கனவுகள் கைவசப்படும்

Vinkmag ad

Dr.Fajila Azad

(International Life Coach – Mentor – Facilitator)

fajila@hotmail.com    FB:fajilaazad.dr   youtube:FajilaAzad

dr. ஃபஜிலா ஆசாத், சர்வதேச வாழ்வியல் ஆலோசகர்

கனவுகள் கைவசப்படும்

உங்களுக்குப் பிடித்த ஒரு சுற்றுலா தலத்திற்கு விடுமுறைக்குச் செல்கிறீர்கள் என்றால் பயணம் தொடங்கியதிலிருந்து அந்த இடத்தை அடைவது வரை மகிழ்ச்சியாக அங்கு சென்று பார்த்து ரசித்து அனுபவிக்க மகிழ்ச்சியான எண்ணங்களுடன் செல்வீர்களா அல்லது அங்கு சென்று சேரும் வரை பயணம் முழுவதும் டென்சனாக செல்வீர்களா?

ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வில் ஒரு தேடல், இலக்கு இருக்கும். அதனை நோக்கிய பயணம்தான் மனிதனை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. அந்தத் தேடல் அல்லது இலக்கு எதற்காக என்று சற்றே ஆழமாக ஆராய்ந்து இருக்கிறீர்களா. நீங்கள் யாரிடம் கேட்டாலும் அவர்களின் அந்த இலக்கை மட்டும் அடைந்து விட்டால் அதன் பிறகு நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து விடுவோம் என்றே பதில் வரும்.

சற்று நிதானமாக சிந்தித்துப் பாருங்கள். எது செய்து கொண்டு இருப்பவர்களும் இறுதியாக நிம்மதியான மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வதற்காகவே அதனை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் நிதர்சனம். ஆனால் அந்த மகிழ்ச்சியான வாழ்க்கையை அடைவதற்கான பயணத்தை அவர்கள் ஒரு பதட்டத்துடனும் பரபரப்புடனுமே கடக்கிறார்கள் என்பதுதான் இங்கு முரண்படுகிறது.

உண்மையில் நீங்கள் அடைய நினைக்கும் இலக்கு உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி ஏற்படுத்தும் என்றால் அதனை நோக்கிய பயணமும் மகிழ்ச்சியானதாக தானே  இருக்க வேண்டும். மகிழ்ச்சி என்பது நீங்கள் செல்லும் சுற்றுலா தலத்தில் இல்லை, அது உங்கள் மனதில் இருக்கிறது. அதுபோல்தான் வாழ்விலும் நீங்கள் விரும்பும் ஒன்று கிடைப்பதினால் ஏற்படும் மகிழ்ச்சியும்.

ஒரு கற்பனைக்காக.. ஏதோ ஒன்றைத் தேடி எந்த நிறைவும் இன்றி பரபரப்பாக மன அமைதியற்று இயங்கிக் கொண்டு இருக்கும் இந்த சூழலில் நீங்கள் எது கிடைத்தால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் என்று நினைக்கிறீர்களோ அது நாளையே உங்களுக்கு கிடைத்து விடுகிறது என்றால் அதன் பின் வரும் நாட்களும் வாழ்க்கையும் ஒரு fairy tale போல் இருக்கும் என்று நினைக்கிறீர்களா…. இந்த கதையை சற்று பாருங்கள்

அவர் ஒரு பெரிய யோகி ஒரு நாட்டுக்கு அவர் வந்திருக்கிறார் ரொம்ப மகிமையான ஒரு ஆன்மிகவாதி அவர் என்று தெரியும் போது நாட்டு மக்கள் எல்லாரும் திரண்டு அவரை பார்ப்பதற்காக காத்துக் கிடக்கிறார்கள்.

அவர்கிட்டே என்ன கேட்டாலும் கிடைக்கும் என்ற நம்பிக்கை கொண்ட மக்கள் தவத்தில் இருக்கும் அவர் கண் திறப்பதற்காக காத்துக் கிடக்கிறார்கள். அவரும் கண் திறந்து கூடி நின்ற மக்களைப் பார்த்து சொல்கிறார். இன்று இரவு நீங்கள் தூங்கப் போகிறதற்கு முன்னாடி உங்கள் விருப்பங்களை  நினைத்து மூன்று முறை மூச்சை உள்ளிழுத்து வெளியே விட்டு உங்களுக்கு வேண்டியதை நீங்கள் எழுதி வைத்து விட்டு தூங்குங்கள். நீங்கள் காலையில் கண்விழித்து பார்க்கும்போது  நீங்கள் எது கேட்டிருந்தாலும் அது உங்களுக்கு கிடைத்திருக்கும் என்று வரம் கொடுக்கிறார்,

சிலரால் நம்ப முடிகிறது,, பலரால் நம்ப முடியவில்லை.. இருந்தாலும் எல்லாருமே இது நடந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்கிற ஆசையும் , நப்பாசையும் பேராசையுமாக அவரை வணங்கி விட்டு அந்த இடத்தை விட்டுச் சொல்கிறார்கள்.  

எல்லாருமே தங்கள் வீடு வந்தவுடனே என்ன கேட்கலாம் என பரபரப்பாக இருக்கிறார்கள். இது நடக்குமா நடக்காதா என்பது ஒருபுறம் இருக்க நடக்காவிட்டால் இழப்பதற்கு எதுவுமே இல்லை நடந்தால் நினைத்து பார்க்க முடியாத பேரானந்தமாக இருக்குமே என்பதால் இரவு வருவதற்காக காத்திருக்கிறார்கள்.

சூரியன் மறைந்து நிலவு உச்சம் தொட ஒவ்வொருவரும் தங்கள் விருப்பங்களை பட்டியலிட்டு எழுதி வைத்துக் கொண்டு அந்த யோகி சொன்னது போல் கேட்கிறார்கள். பின் பரபரப்பில் தூக்கம் வராமல் தவித்து ஒரு வகையாக தூங்கி எழுந்து காலையில் கண் விழித்து பார்த்தால் என்ன ஆச்சரியம்… யார் யார் என்னென்ன கேட்டிருந்தார்களோ அது எல்லாமே அவர்களுக்கு கிடைத்திருந்தது.

10 பவுன் தங்கம் தனக்கு வேணும் அப்படின்னு கேட்டாங்களா அவர் கேட்ட மாதிரியே பத்து பவுன் தங்கம் அவங்க முன்னாடி இருக்குது. கார் கேட்டவர்களுக்கு காரும், டீவி கேட்டவர்களுக்கு டீவியும் வீடு கேட்டவர்களுக்கு வீடும் என அனைத்தும் நிறைவேறி இருக்கிறது.

அந்த மக்களால் அவங்க சந்தோஷத்தை தாங்கவே முடியலே. பொதுவாக ஒரு பொருள் வாங்கினால் அதனை உறவினர்கள் நண்பர்களிடம் காட்டி மகிழ்வது மனித இயல்புதானே. எனவே அனைவரும் தங்களுக்கு கிடைத்துள்ளவற்றை மற்றவர்களிடம் சொல்லி பகிர்ந்து கொள்ள நினைத்து வெளியில் வருகிறார்கள். தங்களுக்கு கிடைத்ததை எல்லாம் பெருமையாக சொல்லிக்கொள்ள ஆசைப் படுகிறார்கள்.

தங்களுக்கு கிடைத்ததை சொல்வதுடன் தங்கள் நண்பர்கள் உறவினர்கள் அண்டை வீட்டாரெல்லாம் என்ன கேட்டிருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வமும் இயல்பாக அவர்களுக்குள் எழுகிறது. அன்று அதிகாலையிலேயே ஊர் மக்கள் அனைவரும் கும்பல் கும்பலாக தெருவில் கூடி விடுகிறார்கள். ஒருவருக்கொருவர் தங்களுக்கு கிடைத்தவற்றை சொல்லியும் பிறருக்கு கிடைத்தவற்றை கேட்டறிந்து கொண்டும் அந்த ஊரே மகிழ்ச்சிக் கூச்சலில் அல்லோல கல்லோலப் படுகிறது.

ஆனால் மகிழ்ச்சிக் கூச்சலெல்லாம் சில நிமிடங்கள்தான். சட்டென ஒரு அமைதியும் விரக்தியும் சூழ அனைவரும் கலைந்து செல்ல ஆரம்பித்து விட்டனர். என்ன நடந்தது?

முதலில் ஒவ்வொருவரும் தங்களுக்கு விரும்பியது கிடைத்த மகிழ்ச்சியில் பிறரிடம் அதைப் பகிர்ந்து கொண்டிருந்த அதே நேரம் மற்றவர்களுக்கு கிடைத்த பொருட்களைப் பற்றி அறிய வந்ததும் தனக்குக் கிடைத்ததுடன் பிறருக்கு கிடைத்த பொருட்களை ஒப்பிட்டுப் பார்த்து வருத்தம் கொள்ள ஆரம்பித்து விட்டனர்.

10 பவுன் தங்கம் பெற்றவனுக்கு தனக்கு 10 பவுன் தங்கம் கிடைத்ததை பெருமையா சொல்லப் போனால் அடுத்தவனுக்கு 20 பவுன் கிடைத்துள்ளதை அறிந்து வருத்தம், 20 பவுன் கிடைத்தவனுக்கு மற்றொருவனுக்கு வீடு கிடைத்ததை அறிந்து வருத்தம், வீடு கிடைத்தவன் தோட்டம் கிடைத்தவனையும், டீவி கிடைத்தவன் தங்கம் கிடைத்தவனையும் என்று ஒவ்வொருவரும் மற்றவரை பார்த்து ஏங்கிப் போகிறார்கள். இறுதியில் எந்த முயற்சியும் எடுக்காமல் கேட்டவை கிடைத்தும் மகிழ்ச்சியை மட்டும் இழந்து நின்றனர். ரொம்ப சாதாரணமாக எல்லாம் அவங்களுக்கு கிடைத்தும் கூட அவங்க யாராலும்  நிம்மதியாக இருக்க முடியலே.

விருப்பங்களுக்கு ஆசைகளுக்கும் முதலிடம் கொடுக்கும் மனித மனம் எப்படி பட்டது என்பதை அலசும் ஒரு சைக்காலஜிக்கல் கதை இது.

கேட்பது கிடைப்பதில் வரும் மகிழ்ச்சியைவிட மகிழ்ச்சியான வாழ்க்கை முறையில் கிடைப்பவை அனைத்தும் அர்த்தமுள்ளதாக இருக்கும். மகிழ்ச்சியை உங்கள் மூச்சுக் காற்றாக மாற்றிக் கொள்ளாதவரை மனஅழுத்தம் என்பது ஒரு நாளைக்கு பத்து முறையோ, பத்து நாளைக்கு ஒரு முறையோ உங்கள் வாழ்க்கையில் ஏற்படுவதை தவிர்க்க முடியாது.

டிப்ரஷன் ஏற்படுவதற்கான அடிப்படையே எதிர்பார்ப்புக்கும், நடைமுறை சாத்தியத்திற்கும் உள்ள இடைவெளிதான். நீங்கள் ஒரு பொருளை விரும்பி அது கிடைக்காமல் போகும்போதோ அல்லது ஒரு வெற்றிக்கான முயற்சிகளை எடுத்து அந்த முயற்சி கைகூடாமல், வெற்றி கிடைக்காமல் போகும்போதோ மன அழுத்தம் ஏற்படுவதாக உண்ர்வீர்கள். இது இது செய்தால் இது கிடைக்கும், பெரும்பாலும் இப்படி இப்படி முயற்சித்தால் இதில் வெற்றி பெற்று விடுவோம் என்று நீங்கள் முன்பே உங்கள் மனதில் ஒரு திட்டம் வகுத்து அதன் பலனையும் கற்பனை செய்து ஒரு எதிர்பார்ப்புடன்தான் எந்த ஒரு செயலையும் செய்யத் தொடங்கி இருப்பீர்கள். அதுபடி எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என்றவுடன் உங்கள் மனம் விரக்தியில் சோர்ந்து விடுகிறது.

ஆனால் இங்கு முக்கியமாக, மகிழ்ச்சி என்பது இலக்கை அடைவதில் இல்லை அதற்கான பயணத்தில்தான் இருக்கிறது என்பதைத்தான் பெரும்பாலானோர் உணர மறந்து விடுகிறார்கள். இதை மட்டும் புரிந்து கொண்டால் விளைவு எதுவாக இருந்தாலும் அவர்களுக்கு அந்த முயற்சில் ஈடுபட்டிருந்த காலங்கள் என்றென்றும் நினைத்து நினைத்து அசை போடக் கூடிய இனிய மலரும் நினைவுகளாக மனதில் பதிந்திருக்கும்.

இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால்  நேர்மறையான மன நிலையுடன் செய்யக் கூடிய முயற்சிகள் பெரும்பாலும் வெற்றியிலேயே முடிவடைகிறது என்கிறது மனஇயல். மற்றொரு கோணத்தில் பார்ப்பதென்றால் நீங்கள் விரும்பும் ஒன்று நீங்கள் நினைத்த நேரத்தில் நினைத்த வகையில் கிடைக்கவில்லை என்பதால் நீங்கள் தோற்று விட்டீர்கள் என்று அர்த்தமல்ல என்பதை புரிந்து கொள்ளக் கூடிய பக்குவமும் அதை விட சிறந்த ஒன்று இதை விட தகுந்த நேரத்தில் கிடைக்கலாம் என்ற நேர்மறை எண்ணமும் இருந்தால் எந்த சூழலிலும் மனம் அமைதியற்று தவிக்காது.

மேலும், ஒன்றை நோக்கிச் செல்லும்போது உங்களிடம் இருக்கும் அல்லது உங்கள் முயற்சிகளின்போது Bi-Product ஆக கிடைக்கும் பொருட்களைப் பற்றி என்றாவது யோசித்திருக்கிறீர்களா? தண்ணீருக்காகத் தோண்டும்போது தங்கம் கிடைத்தாலும் தான் தேடியது கிடைக்கவில்லையே என்று கவலைப் படும் ஒருவரை நீங்கள் எந்த வகையில் சேர்ப்பீர்கள்?! வாழ்க்கை பல புதிர்கள் நிறைந்தது. எந்த இடத்தில் எந்த பொக்கிஷம் இருக்கும் என்பதை எவராலும் வரையருக்க முடியாது. விரிந்த பார்வையும் பரந்த மனப்பான்மையும் உடையவர்களுக்கு வானமே எல்லை.

எனவே உங்கள் கனவுகளையும் இலக்குகளையும் அடையும் பயணத்தை ஒரு இன்பச் சுற்றுலா செல்லும் பயணம்போல் மேற்கொள்ளுங்கள், இலக்குகளை கைகளுக்கு எட்டாதவையாக அதே நேரம் கண்களுக்கு எட்டக் கூடியதாக நிர்ணயுங்கள். ஒன்றை அடைந்தவுடன் அடுத்தது என்று இலக்குகளை விரிவு படுத்திச் செல்லுங்கள். ஒன்று கிடைக்கவில்லையா.. வேறொன்றை இலக்காக்கி உங்கள் பயணத்தை தொடருங்கள். ஓடிக் கொண்டிருக்கும் ஆறு என்றும் சேறாக மாறாது. இயங்கிக் கொண்டிருக்கும் மனிதனுக்கும் மனச் சோர்வு என்றும் வராது.

இலக்குகளும் இலட்சியங்களும் அடைந்து தீர்ப்பதற்கல்ல, அனுபவித்து வாழ்வதற்கு என்று உங்கள் ஆழ்மனதிற்கு உணர்த்துங்கள். மனஅழுத்தம் என்பது கனவிலும் வராது, கனவுகள் என்றென்றும் கைவசப்படும்.

News

Read Previous

சமூக அக்கறையுடன் கூடிய செய்திகளுக்கே ஊடகங்கள் முன்னுரிமை தர வேண்டும் – பத்திரிகையாளர், எழுத்தாளர் மு.முருகேஷ் வலியுறுத்தல் –

Read Next

தமிழர்களின் வரலாறு – ஆவணப்படம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *