கண்ணாடி

Vinkmag ad

கண்ணாடி

 எஸ் வி வேணுகோபாலன் 
ரு பழைய கதை. ஒரு முதிய வழிப்போக்கர் தமது பயணத்தின் ஊடே, தங்கள் இல்லத்தில் தங்கி இளைப்பாற அனுமதிக்கின்றனர் ஓர் இளம் தம்பதியினர். அவர் தமது பையில் என்னதான் வைத்திருப்பார் என்று ஒரு நாள் அவர் உறக்கத்தில் இருக்கையில் கணவன் எடுத்துப் பார்க்கிறான். கையில் எடுக்கும் பொருளைப் பார்த்துப் பார்த்து வியப்புறுகிறான். வைத்துவிட்டு வந்துவிடுகிறான். வேறொரு சமயத்தில் அவனது மனைவி அதே போன்ற எண்ணத்தில் அதே பையில் அதே பொருளை, பெரியவர் உறக்கத்தில் இருக்கையில் எடுத்துப் பார்த்து மிகவும் வியப்பில் ஆழ்ந்து விடுகிறாள். மறுநாள், கணவன் போய் அதை மீண்டும் கையில் எடுக்கையில் மறைந்திருந்து பார்க்கும் மனைவி பேரதிர்ச்சி அடைகிறாள். அதே போலவே, அவள் பின்னர் வந்து எடுத்துப் பார்ப்பதை கவனிக்கும் கணவன் மிகவும் கலக்கம் அடைகிறான். இருவருக்கும் இப்போது சண்டை மூண்டு விடுகிறது. அரவம் கேட்டுக் கண் விழிக்கும் அந்த முதியவர், என்ன பிரச்சனை என்பதை அறிந்து விழுந்து விழுந்து சிரிக்கிறார், பிறகு இருவரையும் ஒரு சேர அருகருகே நின்று அந்தப் பொருளைக் கையிலெடுத்துப் பார்க்கச் சொல்லி விளக்குகிறார். அவர்களும் நாணமுற்று சிரிக்கின்றனர். 
இது முகம் பார்க்கும் கண்ணாடியின் கதை. அதில் தெரிவது யாரோ ஓர் அழகிய ஆணின் முகம் என்று கருதி இருக்கிறான் அவன். அழகிய பெண்ணின் முகம் என்று இவள்! அதை எப்படி இவள் பார்க்கலாம் என்று அவன். அவளை எப்படி இவன் பார்க்கலாம் என்று அவள்! இப்போது பார்த்ததை பிரதிபலிக்கும் ஒரு பொருள் உண்டென்று புரிந்ததும் மாயை விலகுகிறது. 
கண்ணாடி  காட்சிப்படுத்துவது அல்லது காட்டாமல் இருப்பது எல்லாமே பின்னர் மிகப் பெரிய பேச்சுக்குள் அடிபடுகிறது. மனிதர்கள் தங்கள் முகத்தை மட்டுமல்ல ஒரு கண்ணாடிக்கு நேர் எதிரில் நிற்கும்போது தங்கள் அகத்தைக் காண்கிறார்கள். அது எப்போதும் அவர்களுக்கு அழகான காட்சியைத் தந்து அருள்கிறது. அவர்களுக்கு அது பிடிபடாத போது கண்ணாடி சில நேரம் உடைபடுகிறது. 
யானையின் மணியோசை, மிக அருகே வானத்தில் விமானம் கடக்கும் சத்தம், பஞ்சு மிட்டாய் போன்ற சில விஷயங்கள் எந்த வயதினரையும் சட்டென்று ஈர்த்து விடுவதைப் போல, கண்ணாடியும் நாகரிக மனிதர்கள் வாழ்க்கையில் முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கிறது. தன்னை நன்றாகவோ, சுமாராகவோ, இயல்பாகவோ அலங்கரித்துக் கொண்டு புறப்படும் பலரும், கதவைப் பூட்டுமுன் மீண்டும் ஒரு முறை கண்ணாடியைப் போய்ப் பார்த்துவிட்டுத் தான் நகர்கின்றனர். வழியில் எங்கே கண்ணாடி தட்டுப்பட்டாலும், முகம் தன்னை ஒரு முறை அந்த பிம்பத்தோடு பொருத்திப் பார்த்துவிட்டுத் தான் திரும்புகிறது. 
இயல்பியல் பாடத்தில் ஆடிகள் பற்றிய விரிவான பாடப் பகுதி உண்டு. ஒளியை ஊடுருவ விடும் தன்மை உள்ளிட்டுப் பல வகையான ஆடிகளில் நாம் முகத்தைப் பார்த்துக் கொள்ள முடியாது.  முகம் பார்க்கும் கண்ணாடி, வேதியியல் பொருள் பூசப்பட்ட ஆடி.  கண்ணாடி காலப்போக்கில் ஓர் உழைப்பாளியைப் போலவே படிப்படியாகத் தனது ரசத்தை இழக்கிறது. பாதி ரசம் போன அல்லது மொத்தப் பாதரசம் போன கண்ணாடிகள் வீடுகளில் இருக்கவே செய்யும். 
புகைப்படங்களை மிகப் பெரிய அளவில் இருந்து ஸ்டாம்ப் அளவு சுருக்கியும் தயாரிப்பது போலவே, ஆள் உயரக்கண்ணாடியில் இருந்து கையகலக் கண்ணாடி வரை வீடுகளில் வைத்திருக்கிறோம். வாழ்க்கைத் தத்துவத்தின் காட்சிப் பொருளாகி விடுகிறது அது. கண்ணாடிகள் நடுநிலையானவை, உயிருள்ளவை அற்றவை எவற்றையும் பாகுபாடின்றி பிரதிபலிக்கின்றன. அடுத்தது காட்டும் பளிங்கு போல் என்று தொடங்குகிறது ஒரு திருக்குறள். நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம் என்று முடிகிறது. 
கண்ணாடி முன் ஒத்திகை பார்த்துக் கொள்கின்றனர் மனிதர்கள், வேறு யாரோடோ நடத்த விரும்பும் உரையாடலை. கண்ணாடியிடம் தான் தீர்த்துக் கொள்கின்றனர் வேறெங்கோ தீர்க்க முடியாத ஒரு பழிவாங்குதலை. தன்னிடம் எதையும் வைத்துக் கொள்ளாமல் அவரவருக்கே எல்லாம் திருப்பித் தந்துவிடும் பெரிய மனம் படைத்திருக்கும் கண்ணாடியை நாம் நமது கவனமின்மையால், அலட்சியத்தால் அல்லது ஆத்திரத்தால் காயப்படுத்தி விடுகிறோம். அந்தப் பழியையும் தான் சுமந்து சுவரில் அடைக்கலமாகி இருக்கிறது கண்ணாடி. 
கண்ணாடிகள் நிரம்பிய இடம் காந்தமாக எல்லோரையும் ஈர்க்கிறது. இளவயதில் காஞ்சிபுரம் சென்றடைந்தபோது, அங்கே கோயிலில் கண்ணாடி அறை என்று ஓரிடத்தில் எழுதி வைத்திருந்தது பார்த்து, ஆர்வம் மேலோங்கியது. சுற்றுச் சுவர்கள் முழுவதும் கண்ணாடிகள் இருந்த அறை. காட்சிப்படுத்தலின் கூடுதல் சுவாரசியம் அது. என்டர் தி டிராகன் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி ஒரு கண்ணாடி அறைக்குள் தான் நிகழ்கிறது, அங்கே தான் நாயகனுக்கும் வில்லனுக்கும் இடையே கடைசி சண்டை. பிம்பங்களை வைத்து உண்மை முகத்தைக் கண்ணாமூச்சி ஆட்டத்தில் மறைக்கும் வில்லனைத் தேடித் தேடி அலையும் நாயகன், தத்துவப் பயிற்சியை நினைவு கூர்ந்து, பிம்பங்களை உடைத்து நொறுக்கி வில்லனைக் கண்டடைந்து கதையை முடிக்கிறான்.
படைப்புலகில் மிக முக்கிய பேசும் பொருள் கண்ணாடி. கதைகளில், கவிதைகளில், நாவல்களில் அதற்குத் தனியிடம் உண்டு.  திரைப்படங்களில் கண்ணாடி ஒரு முக்கியமான பாத்திரமாக உருவெடுக்கிறது. ‘பலே பாண்டியா’ திரைப்படத்தில் நடிகவேள் எம் ஆர் ராதாவுக்கு இரட்டை வேடங்கள். இரண்டு பாத்திரங்களும் ஒரே வீட்டில் கண்ணாடி இருக்குமிடத்தில் எதிரெதிர் சந்தித்துக் கொள்ளும் காட்சி மிகவும் சுவாரசியமானது.  ‘படிக்காதவன்’ படத்தில் ஊர் தெரியாத ஊரில் தன்னை தாதா என்று அறிவித்துக் கொண்டு உண்மையான தாதா வீட்டில் சிக்கிக் கொள்ளும் விவேக், தனது போதாத காலத்தை ஒரு கண்ணாடி முன் தான் கொட்டித் தீர்ப்பார். 

‘மாஸ்’ படத்தில் ஆவியுருவில் வரும் சூர்யா கண்ணாடியிலிருந்து தான் வெளியே வருகிறார். ‘சொல்லாமலே’ திரைப்படத்தில், காதலியிடம் ஊமையாய்த் தவறாகக் காட்டிக் கொண்டோமே என்று வருந்தும் நாயகன், நாவையே அறுத்துக் கொள்ள முற்படுகையில் கடைசியாகக் கண்ணாடி முன் நின்றுதான் கடைசியாகப் பேசிப் பார்த்துக் கொள்கிறார். லிவிங்ஸ்டன் அதை மிக உருக்கமாகச் செய்திருப்பார். 
நட்பு முறிவைத் தாங்காத மனத்தின் குமுறலான, ‘ஒரு நண்பனின் கதை இது’ என்ற சட்டம் படத்தின் பாடலில், ‘கண்ணாடி முன்னால் நின்று பார்த்தாலும் கூட என் விழி காண்பது அவன் முகம் என்று வாழ்ந்த…ஒரு நண்பனின் கதை இது’ என்ற இடத்தை எஸ் பி பாலசுப்பிரமணியம் அத்தனை நெகிழ்ச்சியுறப் பாடி இருப்பார். ஒருவரைப் பற்றிய பிம்பங்கள் நொறுங்கும்போது, கண்ணாடிகள் பாவம் என்ன செய்ய முடியும்!
பறக்கும் பாவை படத்தின், ‘யாரைத் தான் நம்புவதோ பேதை நெஞ்சம்’ என்று பி சுசீலா பாடும் பாடலில், ‘அழகைக் காட்டும் கண்ணாடி அறிவைக் காட்டக் கூடாதோ?’ என்று கேட்கிறார் கவிஞர் கண்ணதாசன். அறிவைக் காட்டும் கண்ணாடிகள் உண்டு. அவை புத்தகங்கள். அறிவை வளர்த்துக் கொள்ளும் தேடல் உள்ளோர், அறியாமையைக் கண்கொண்டு பார்த்துக் கொள்ள முடிகிறது. ஒவ்வொரு புதிய அறிதலும், ஒவ்வொரு பழைய அறியாமையை வெளியேற்றுகிறது. 

அண்மையில் வாசித்த ‘ கண்ணாடிக்குள் பாய்வது எப்படி?’ என்ற தலைப்பிலான கதிர்பாரதியின் கவிதையில், ‘உன்னை என்னை / நம்மை / ஒளியை இருளை / எதையும் / உள்நோக்கி / அனுமதிக்காமல் அனுமதித்து / வெளியேற்றாமல் வெளியேற்றுவது எப்படியென்று …..’ என வருகிற வரிகள் கவனிக்க வைக்கின்றன. 
எந்திரத்தனமான சந்தை உலகில் ஒரு விற்பனை பிரதிநிதி கிட்டத்தட்ட கண்ணாடி போல் தான் இயங்குகிறார். சட்டென்று புன்னகையோடு கை குலுக்கித் தனது பொருளை அவர் நம்மிடம் சந்தைப் படுத்தத் தொடங்கிய அதே வேகத்தில், நாம் மறுத்துவிடும்போது வேறொரு புன்னகையோடு கை குலுக்கி அடுத்த கைகளை நோக்கி நகர்கிறார். இலக்கு முடிக்கிறவரை அவர் அப்படித்தான் தன்னை நடத்திக் கொண்டாக வேண்டும். அதில் ஏற்படும் வெற்றியோ தோல்வியோ தமது சொந்தக் கண்ணாடி முன் நின்றுகொண்டு தான் பகிர்ந்து கொள்ள வேண்டி இருக்கும். 
கண்ணாடியைப் பளிச்சென்று துடைத்து வைப்பது ஒரு கலை. அதைத் துடைக்கும் ஒவ்வொரு முறையும், அதனுள் காணாமல் போய்விட்ட இளமைக் காலத்தைத் துருவித் துருவித் தேடுபவர்கள் இருக்கவே செய்கின்றனர். ‘இப்போதெல்லாம் / முகம் பார்க்கும் கண்ணாடியில் / ஒரு கிழவன் தெரிகிறான், யாரிவன்?’ என்று கேள்வி எழுப்பும் தோழர் சிபி ரவிசங்கரின் கவிதை,  ‘நேர் கோணத்தில் தான் பார்க்கிறேன் / யாரென்றே தெரியவில்லை, நான் அவனில்லை / அவனைப் போகச் சொல்லிவிட்டேன் / அவன் போகும்வரை / கண்ணாடியே / பார்க்கப் போவதில்லை ‘ என்று நிறைவு பெறுகிறது.
கண்ணாடியின் பிரச்சனை அது உண்மையாக இருக்கிறது. ஜனநாயகத் தன்மை பாதுகாக்கிறது. வெளிப்படையாக இயங்குகிறது. பின்னாலிருந்து குத்த வருபவரைக் குறித்து எச்சரிக்கை கூட செய்கிறது. கண்ணாடி, சொல்லப்போனால், சுவரில் இல்லை. வெவ்வேறு வண்ணச் சட்டங்களில் அடைப்பட்டுத் திணித்து வைத்துக் கொண்டிருக்கும் கைப்பைக்குள், கால் சராய்ப் பைக்குள் எங்கும் இல்லை கண்ணாடி. அது அவரவர் உள்ளே தான் இருக்கிறது. கண்ணாடியிடம் உண்மையாக இருப்பது, பொதுவெளியில் நேர்மையாக பிரதிபலிக்கிறது. பிம்பங்களைக் குறித்த கவலை அப்போது ஏற்படுவது இல்லை. எந்தக் கல்லடிக்கும் அஞ்சாத கண்ணாடியாக அப்போது தலை நிமிர்ந்து நடக்கத் தொடங்குகின்றனர் மனிதர்கள்.
நன்றி: வண்ணக்கதிர்: (தீக்கதிர் இணைப்பு): 17 10 2021

ReplyForward

News

Read Previous

வாசல் கோலம்

Read Next

ஈரோடு தமிழன்பன்

Leave a Reply

Your email address will not be published.