சிட்டுக் குருவிகள்

Vinkmag ad

சிட்டுக்குருவிகள்

கீதா முத்துக்குமார்,
பொறியாளர்
சிங்கப்பூர்

சுறுசுறுப்புக்கு பெயர் போன சிட்டுக்கு குருவி  மிகவும் அழகானது. பண்டைய காலம் தொட்டு  இன்று வரை ஒவ்வொருவரும் காலையில் துயில்  எழ சேவலுக்கு அடுத்து சிட்டுக்குருவிகள் இயற்கை அலாரமாக உள்ளது. சிட்டுக்குருவியின் கீச் கீச் என்ற அதன் இசையைக் கேட்டு மயங்காதவர்களே இல்லை எனலாம், அவ்வளவு இனிமையான குரல். மனித மனதை இதமாக்கும் இனிய ரீங்கார இசை. இவற்றின் இசையைக் கேட்க பணமோ, மின்சாரமோ மற்றும் இசை வட்டுக்களோ தேவை இல்லை.

இவை வீட்டுக் குருவிகள், ஊர்க்குருவிகள் மற்றும் அடைக்கலக்குருவிகள் என்று அழைக்கப்படுகின்றன. இவை 3 முதல் 5 முட்டைகள் வரை இடும் திறனுடையது. 12  முதல் 15 நாள் வரை அடைகாக்கும்.

அவை கீச் கீச் என ஒலி எழுப்புவதையும், சிறகடித்துப் பறப்பதையும், தத்தித்தத்திச்  செல்ல நடை போடுவதையும் , கூடு கட்ட அங்கும் இங்குமாக சுறுசுறுப்பாக இடம் தேடுவதையும், தானியங்களைக் கொத்திக்கொத்திச் சாப்பிடுவதையும், எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்கும் சிட்டுக் குருவிகளை நம் சிறு வயதில் கண்டு மகிழ்ந்து இருப்போம். ஆனால் இன்றைய தினங்களில்  சிட்டுக்குருவிகள் நம் கண்களில் தென்படுவது மிகவும் அரிதாகிவிட்டது. இது எதனால் என்ற சிந்தனை நம் மனதில் எழுகிறது, ஆனால் அதைப் பற்றி சிந்திக்கவோ ஆய்வு செய்யவோ நேரமில்லாமல் நம் வாழ்வுக்காக ஓய்வின்றி ஓடக்கூடிய சூழலில் நாம் அனைவரும் உள்ளோம்.

சிட்டுக்குருவிகள் மனிதர்களோடு சேர்ந்து வாழும் இயல்புடையது.பெரும்பாலும் வனப்பகுதியில் வாழ்வதைவிட மனிதர்களுடன் நெருங்கி இருக்கவே விரும்பும். பொதுவாக சிட்டுக்குருவிகள் மரம், வீட்டு மாடம், பரண், கூரை,ஓடுகளின் இடைவெளி போன்ற இடங்களில் கூடுகட்டி வசிக்கும் தன்மையுடையது. அவை நம் வீடுகளில் கூடு கட்டியிருந்தால் அந்த குடும்பம் இனவிருத்தியடையப் போகிறது என்று நம் வீட்டுப் பெரியவர்கள் கூறுவதைக் கேட்டு இருப்பீர்கள். அந்த அளவுக்கு மனித வாழ்வோடு பிண்ணைப்புடையது இந்தச் சிட்டுக்குருவிகள்.

சிட்டுக்குருவிகள் கம்பு, கேழ்வரகு, திணை மற்றும் சாமை போன்ற தானியங்களை விரும்பி உண்ணும். இன்றைய நவீன காலத்தில் இவ்வகை சிறுதானியங்களின் பயன்பாடு குறைந்துவிட்டது. இவை வீடுகளிலும், வயல்வெளிகளிலும் சிதறிக் கிடக்கின்ற தானியங்களையும் பயிர்களில் காணப்படும் புழு பூச்சிகளையும் உணவாகக் கொள்கின்றன.

இவற்றின் வாழ்நாள் சுமார் 13 ஆண்டுகள். சிட்டுக்குருவிகள் இக்குறுகிய காலத்தில் நாள்தோறும் தமது வாழ்வுக்காக அவை சமூகத்தில் எதிர்நோக்கும் சவால்கள் ஏராளம் ஏராளம் எனலாம்.

முற்காலங்களில் மக்கள் வீட்டிற்குத் தேவையான உணவு தானியங்களை வீட்டு முற்றத்திலும், மொட்டை மாடிகளிலும் வெய்யிலில் காய வைப்பார்கள். இவற்றைச் சிட்டுக்குருவிகள் கொத்தித் தின்னும். இன்றையச் சூழலில் மக்கள் தங்களுக்கு தேவையான அனைத்து உணவு தானியங்களையும்  நெகிழிப் பைகளில் அடைக்கப்பட்ட நிலையில் வாங்கி பயன்படுத்துகின்றனர். மேலும் அன்று

அறுவடை செய்த தானியங்களை மக்கள் வீடுகளுக்கு கொண்டு வந்து சுத்தம் செய்வர். அதி்லிருந்து சிதறும் நெல்மணிகள் சிட்டுக்குருவிகளுக்கு உணவாகப் பயன்படும். ஆனால் இன்று அறுவடைக்கான எந்திரங்கள் பயன்பாட்டிற்கு வந்த பிறகு தானியங்களை வீடுகளுக்கு கொண்டு வரும் முறையே  வழக்கத்தில் இல்லை எனலாம்.

அன்று ஆறு,குளம்,ஏரிகள் மற்றும் கண்மாய்களில் நீர் நிரம்பி வழிந்தன. பறவை இனங்களுக்குத்  தேவையான தண்ணீர் இயற்கையாக தாராளமாக கிடைத்தன. இன்று ஏரி, கண்மாய்கள் தூர்வாரப்பட்டு மாட மாளிகைகளும் தொழிற்ச்சாலைகளும் கட்டப்பட்டுள்ளன. தானியங்களை எடை போடும் போதும், சுத்தம் செய்யும்போதும் சிதறுகின்ற தானியங்களை சிட்டுக்குருவிகள் நேரடியாக உணவாக எடுத்துக்கொள்ளும். ஆனால், தற்போது அனைத்துக் கடைகளிலும் நெகிழிப் பைகளில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

அன்று விவசாயிகள் இயற்கை முறை விவசாயத்தை மேற்கொண்டனர். இன்று ரசாயணம் கலந்த உரமும் பூச்சிக்கொல்லி மருந்தும் அதிகமாக பயன்பாடில் உள்ளதால் பறவைகளின் உணவான பூச்சிப் புழுக்கள் அழிக்கப்படுகின்றன.

கிராமப்புறங்களில்  பரவலாக காணப்படும் சிட்டுக்குருவிகள்  நகர்ப்புறங்களில் குறைவாக  காணப்படுகிறது. நகர்ப்புறங்களில் அடுக்கு மாடிக் குடியிருப்புகள் மற்றும் தொழிற்சாலைகள் அதிகமாகி வருகின்றன,  அதனால் சிட்டுக்குருவிகள் கூடுகட்டி குஞ்சு பொரிக்க போதிய இட வசதிகள் இல்லாததால் நகர்ப்புறங்களில் இவை குறைந்த எண்ணிக்கையில் காணப்படுகின்றன.

உலக சிட்டுக்குருவிகள் தினம் எப்போது மற்றும் அதன் முக்கியத்துவம் என்ன?

சிட்டுக்குருவியின் தேவையை உணர்ந்த ஐக்கிய நாடுகள் அவை, 2010 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் தேதியை உலக சிட்டுக்குருவி தினமாக அறிவித்தது. அன்று முதல் உலக சிட்டுக்குருவிகள் நாள் ஆண்டுதோறும் மார்ச் 20ம் நாள் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. சிட்டுக் குருவிகளின் எண்ணிக்கை அண்மைக் காலங் களில் குறைந்து வருவதன் காரணமாகவும், நாள்தோறும் தமது வாழ்வுக்காக அவை சமுகத்தில் எதிர்நோக்கும் சவால்களை மக்களுக்கு எடுத்துக்கூறி அதன் மூலம் அவர்களுக்கு சிட்டுக்குருவிகளை பாதுகாக்கும்  விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்நாள் 2010ம் ஆண் டில் இருந்து உலக சிட்டுக்குருவிகள் நாளாக கொண்டாடப்படுகிறது.

ஒரு சின்னஞ் சிறு சிட்டுக்குருவியை விளையாட்டுத்தனமாகக் கொன்ற சிறுவன்தான் சலீம் அலி, பின்னர் தனது வாழ்க்கையையே பறவைக்காக அர்ப்பணித்து இந்தியாவின் பறவை மனிதர் ஆனார் அவர். 

இன்றைய சூழ லில் சிட்டுக்குருவிகள் வெகுவேகமாக அழிந்து வருவதற்கான காரணங் கள் மற்றும் அவற்றை எவ்வாறு காப்பது என்பது பற்றி விரிவாக காண்போம்.

சிட்டுக்குருவிகள் அழிந்து வருவதற்கான காரணங்கள்

* சிட்டுக்குருவிகளை விவசாயிகளின் நண்பன் என்று சொன்னால் அது மிகையாகாது. பயிர்களை தாக்கும் பூச்சியினங்களை சிட்டுக்குருவி போன்ற பறவைகள் பிடித்து திண்பதால் பயிர்கள் இயற்கை முறையில் பாதுக்காக்கப்படுகிறது. ஆனால் இன்றைய சூழலில் அளவுக்கு அதிகமாக ரசாயணம்  கலந்த  உரங்களையும் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளையும் பயன்படுத்துவதால் பூச்சியினங்கள் அழிக்கப்படுகின்றன. பூச்சியினங்கள் அழிந்தால் இவைகளை நம்பியுள்ள பறவையினங்கள் உணவு பற்றாக்குறையால் பாதிக்கப்படுகிறது. இதுவும்  சிட்டுக்குருவிகள் அழிந்து வருவதற்கான காரணங்களுள் ஒன்று.

* மனிதனின் பழக்கவழக்க மாறுபாடுகளாலும் மற்றும் இன்றைய சுற்றுச்சூழல் மாறுபாடுகளாலும் சிட்டுக்குருவிகளின் இனம் அழிந்து வருவதற்கு காரணமாக உள்ளது என்ற நிதர்சனமான உண்மையை மறுக்க முடியாது.

*அலைப்பேசி கோபுரங்களில் இருந்து வரும் கதிர்வீச்சு சிட்டுக்குருவியின் கருவை சிதைத்து விடுவதால் அதன் இனப்பெருக்கம் தடை செய்யப்படுகின்றது. அதையும் தாண்டி  முட்டையிட்டாலும் கரு வளர்ச்சியடைவதில்லை என ஸ்பெயினில் நடைபெற்ற ஆராய்ச்சியில் ஒரு குறிப்பு சொன்னது, ஆனால் இது எந்த அறிவியல் ஆராய்ச்சி மூலமும் நிரூபிக்கப்படவில்லை.

*முன்பெல்லாம் சிட்டுக்குருவிகள் கூடு கட்டுவதற்கேற்ற கூரை வீடுகளும் ஓட்டு வீடுகளும் இருந்தன. ஆனால் இன்றைய சூழலில் அடுக்கு மாடிக் குடியிருப்புகள் மற்றும் தொழிற்சாலைகள் அதிகமாகி வருகின்றன,  அதனால் சிட்டுக்குருவிகள் கூடுகட்டி குஞ்சு பொரிக்க போதிய இட வசதிகள் இல்லாததால் இவை குறைந்த எண்ணிக்கையில் காணப்படுகின்றன.

* எரிவாயுக்களில் இருந்து வரும் மெத்தில் நைட்ரேட் எனும் ரசாயணம்  வெளிப்பட்டு பூச்சியினங்கள் அழிக்கப்படுகின்றன. பூச்சியினங்கள் அழிந்தால் இவைகளை நம்பியுள்ள சிட்டுக்குருவி போன்ற பறவையினங்கள் உணவு பற்றாக்குறையால் பாதிக்கப்படுகிறது.

சிட்டுக்குருவிகள் பாதுகாப்பு

அழிந்து வரும் சிட்டுக்குருவிகளின் இனத்தை பாதுகாக்க மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய முக்கியமான தருணத்தில் உள்ளோம். சிட்டுக்குருவிகளின் முக்கியத்துவத்தை நம் அடுத்தடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டும். இந்த உலகில் வாழ்கின்ற ஒவ்வொரு உயிரினமும் ஒன்றையொன்று சார்ந்து வாழ்கின்றன. இதில் எந்த ஒரு இனத்தின் அழிவும் மற்றொரு இனத்தின் அழிவிற்கு வித்திடும் என்பதை மறுக்க இயலாது.

சிட்டுக்குருவியின் இனத்தைப் பாதுகாக்க நம் வீட்டின் முன்பாக அல்லது மாடிகளில் தண்ணீர் மற்றும் உணவுகளை வைக்கும்  வழக்கத்தைக் கடைபிடிக்கலாம். நகர்ப்புறத்தில் வசிப்போர் மாடித்தோட்டம் அமைப்பதன் மூலம் சிட்டுக்குருவியிக்குத் தேவையான தண்ணீர் மற்றும் உணவை கிடைக்கச் செய்யலாம். மேலும் அட்டை அல்லது மரப்பலகையில் சிறிய  கூண்டுகளைச் செய்து வீடுகளுக்கு வெளியேயும், மரங்களிலும் மற்றும் பொது இடங்களிலும் அமைத்தால் சிட்டுக்குருவிகளின் இன அழிவை நம்மால் இயன்றவரை குறைக்கலாம். வீட்டிற்கொரு மரம் வளர்த்து அனைத்து வளங்களையும் காப்போம்.  ரசாயண உரங்களையும் பூச்சிக்கொல்லிகளையும் பயன்படுத்தாமல் , இயற்கை முறை விவசாயத்தை ஊக்கப்படுத்த வேண்டும். ஆறு, குளம், ஏரி மற்றும் கண்மாய்கள் போன்ற நீர்நிலைகளைப் பாதுகாத்து மற்ற உயிரினங்களைக் காப்போம். ஒரு கையால் தட்டினால் ஓசை எழாது, ஆகையால் நாம் அனைவரும் ஒன்றிணைந்து சிட்டுக்குருவிகளின் இனத்தை பாதுகாப்போம்.

News

Read Previous

கோர்பக்கானில் இரத்ததான முகாம்

Read Next

சர்வதேச மகிழ்ச்சி தினம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *