வீடு…

Vinkmag ad

வீடு…

ஆக..
முகமூடிகள் கழற்றி
நம் முகம் பார்த்தேயாக வேண்டும் நாம்.

நம் அம்மா அப்பா மடிகளில்
துள்ளிக் களிக்கவில்லை நம் சிசுக்கள்..
அவர்தம் மார்பினில் முகம் புதைத்து
சிரிப்போ அழுகையோ காட்டவுமில்லை.

கேள்விகள் கேட்கிற குழந்தையிடம்
தொல்லை செய்யாதேயென்று அதட்டிவிட்டு
“குழந்தையை வளர்ப்பது எப்படி” யென்று
புத்தகத்திடம் கேட்டுக் கொண்டிருந்தோம்.

நாம் சிரிக்கையினில் நம் கட்டிடத்தின்
எந்தவொரு ஜன்னலும் நம்மோடு சிரிக்கவில்லை.
நாம் சிந்திய கண்ணீருக்காய்
நம் கட்டிட சுவர்கள் நம்மோடு அழவேயில்லை.

மாதம் ஒருமுறையேனும்
எனைப்பார்த்து சிரிக்கும்
என் பக்கத்து வீட்டுக்காரனிடம்
வருடத்திற்கொருமுறை மட்டும்
வெறுமே சிரிக்கையினில்
இந்த முறையேனும் கேட்டிருக்கலாம்
உங்கள் பெயர் என்னவென்று..

வெறுமே புத்தகங்கள் கடித்து விழுங்கி விடைத்தாள்களில் வாந்தியெடுத்தநம்பிள்ளைகள்
தொண்ணூறுகள் நூறுகளென்று
சோர்ந்து வருகையினில்
இன்னும் வேண்டுமென்று
விரட்டுகிறோம் நாம்.

டெம்பிள்களில் ரன்னி ரன்னி
புள்ளிகள் குவிக்கும் நம் வாரிசுகளால்
புளகாங்கிதப் படுகிறது நம் மனது.

கதவுகள் ஜன்னல்கள் தாழிட்டடைத்து
மழைமறுத்து முடங்கிப் போகையினில்
உள்ளே எங்கோ விசும்பி அழுகிறது
முற்றம் திறந்த மழையினில்
காகிதக் கப்பல் விட்டுக்களித்த
பால்யகால நினைவுகள்…

ஊரே கூடி அமர்ந்து பங்கிட்டுண்ட
நிலாச்சோறின் மிச்சம்
இன்னும் இனிக்கிறது
பல்மருத்துவர் பறித்ததுபோக
மிச்சமிருந்த பல்லிடுக்குகளில்..

ரெண்டு வீடு தள்ளியிருக்கறவன் செத்துப்போனா
நான் ஏன் லீவு போடணும் என்கிறது
இரும்பாகிப்போன இதயம்.

தலைதெறிக்கிற ஓட்டத்தினில்
போகிற வழியில்
பணம் பொறுக்கிப் பணம் பொறுக்கி
வேறென்ன செய்துவிடப் போகிறோம் நாம்
நாம் பெற்ற செல்வங்களை
பணம் காய்ச்சி மரங்களாய்
மாற்றுவது தவிர…

முகநூல் வாட்ஸ்ஆப்பென்று
நாம் உயிரோடிருக்கும் இவ்வுலகம்
கைக்குள் சுருங்கியதாய் ஆடுகையினில்
நம் அண்டை அயலார் சொந்தமெல்லாம்
செவ்வாய்க்கும் புளூட்டோவுக்கும்
குடிமாறின கதை மறந்தோம்.

உயிரோடுதானிருக்கிறோம்
எப்போது தொடங்குவோம்
வாழ்வதற்கு…

வெட்கம்.. வெட்கம்..

உயிரோடு மட்டுமேயிருப்பதை
வாழ்க்கையென்றும்
நாம் குடியிருக்கும் கட்டிடத்தினை
நம் வீடென்றும் சொல்லிக் கொள்கிறோம்.

-கி.பால்ராஜ்.

News

Read Previous

தையல் தொழிலுக்கு பெருகும் தேவைகள்: வீட்டிலே இருந்தவாறே சம்பாதிக்கலாம்…

Read Next

அஹமது இம்தாதுல்லாவுக்கு பெண் குழந்தை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *