உறங்கும் போது வருவதல்ல; உறங்க விடாமல் செய்வது தான் கனவு: அப்துல் கலாம்

Vinkmag ad

நெய்வேலி: உறங்கும் போது வருவதல்ல கனவு. உறங்க விடாமல் செய்வது தான் கனவு என முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பேசினார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதாரமாக திகழும், என்.எல்.சி., நிறுவனத்தை முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், நேற்று பார்வையிட்டார். பின், டவுன்ஷிப் வட்டம் 11ல் உள்ள லிக்னைட் அரங்கத்தில், என்.எல்.சி., இன்ஜினியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

அதில் கலந்து கொண்டு, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பேசியதாவது: என்.எல்.சி., நிறுவனத்தை முதன் முறையாக பார்வையிடுகிறேன். நம் நாட்டின் பலமாக திகழும், மிகவும் சக்தி வாய்ந்த என்.எல்.சி., நிறுவனத்தில், தற்போது, 2,740 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப் படுகிறது.

2020ல் 15,000 மெகாவாட்: வரும், 2020ம் ஆண்டிற்குள், 15 ஆயிரம் மெகாவாட் மின்சாரம், இங்கு உற்பத்தி செய்யப்பட உள்ளது. என்.எல்.சி., நிறுவனம் வளர்ச்சியடைந்தால், தமிழகம் நிச்சயம் மின் பற்றாக்குறை இல்லாத மாநிலமாக திகழும். இந்தியாவில் எண்ணற்ற தொழிற்சாலைகள் உள்ளன. ஆனாலும், கடுமையான உழைப்பின் பலனாக, என்.எல்.சி., நிறுவனம், நவரத்னா அந்தஸ்தை பெற்றதற்காக பாராட்டுகிறேன். நெய்வேலியில், 18 லட்சம் மரங்கள் இருப்பது, ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது. சுத்தமான, பசுமையான நகரம், நெய்வேலி. கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பானது. உலகில், மூன்று முறை பூகம்பம் மற்றும் சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களால், அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில், அணுமின் நிலையங்கள் பாதிக்கப்பட்டன.

பிரச்னைகளை விரட்டுங்கள்: முன்பு, ஜப்பான் பாதித்தபோது, இரண்டு நகரங்கள் அழிந்தன. சமீபத்தில் ஜப்பானை சுனாமி தாக்கிய போது, உயிரிழப்புகள் ஏற்படவில்லை. கதிர்வீச்சு கசிவும் ஏற்படவில்லை. உலகில் தொழில் நுட்பங்கள் வளர்ந்து விட்டது. எப்போதும் பிரச்னைகள் நம்மை கட்டுப்படுத்தக் கூடாது. பிரச்னைகளுக்கு நாம் தான் தலைமை தாங்கி, அதை விரட்ட வேண்டும். நம் நாடு, 2020ம் ஆண்டில் வல்லரசாகும். நதிகள் இணைக்கப்படும் போது, மாநிலங்களுக்குள் பிரச்னைகள் வராது. இந்தியாவில் உள்ள 600 மில்லியன் இளைஞர்கள் தான், நம் நாட்டின் மிகப் பெரிய பலமாக திகழ்கின்றனர்.

புத்தகம் படியுங்கள்: வீடுகள் தோறும், சிறு நூலகம் இருக்க வேண்டும். “டிவி’ பார்ப்பதை தவிர்த்து, நல்ல புத்தகங்களை படிக்கும் போது, அறிவு வளர்ச்சி மேலோங்கும். குறைந்தபட்சம் பிள்ளைகள் கேட்கும் கேள்விகளுக்காவது, பதில் சொல்ல வேண்டும் என்பதற்காக, அவ்வப்போது புத்தகங்களை படித்த, கதிரேசன் என்ற எனது கார் ஓட்டுனர், பேராசிரியாராகி விட்டார். எனவே நல்ல புத்தகங்களை படிக்க வேண்டும். தோல்விகளை தோல்வியடைய செய்ய வேண்டும். தோல்வி இல்லாமல் வெற்றி இல்லை. உறங்கும் போது வருவதல்ல கனவு. உறங்க விடாமல் செய்வது தான் கனவு. இவ்வாறு, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசினார்.

ஊழலை ஒழிக்க வழி: முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பேசும் போது, “ஊழலை ஒழித்தால் நம் நாடு வல்லரசாகும். ஒவ்வொரு வீட்டிலும் உள்ள பிள்ளைகள் தங்களது அப்பா அல்லது அம்மா லஞ்சம் வாங்கினால், அவர்களை கடுமையாக திட்டி கண்டிக்க வேண்டும். பெற்ற பிள்ளைகள் கண்டிப்பதை விட, அந்த பெற்றோருக்கு வேறு அவமானம் இருக்க முடியாது. ஒவ்வொரு வீட்டிலும் லஞ்சம் வாங்குவதை தடுக்கும் பட்சத்தில், நம் நாட்டில் மிக விரைவில் லஞ்ச, ஊழல்கள் முற்றிலுமாக ஒழிக்கப்படும்,’ என்றார்.

News

Read Previous

துபாயில் தெலுங்கு அமைப்பு சார்பில் ரத்த தான முகாம்

Read Next

துபாய் த‌மிழ்ச் ச‌ங்க‌த்தின் குடும்ப‌ தின‌ விழாவில் க‌ல‌க்க‌ல் குடும்ப‌ம் 2012

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *