ஸபர் மாதம்

Vinkmag ad

ஏன் அண்ணா? ஸபர் மாதம் பீடையாமே?

எல்லோரும் சொல்கின்றார்; உண்மைதானா?

வாணுலகும் மண்ணுலகும் போற்ற வாழ்ந்த

வள்ளல் நபி பெருமானார் இந்த மாதம்

நோய் கண்டு நலங்குன்றி யிருந்த தாலே

நோய் மாதம் என்று சிலர் சொல்லக் கேள்வி !

ஆதாரம் உள்ளதா? அண்ணா; கொஞ்சம்

அறிந்தெனக்குச் சொல்லுங்கள் என்றாள் தங்கை !

 

மாதத்தில் பீடையேதும் இல்லை யம்மா !

மனதில் தான் பீடையெனச் சொல்வேன்; எந்த

வேதத்தில் இருக்கிறது பீடையென்று

விவரிக்க முடியுமா…? விபரம் கேட்டேன் !

பேதமையால் இப்படித்தான் திசைகள் மாறி

பெருங்குழப்பமடைகின்றார்; மக்கள் எல்லாம் !

ஏது வழி என்ன விடை யென்றால்; இங்கே

இருக்கிறது நல்ல பதில் என்று சொல்வென் !

 

பகுத்தறிவுப் பாசறையாம் இஸ்லாம் மார்க்கம்

பாரினிலே தழைத்தோங்கும் இந்த நாளில்

புகுத்துகிறார் பித் அத்தை; சமுதாயத்தில்

புரியாதோர் பொய்வழியில் போகின்றாரே…!

நகம் வெட்டும் வகை கூட சொல்லி யிந்த

நாடாளும் திறமெல்லாம் நாவினிக்க

வகைவகையாய் சொல்லுகின்ற தீனுக்குள்ளே

வந்ததுதான் யெப்போது இந்த பித்அத் !

 

பெருமானார் திருமகனார் பாத்திமாவை

பெருவீரர் அலியார் மணந்ததிந்த

திருமாத ஸபரில்தான்; மறந்தாபோனாய்

செப்புவாய் ஸபரென்ன பீடைதானா…?

அருள்மாதம் ரபியுல் ஆகிர் தன்னில் (முஹியித்தீன்)

அப்துல் காதர் ஜீலானி வபாத் தானார் !

பெருமாத ஜமாஅதுல் ஆகிரிலே நம்

பேர் பெற்ற நாகூர் ஆண்டகை வபாத்து !

 

குறை மாதம் இதுவெனக் கொள்ளலாமா…?

குழப்பத்தில் ஏதேதோ பிதற்றலாமா…?

ரஜப் மாதம் ஹஜரத் காஜா முகியிதீன்

சிஸ்தியெனும் பெரியார் வபாத்தானார் !

அதற்காக அம்மாதம் பீடையென்றா

அர்த்தம் நாம் கொள்ளுவது? தவறே யன்றோ !

நாளெல்லாம் நன்னாளே நபிகள் சொன்னார் !

நல்லமலை வாழ்க்கையிலே நிறைக்கச் சொன்னார் !

 

திருமறையும் திருநபியும் காட்டி நிற்கும்

திருநெறிதான் வாழ்க்கை நெறி தெரிந்து கொள்வாய் !

News

Read Previous

அஹமது இம்தாதுல்லாவுக்கு பெண் குழந்தை

Read Next

முதுகுளத்தூர் பள்ளிகளில் விலையில்லா மடிக்கணினி வழங்கல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *