உங்களுக்குத் தெரியாது தானே?!

Vinkmag ad

உங்களுக்குத் தெரியாது தானே?!

— நா.முத்துநிலவன்

republic parade.jpg
உங்களுக்குத் தெரியாது தானே?!
அன்னை வேலுநாச்சியை மட்டுமல்ல
ஆதித் தமிழர்களின் அன்பு வரலாறே
உங்களுக்குத் தெரியாதுதானே?!

நீங்கள் வந்தேறு முன்பே
அரப்பா, மொகஞ்சதாரோ
அமைத்திருந்த சமூக வரலாறு
உங்களுக்குத் தெரியாதுதானே?!

நீங்கள் முட்டுக் கொடுக்கும் மொழிக்கு
மூவாயிரம் ஆண்டுக்கு முன்பிருந்தே
வரலாறு படைத்திருந்த தமிழ் வரலாறு
உங்களுக்குத் தெரியாதுதானே?!

பேயரசு செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள்
என்று முழங்கிய எங்கள் தேசியக் கவியை
உங்களுக்குத் தெரிந்திருக்க
ஒருக்காலும் நியாயமில்லைதான்!

கணவனை இழந்தவளைக்
கம்மனாட்டி என முடக்கும் ஈன சாத்திரம் உங்களது!
குதிரையேறி வாளேந்தி பகைமுடித்த
வேலுநாச்சியாரின் வீர சரித்திரம் எப்படி அறிவீர்கள்?

சகோதரருக்குள் சண்டை மூட்டவே
முருங்கை மரமேறும் உங்களுக்கு,
நாட்டுக்காகத் தூக்குமரம் ஏறிய எங்கள் மருது
சகோதரரை எப்படித் தெரிந்திருக்க முடியும்?

மன்னிப்பு கேட்டவனின் மகத்தான வாரிசுகளுக்கு
இரட்டை ஆயுள் தண்டனை பெற்று,
செக்கிழுத்த எங்கள் சிதம்பரத் தியாகியை
தெரிந்திருக்காததும் சரிதானே?

வெளிப்படையாகவே ராணுவத்தை
விற்கும் உங்களுக்கு,
ரகசிய ராணுவம் கட்டிய நேதாஜியைத்
தெரிந்திருக்குமா என்ன?

சீர்திருத்தம் என்றாலே செவிமூடும் உங்களுக்கு
நாராயண குருவைத் தெரியாமல் போனதும்
நல்லது தானே?
மனிதரைப் பிரித்தாளும் மனுதர்மவாதிகளுக்கு,
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் எனும்
எங்கள் குறளறம் தெரிந்திருக்க
இதயம் வேண்டுமல்லவா?

பெரியார் சிலையை உடைத்தீர்கள்!
வள்ளுவருக்கு காவி அடித்தீர்கள்!
இப்போது – தெற்கின் மீது வடக்கில்
வெறுப்பை விதைக்கப் பார்க்கிறீர்கள்!

குடியரசு தினக் கொண்டாட்டமே
அனைத்து மாநிலமும் அன்பால் இணையும்
பன்முகப் பண்பாடுதான் என்பதை மறைக்கவே
எங்களை மறுக்கிறீர் என்பது புரிந்துவிட்டது

சரி,
உங்கள் ராஜபாட்டையில்
நீங்களே நடந்து கொள்ளுங்கள்!
தமிழரின் சரித்திரம் ஒற்றுமை சார்ந்தது
மக்களைப் பிரிக்கும் உங்களோடு சேர்ந்து நடக்க,
நாங்கள் தகுதியற்றுப் போனதால்,
இனி, தரணி முழுவதும்
எங்கள் தமிழ் உலா நடக்கும்!

-நா.முத்துநிலவன்
|www.nakkheeran.in

News

Read Previous

முதுகுளத்தூரில் இந்திய குடியரசு தின விழா

Read Next

இளையான்குடி வெற்றிப்படி அகடமி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *