விவேக் என்றொரு சிரிப்பு வேந்தன்

Vinkmag ad

விவேக் என்றொரு சிரிப்பு வேந்தன்.
_____________________________________ ருத்ரா

வெறும் மரங்களாக நின்ற‌
இவர் நட்ட அந்த‌
மரங்கள் எல்லாம்
இப்போது
உணர்வு பெற்று உருக்கத்துடன்
கேட்கின்றன.
“உங்கள் நகைச்சுவையே
எங்களிடம் கவிந்திருக்கும்
பசுமைக்குடை.
அதை மடக்கி வைத்து விடாதீர்கள்.
எங்கள் பூக்களின் மூச்சுகள்
எல்லாம் உங்களுக்கு
அரண்.
முரண் செய்யும் காலதேவன்
உங்கள் காமெடிகள் கிச்சு கிச்சு மூட்டுவதில்
கல கலத்துப்போவான்.
தன் கெடு கலைந்த அலாரமும்
வாய் பொத்திக்கொள்ளும்.
மீண்டும்
சிரிக்க வைப்பீர்கள்.
ஆமாம் விவேக் அவர்களே
மீண்டும் சிரிக்க வைப்பீர்கள்.
“ஏண்டா!
மைல்கல்லில் துணி சுத்திக்கிடந்தாலும்
அதையும் மாரியம்மனாக்கி
கெடா வெட்டக்கிளம்பிடுறீங்களடா!
ஒரு பெரியார் இல்லை
நூறு பெரியார் பிறந்தாலும்
நீங்க திருந்த மாட்டீங்களாடா?…”
இந்த காமெடியை மறக்கவே முடியாது.
அப்புறம் ஒரு தடவை
“சன் டிவிக்கு ஏதுடா சன்டே?”
என்று நீங்கள் ஒரு போடு போட்டதில்
அந்த அரங்கத்துக்கே மொத்தமும்
பல் சுளுக்கிக்கொண்டது.

விவேக் அவர்களே!
நீங்கள் கோடிக்கணக்கான
மரக்கன்றுகளை நட்டு வைத்திருக்கிறீர்கள்.
அத்தனையும்
அந்த நீல வானத்தைநோக்கி
ஊசிக்கேள்விகளை வீசியெறிந்து
ஊசிப்போய்க்கொண்டிருக்கிற‌
நம் சமுதாயத்தை செம்மைப்படுத்தும்
பெரியார்கள் தான்.
உங்களை
சின்னக்கலைவாணர் என்கிறார்கள்.
பெரிய கலைவாணர்  அங்கிருந்து
சிரித்து சிரித்துக் குதித்து
இங்கே வந்து விடுவார்
உங்கள் காமெடியை
நேரில் ரசிக்க!
எழுந்து வாருங்கள்
“நகை”ச்சூரியனே!

__________________________________________
(16.04.2021 நள்ளிரவு தாண்டி
அதிகாலை 01 மணிக்கு எழுதப்பட்டது)

பின்குறிப்பு

17.04.2021 காலை டிவி செய்தி
எல்லாவற்றையும் போட்டு உடைத்து விட்டது.
அந்த அலாரக்கடிகாரம் உட்பட.
ஆம்.
அவன் சிரிப்புக் கலைக்கு
ஏது மரணம்?
வாய்விட்டு சிரிக்க வைத்த‌
அந்த சிரிப்பு வேந்தன்’
இப்பவும் இப்படித்தான் சொல்லியிருப்பான்.
உங்கள் அழுகையை நான்
பார்க்க வேண்டாம் என்று
எனக்கு உதவிக்கு வந்த‌
அந்த “முக கவசத்தை”
நீங்கள் விட்டு விடாதீர்கள்.
பை..வரட்டுமா?
அது சரி!
எனக்கு வரப்போகிற அந்த‌
கொரோனாவிற்கு போட்ட‌
தடுப்பூசி வீண்தானா?

வேணும்னா அந்த எருமை வாகனன்கிட்ட‌
பெர்மிஷன் வாங்கிவிட்டு
மறுபடியும் கீழே வர்ரேன்.
பாருங்கள் அந்த தடுப்பூசி கூட‌
சிரிக்கிறது.
அரங்கம் தோறும் இனி என் எதிரொலி தான்.
வருகிறேன்.
நன்றி!

________________________________________
ருத்ரா

News

Read Previous

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் விவேக்

Read Next

சின்னக் கலைவாணரே …………

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *