயிற்றுவிக்கப்படுகின்றன.
  4. இத்துடன் அடிப்படை ஆங்கில கல்வி , அடிப்படை கணிணிக் கல்வி, அடிப்படை தொழில் சார்ந்த அறம் போன்றவை பயிற்றுவிக்கப்படுகின்றன
    கீழ்காணும் படிப்புகளை தர அடிப்படையில் அடுக்கவில்லை
    எனவே அவரவர்க்கு பிடித்த துறையை தேர்ந்தெடுத்து படியுங்கள்
  5. பி.எஸ்சி விபத்து மற்றும் அவசர சிகிச்சை தொழில்நுட்பம்
    ( Bsc Accident & Emergency Care Technology)
    இந்தப் படிப்பில்
  • அவசர சிகிச்சைப் (CASUALTY & EMERGENCY DEPARTMENTS) பிரிவில் மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கு உதவும் வகையிலும் சிகிச்சைக்கான அடிப்படை அனைத்தும்
    பயிற்றுவிக்கப்படும்.
    அவசர சிகிச்சைப் பிரிவில் நோயாளியை பரிசோதித்து அவருக்கு உரிய சிகிச்சையை வழங்குதல் , அவசர அறுவை சிகிச்சைகள் , அவசர சிகிச்சைப் பிரிவில் உபயோகப்படுத்தப்படும் மருத்துவ உபகரணங்கள் குறித்த அறிவும் போதிக்கப்படும்.
    கல்வி பயிலும்
    மூன்று வருடமும் வருடத்திற்கு ஆயிரம் மணிநேரங்கள் நேரடியாக விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவில் நேரடியாக கல்வி கற்குமாறு இந்த படிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.
    நான்காவது ஆண்டு
    பல்வேறு துறை ( மருத்துவம் / அறுவை சிகிச்சை / விபத்து சிகிச்சை / மகப்பேறு மற்றும் குழந்தைகள் அவசர சிகிச்சை) அவசர சிகிச்சைப் பிரிவுகள் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் பயிற்சி எடுக்க வேண்டும்.
    எதிர்காலம் – இதே துறையில் எம்.எஸ்சி படிப்பு உள்ளது. அதைப் படிக்கலாம்.
    சிறிய & பெரிய மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் விபத்து & அவசர சிகிச்சை தொழில்நுட்புனராக (BSc Accident & Emergency Care Techinician) பணிபுரியலாம்.
    பின்குறிப்பு – தொடர்ந்து அவசர சிகிச்சை நோயாளிகளைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். ரத்தம் சதை எலும்பு போன்றவற்றை அனுதினமும் பார்த்து சிகிச்சை அளிக்க வேண்டும். ரத்தம் சதை மரணங்கள் போன்றவற்றை தாங்க மாட்டேன் என்பவர்கள் யோசித்து தேர்ந்தெடுக்க வேண்டும்.
    எனக்கு இந்த சவால்களை ஏற்று உயிரைக் காப்பாற்றுவது பிடிக்கும் என்றால் நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய படிப்பு.
  1. BASLP ( BSc Audiology Speech Language Pathology )
    பி எஸ்சி செவிப்புலவியல் பேச்சு மொழி சார்ந்த நோயியல் தொழில் நுட்புணர்
    இந்த படிப்பில் மனிதர்களின் செவிப்புலன் அதில் ஏற்படும் செவித்திறன் குறைபாடு , காது கேளாமை மற்றும் அதைக் கண்டறிய செய்யப்படும் பரிசோதனைகள் , அதை செய்வது எப்படி?
    காது கேளாதவர்களுக்கு எத்தகைய சிகிச்சை பரிந்துரை செய்வது?
    பேசுவதில் ஏற்படும் பிரச்சனைகள்
    பேச்சு குளறுதல்
    அதற்குரிய சிகிச்சை
    பேச்சுப் பயிற்சி அளித்தல்
    குழந்தைகளுக்கு பேச்சு பயிற்சி அளித்தல்
    இவ்வாறாக செவிப்புலன் மற்றும் பேச்சு அதை ஒட்டிய அனைத்து நோய்கள் மற்றும் அதைத் தீர்க்கும் வழிகள் குறித்தும் பயிற்றுவிக்கப்படும்.
    எதிர்காலம் – இதே துறையில் எம்எஸ்சி உள்ளது.
    காது மூக்கு தொண்டை நிபுணர்களுக்கு உதவும் வகையில் செவிப்புலன் பிரச்சினையை கண்டறியும் நுட்புணர்களாக இருக்க முடியும்.
    சுயமாக பேச்சுப் பயிற்சி அளிக்கும் நிபுணர்களாகவும் மாற முடியும்.
    இவர்கள் ஆடியாலஜிஸ்ட் என்றும் ஸ்பீச் தெரபிஸ்ட் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
    பின்குறிப்பு – காது கேளாதவர்கள் மற்றும் சரியாக பேச இயலாதவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் முக்கிய பணி. இந்தப்பணிக்கு பொறுமை மிக மிக அவசியம்.
  2. பிஎஸ்சி இதயம் சார்ந்த தொழில்நுட்பம்
    ( Bsc Cardiac Technology)
    இந்தப் படிப்பில் இதயம் சார்ந்த உடற்கூறுயியல், இயங்குவியல், நோயியல் , நுண்ணுயிரியில், மருந்தியல் , மருத்துவ உபகரணங்கள் , மருத்துவ இயற்பியல் போன்றவை பயிற்றுவிக்கப்படும்
    இத்துடன் ஈசிஜி எடுப்பது, ட்ரெட் மில் பரிசோதனை எடுப்பது, ஹோல்டர் எனப்படும் தொடர் ஈசிஜி கண்காணிப்பு , தொடர் ரத்த அழுத்த கண்காணிப்பு , எக்கோ எடுப்பது எப்படி? என்பவை கற்றுத் தரப்படும்
    இத்துடன் ஆஞ்சியோ கிராம் , ஆஞ்சியோப்ளாஸ்டி , ஸ்டெண்ட் வைத்தல் போன்ற சிகிச்சைகளில் இதய மருத்துவருக்கு உதவுவது குறித்த நேரடி பயிற்சியும் வழங்கப்படும்.
    இறுதி வருடம் – கேத் லேப் எனப்படும் ஆஞ்சியோ செய்யும் இடங்களில் மூன்று மாதம்
    எக்கோ பயிற்சி மூன்று மாதம்
    இதய நோய் தீவிர சிகிச்சை பிரிவில் மூன்று மாதம்
    ஹோல்டர் ஈசிஜி எடுக்கும் பயிற்சியில் மூன்று மாதம் நேரடி பயிற்சி பெற வேண்டும்
    எதிர்காலம் –
    இதய நோய் சிறப்பு நிபுணர்களின் கேத் லேப்களில் அவர்களுக்கு உதவியாளர்களாக / தொழில் நுட்புணர்களாக பணிபுரிய முடியும்.
    பெரிய மருத்துவமனைகளில்
    ஈசிஜி / எக்கோ /ட்ரெட்மில் போன்றவற்றை கையாளும் நுட்புணர்களாக பணியாற்ற முடியும்.
  3. பிஎஸ்சி இதய நுரையீரல் ரத்த ஓட்ட தொழில் நுட்பம்
    Bsc Cardio pulmonary Perfusion Techonology
    இந்த படிப்பு சார்ந்த இதயம் மற்றும் நுரையீரலுக்கான அடிப்படை மருத்துவ கல்வி புகட்டப்படும்
    இத்துடன் இதயம் மற்றும் நுரையீரல் சார்ந்த அறுவை சிகிச்சைகளில் குறிப்பாக பைபாஸ் அறுவை சிகிச்சைகளில் உபயோகப்படுத்தப்படும் இதய நுரையீரல் இயந்திரத்தை கையாளுவது குறித்த நேரடி பயிற்சி வழங்கப்படும்.
    இதயத்தில் அறுவை சிகிச்சை நடக்கும் போது இதய அறுவை சிகிச்சை நிபுணருக்கு உதவியாக ஹார்ட் லங்க் மெஷினை கையாளும் நுட்புணராக பணி செய்ய வேண்டும்.
    அந்த இயந்திரத்தை சுத்தம் செய்வது , தொற்று நீக்கம் செய்வது , பராமரிப்பது போன்ற விஷயங்கள் கற்றுத் தரப்படும்.
    எதிர்காலம் – இதயம் சார்ந்த பைபாஸ் அறுவை சிகிச்சைகள் / இதய அறுவை சிகிச்சை நடைபெறும் இடத்தில் இதய நோய் சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு உதவும் குழுவில் நுட்புணர்களாக பணி புரியலாம்.
  4. பிஎஸ் சி மருத்துவ ஊட்டச்சத்தியல் தொழில்நுட்பம்
    Bsc Clinical Nutrition
    இந்தக் கல்வியில் அடிப்படை & மேம்பட்ட ஊட்டச்சத்தியல் , அடிப்படை & மேம்பட்ட உணவியல் , உடல் இயங்குவியல் , ஊட்டச்சத்து சார்ந்த உயிர் வேதியியல் , உணவுத் துறை சார்ந்த நுண்ணியிரியியல் , உணவுத்துறை அறிவியல், சமூக ஊட்டச்சத்தியல் , உணவு சார்ந்த பரிந்துரை வழங்குதல் போன்றவை குறித்து களப்பயிற்சி வழங்கப்படும்.
    பல்வேறு இணை நோய் கொண்ட மக்களுக்கு எவ்வாறு உணவு பரிந்துரை வழங்க வேண்டும் என்பது குறித்த கல்வி பயிற்றுவிக்கப்படும்
    எதிர்காலம் – மருத்துவமனைகளில் மருத்துவம் சார்ந்த ஊட்டச்சத்து மற்றும் உணவியல் பரிந்துரையாளராக பணிபுரியலாம்.
    சுயமாகவும் ஊட்டச்சத்து சார்ந்த உணவுமுறை பரிந்துரை செய்யும் நிபுணராக விளங்க முடியும்.
  5. பி எஸ்சி தீவிர சிகிச்சை தொழில்நுட்பம்
    BSc Critical Care Technology
    இந்தப் படிப்பில் அடிப்படை மருத்துவ கல்வியுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் (INTENSIVE CARE) நோயாளிகளை கண்காணிப்பது குறித்து அடிப்படை மற்றும் மேம்பட்ட கல்வி வழங்கப்படும்
    தீவிர சிகிச்சைப் பிரிவில் வழங்க வேண்டிய சிகிச்சைகள் குறித்தும்
    தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் கையாளப்படும் வெண்ட்டிலேட்டர் போன்ற கருவிகளை இயக்குவது பராமரிப்பது குறித்தும்
    தீவிர சிகிச்சைப் பிரிவின் நிர்வாகம், தேவையான பொருட்கள் மருந்துகள் நோயாளிகளின் சார்ந்த புள்ளியியல் பராமரிப்பு மற்றும் அறம் சார்ந்த கல்வியும் போதிக்கப்படும்.
    இறுதி வருடம் – மருத்துவத்துறை , குழந்தைகள் நலத்துறை, இதய நலத்துறை, நுரையீரல் நலத்துறை போன்றவற்றின் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் பயிற்சி வழங்கப்படும்.
    எதிர்காலம் –
    மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் குழுவில் உறுப்பினராக பணிபுரியலாம்.
  6. பிஎஸ்சி டயாலசிஸ் டெக்னாலஜி
    Bsc Dialysis Technology
    சிறுநீரக துறை சார்ந்த அடிப்படை மருத்துவ கல்வி கற்றுத்தரப்படும்
    இத்துடன் சிறுநீரக செயலிழப்பில்
    உயிர்காக்கும் சிகிச்சையான டயாலசிஸ் ( ரத்த சுத்தீகரிப்பு முறை) செய்ய உதவும் டயாலசிஸ் இயந்திரத்தை இயக்கி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பயிற்சி முழு நேரமாக வழங்கப்படும்.
    எதிர்காலம் – டயாலசிஸ் சிகிச்சை வழங்கும் தொழில்நுட்புணர்களாக டயாலசிஸ் சிகிச்சை மையங்களில் பணிபுரியலாம்
    இவர்களை “டயாலசிஸ் டெக்னீசியன்” என்று அழைக்கலாம்.
  7. பிஎஸ்சி – நரம்பியல் மின் இயங்குவியல் தொழில்நுட்பம்
    Bsc Neuro Electro Physiology
    இந்த படிப்பில் மூளை மற்றும் நரம்பியல் சார்ந்த அடிப்படை மருத்துவக் கல்வியுடன்
    ஈஈஜி எனப்படும் மூளை மின் இயங்குவியல் பரிசோதனை செய்வதற்கான பயிற்சி வழங்கப்படும். இதயத்துக்கு எப்படி ஈசிஜியோ அது போல மூளைக்கு ஈஈஜி எடுக்கப்படுகிறது.
    இதை வைத்து நரம்பியல் நோய் சிறப்பு நிபுணர் ஒருவருக்கு வலிப்பு ஏற்படுகிறதா என்பதை கண்டறிவார்.
    வலிப்பின் தன்மை – தூண்டப்பட்ட வலிப்பா? அல்லது தூண்டப்படாமல் ஏற்படும் வலிப்பா? என்பது குறித்தும் அறியப்படும்
    இது மட்டுமன்றி நரம்பு வழி கடத்தப்படும் உணர்வுகள் குறித்த பரிசோதனை (Nerve conduction study)
    தசை வழி மின் ஓட்டப் பரிசோதனை ( Electro myography )
    உறக்கத்தில் செய்யப்படும் மூளை இயங்குவியல் பயிற்சி ( Polysomnography)
    கபாள வழி மின் காந்த அலைகள் மூலம் மூளையைத் தூண்டி செய்யப்படும் மேம்பட்ட பரிசோதனைகள் குறித்தும் பயிற்சி வழங்கப்படும்.
    எதிர்காலம் – நரம்பியல் சிறப்பு நிபுணர்கள் பரிந்துரைக்கும் இந்த பரிசோதனைகளை எடுக்கும் நுட்புணராக பணிபுரியலாம்.
    மருத்துவமனைகளில் ஈஈஜி டெக்னிசியன் மற்றும் நியூரோ எலக்ட்ரோ ஃபிசியாலஜி டெக்னிசியனாக பணிபுரியலாம்.
  8. பிஎஸ்சி மருத்துவ ஆய்வக நுட்புணர்
    Bsc Medical Laboratory Technology
    இந்த படிப்பில்
    மருத்துவ சமூகவியல் மற்றும் நோயரின் மனோதத்துவவியல்
    அடிப்படை மருத்துவ துறை சார்ந்த கல்வி
    இத்துடன்
    ஆய்வகம் நடத்துவதற்கு ஏதுவான நோயாளிகளிடம் இருந்து ரத்த , சிறுநீர் , மல , சளி மாதிரிகளைப் பெறுவது குறித்த பயிற்சி
    திசு நோயியல் ,மாதிரிகளில் இருந்து செல்களை நுண்ணோக்கிகளில் மருத்துவர்கள் பார்த்து நோய் கண்டறியும் வகையில் தயார் செய்வது, குருதி நோயியல் , எதிர்ப்பு சக்தியியல் , நுண்ணுயிரியல், உயிர் வேதியியல் சார்ந்த அத்தனை ஆய்வக பரிசோதனைகள் பற்றியும் கற்றுத் தரப்படும்.
    இறுதி ஆண்டில்
    நான்கு மாதங்கள் நோயியல் துறை ஆய்வகத்திலும்
    நான்கு மாதங்கள் நுண்ணியிரியல் துறை ஆய்வகத்திலும்
    நான்கு மாதங்கள் உயிர் வேதியியல் துறை ஆய்வகத்திலும் பயிற்சி பெற வேண்டும்
    எதிர்காலம் – இந்தப் படிப்பு படித்தவர்கள் மருத்துவமனைகளின் ஆய்வகங்களில் ஆய்வக நுட்புணர்களாக பணிபுரியலாம்
    சுயமாக ஆய்வகங்கள் தொடங்கி நடத்தி சேவையாற்றலாம்.
  9. பிஎஸ்சி மருத்துவ சமூகவியல்
    BSc Medical Sociolgy
    மருத்துவத் துறை சார்ந்த அடிப்படை மருத்துவ கல்வி
    அத்துடன் சமூகத்தின் கலாச்சார சூழல் , சமூக மற்றும் உடல் நலன் சார்ந்த மனோதத்துவவியல் , சமூக நலன், சமூகம் சார்ந்த மருத்துவம், சமூகம் சார்ந்த ஆராய்ச்சிகள், மனித உரிமை, மருத்துவமனை நிர்வாக அடிப்படை, பேரிடர் மேலாண்மை , சூழலியல் போன்றவற்றில் கல்வி புகட்டப்படும்.
    இறுதி ஆண்டில்
    உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நோயாளிகளுக்கு கவுன்சிலிங் வழங்குவது ,
    மருத்துவ துறை ஆவணங்களை பராமரித்தல், நோய்களுக்கு ஏற்ற சரியான குறியீடுகளை வழங்குதல்,
    மன நல மற்றும் மனோதத்துவ கவுன்சிலிங் வழங்குதல் போன்றவற்றில் பயிற்சி வழங்கப்படும்.
    எதிர்காலம் –
    மருத்துவமனைகளில் ஆற்றுதல் படுத்துதல் மையங்களில் பணி புரியலாம்.
    நோய் குறித்த மனம் சார்ந்த ஆற்றாமை மற்றும் அச்சங்களை போக்கும் கவுன்சிலர்களாக செயல்படலாம்.
    உறுப்பு மாற்று கவுன்சிலராக செயல்படலாம்.
    அரசு சார்பற்ற இயக்கங்கள் மூலம் சமூக நலனுக்காக உழைக்கலாம்.
    அரசின் சமூக நலன் சார்ந்த இயக்கங்களில் பங்கெடுக்கலாம்.
    மெடிக்கல் ட்ரான்ஸ்க்ரிப்சன் துறையில் பணிபுரியலாம்.
    மருத்துவம் சார்ந்த சுற்றுலாவை மேற்பார்வை மற்றும் நிர்வகிப்பவர்களாக பணிபுரியலாம்.
    இந்த வரிசையில் அடுத்த பத்து பிஎஸ்சி படிப்புகள் குறித்து அடுத்த பதிவில் பாகம் இரண்டில் பார்க்கலாம்
    நன்றி
    Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா
    பொது நல மருத்துவர்
    சிவகங்கை

News

Read Previous

8 கோடி பேர் விரும்பி கேட்ட குழந்தைப் பாடல்

Read Next

மோடி அரசுக்கு உச்சநீதி மன்றம் சாட்டையடி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *