மதுரை அமெரிக்கன் கல்லூரியில் விவேக்

Vinkmag ad
#அமெரிக்கன்கல்லூரியில்
#விவேக்
#துள்ளித்திரிந்த_காலம் !
அமெரிக்கன் காலேஜ் …
பிரிட்டிஷ் காலம் முதல் பிரிட்னி ஸ்பியர்ஸ் காலம் வரை ஒரு செஞ்சுரி பார்த்துவிட்ட கல்லூரி .
இந்தப் பெயரைக் கேட்டதும் நான் ஹார்லிக்ஸ் குடிச்ச பையன் மாதிரி ஜாலியாகிடுவேன். ஏன்னா,  இது என் காலேஜ் !
மதுரை டி.வி.எஸ் ஸ்கூலில் பட்டப்படிப்பை முடிச்சுட்டு … ஸாரி பள்ளிப் படிப்பை முடிச்சுட்டு,  முதன்முதலா காலேஜ் காம்பௌண்டுக்குள் அம்மாவின் கையைப் பிடிச்சுக்கிட்டே நுழையறேன்.  அப்போ பிரின்சி பேரு எம்.ஏ. தங்கராஜ் , எம்.ஏ. பிஹெச்.டி . ( டொரன்டொ) . நம்ம விஜிபி அண்ணாச்சி மாதிரி எப்பவும் கோட் சூட்டோடதான் இருப்பார் . ரொம்பக் கண்டிப்பு.
‘ என்ன தம்பி , நீ மட்டும் வந்திருக்கே …. அட்மிஷனுக்கு உன் அண்ணன் வரலியா ? ‘ன்னாரு .
அப்பத்தான் நான் என்னையே குனிஞ்சு குரோக்கடைல் பார்க்கை பாக்கிற மாதிரி பார்த்தேன் . அடக் கடவுளே நான் அரை டவுசர் அல்லவா போட்டிருக்கேன்.
‘ஸாரி சார் , பேன்ட் தைக்கக் குடுத்திருக்கேன்.இன்னும் கிடைக்கலை’ என்றேன் .
  சிரித்துக்கொண்டே ஸீட் கொடுத்தார். அது எவ்வளவு பெரிய தவறு  என்று  பின்பு புரிந்து கொண்டிருப்பார் . அரை டவுசரில் இருந்து பேன்ட்டுக்கு  மாறி , பின்பு சாதா பெல்ஸில் இருந்து,  ஜிப் வெச்ச எலிஃபென்ட் பெல்பாட்டம் வரை போட்டு மதுரை வீதிகளை நான் சுத்தப்படுத்தியது வரலாற்றில் மறைக்கப்பட்ட உண்மைகள்.
டாப் ஆங்கிள்ல இருந்து எங்க காலேஜைப் பார்த்தீங்கன்னா, ஒரு ரெண்டு கிலோ மீட்டர் நீள அகலத்துல ஒரு பச்சை ஜமுக்காளத்தை வைகை ஆற்றில் அலசிக் காயப்போட்ட மாதிரி அவ்ளோ அழகாத் தெரியும் . ஊருக்கு நடுவுல, அது அதிரடிப்படை இல்லாத வீரப்பன் காடு . காட்டுக்குள்ளே பிரிட்டிஷ் பெருமை பேசற  ரெட் ஃபோர்ட் மாதிரி செங்கல் கட்டடங்கள் .
ஒவ்வொரு டிபார்ட்மென்ட்டுக்கும் தனித்தனி  பில்டிங் . இங்கிலீஷ்னா ஃப்ளிண்ட்  ஹவுஸ் , பாட்டனினா பிங்ஹாம்டன் ஹால் , கெமிஸ்ட்ரினா ஜேம்ஸ் ஹால்னு . பிரிச்சுவெச்சிருப்பாங்க .
காலேஜ்ல சேர்ற முதல் நாள் எல்லாரையும் கேம்பஸ் டூர்னு ஒரு
சுற்றுலாவே கூட்டிட்டுப் போய் அத்தனை இடங்களையும் அறிமுகப்படுத்தி வைப்பாங்க . அவ்வளவு பெரிய கேம்பஸ்.
எங்க கல்லூரியைப் பற்றிப் பெருமையா சொல்லிக்கற விஷயங்கள்ல எனக்குப் பிடிச்சது எங்க பேராசிரியர்களோட  கனிவும் கம்பீரமும் .
முதல்லயே சொல்லிடுவாங்க .. ‘நண்பா … இந்த காலேஜ்ல நீ படிக்கிறதுக்கு நிறைய விஷயம் இருக்கு .அதைவிட முக்கியம், நீ கத்துக்கிட  நல்ல விஷயங்கள் இருக்கும்பாங்க . படிக்கிறதுக்கும் கத்துக்கிடறதுக்கும் எவ்ளோ பெரிய வித்தியாசம் இருக்கு என்பது அந்த மூணு வருஷத்துல புரிஞ்சுபோகும்.
அதேபோல நீங்க யாரோ ஒரு பேராசிரியரோட க்ளாஸுக்கு போகாம கட் அடிக்கிறீங்கன்னா, பொதுவா அந்த குற்ற உணர்ச்சி உங்களுக்கு இருக்கும்தானே. எங்க காலேஜ்ல அது அப்படியே ரிவர்ஸ் .
‘ ஒரு பையன் என் க்ளாஸை மிஸ் பண்றான்னா, நான் போரடிக்கிறேன்னு அர்த்தம் . என் க்ளாஸ் நல்லா இருந்ததுனா, அதுல இருந்தவன் போய் க்ளாஸ்க்கு வராத தன் நண்பனிடம்  ‘ டேய் சூப்பர் கிளாஸ்டா… மிஸ் பண்ணிட்டியேடா’னு சொல்லி, அடுத்த நாள் கட் அடிச்ச பையன் ஆர்வமாகி அவனே வரணும். அதனால நான்தாம்பா இன்னும் ஹோம்வொர்க் பண்ணணும்’னு சொல்வாங்க .
பேரே அமெரிக்கன் காலேஜ்ங்கிறதால, நாங்க ஏதோ அமெரிக்காவுலயே படிக்கிற மாதிரி ஒரு வெஸ்டர்ன் ஃபீலோட அலைவோம்.
எங்க காலேஜ்ல என்ன விசேஷம்னா, ஹைகோர்ட் ஜட்ஜ் மகனும் படிப்பான். கருமாத்தூர் விவசாயி  மகனும் படிப்பான்.  தினம் ஒரு கார்ல வர்றவனும் உண்டு. வருஷம் பூரா நடந்து வர்றவனும் உண்டு . அதனால நாட்டுப்புறப் பாட்டுலேருந்து வெஸ்டர்ன் மியூஸிக் வரை வெரைட்டியா வெளுப்பானுங்க . ஒருத்தன்  தவிலைத் தட்டிட்டு இருப்பான். இன்னொருத்தான் கிடாரைப் பின்னிட்டிருப்பான். ஆனா சாதி , மதம், இனம், பணம்னு எந்த வித்தியாசமும் இல்லாம அத்தனை பேரும் ஒரே தம் அடிச்சிட்டு, ஒரே டிபன்பாக்ஸைக் காலி பண்ணிட்டு, ஒரே ஃபிகருக்காக ஜொள்ளு விட்டுக்கிட்டு ‘ லகான் கிரிக்கெட் டீம் மாதிரி தாய்புள்ளையாப் பழகுவானுங்க !
பிரமாதமான லைப்ரரி, அழகும் அமைதியுமா ஒரு சேப்பல், காதல் தேசம் ஏரியா மாதிரி அமர்க்களமா ஒரு சூழல், கண்ணுக்கு அழகா கலர் கலரா பூக்கிற மரங்கள், எந்தநேரமும் கேட்டுக்கு உள்ளே அஞ்சு டிகிரி டெம்பரேச்சர் குறைஞ்சு இருக்கும்படியா ஒரு குளுமைனு நிஜமாவே ஒரு கனவுப்பிரதேசம் எங்க அமெரிக்கன் காலேஜ் !
78com59 – இதுதான் பி.காம் படிக்கும்போது என் ரோல் நம்பர். வெந்ததைத் தின்னுட்டு வீதியெல்லாம் அலைஞ்ச நாட்கள். கவியரசு வார்த்தைகளில் சொல்வதென்றால் ‘இருக்கையில் இருக்கையிலேயே இறக்கை முளைத்த நாட்கள்’. ஆசிரியரும் மாணவரும் நண்பர்களாகப் பழகும் வளாகம் அது.
 D.J  எங்களுக்கு புக் – கீப்பிங் எடுத்தாராம் . D.G.R எங்களுக்கு மார்க்கெட்டிங் எடுத்தாராம் . மல்லிகார்ஜுன் எக்கனாமிக்ஸ் எடுத்தாராம் . ‘ என்ன எடுத்தாராம் ? அப்படீன்னா உனக்குத் தெரியாதா என்று கேட்கிறீர்களா? ஸாரி ! அப்பல்லாம் கொஞ்சம் கண்ணசந்த நண்பர்களில் அடியேனும் ஒருவன் . அதிலும் இந்த ‘எக்கனாமிக்ஸ்’ இருக்கிறதே … அதில் என்ன மிக்ஸ் ஆச்சோ தெரியலை. பொங்கல் சாப்பிட்டதும் ஒருவித மந்தார மயக்க நிலை ஏற்படுமே … அது ஏற்படும் . அந்த தருணங்களில் ‘ பிளேடு கச்சேரி’ செய்து கலகலப்பூட்டுவேன் .
கமல், ரஜினி, அமிதாப் படங்கள் எங்களுக்கு தீபாவளி , பொங்கல் மாதிரி. க்ளாஸைப் புறக்கணித்து தியேட்டர்களுக்கு ஓடுவோம். அப்படி ‘ மாஸ்கட்’ முறையில் நாங்கள் பார்த்ததுதான் ‘வறுமையின் நிறம் சிவப்பு’. அதன் இயக்குநர்தான் பின்னாளில் என்னை இயக்கப்போகிறார் என்பது அப்போது தமிழ்நாட்டுக்குத் தெரிந்திருக்கவில்லை.
‘ஷோலே’ பார்த்து  ‘கப்பர்சிங் ‘ கேரக்டரை அப்படியே காமெடியாக உல்டா பண்ணி ‘ ரப்பர் சிங் ‘ நாடகமெல்லாம் போட்டிருக்கிறேன் . அப்போ  என்னோட படிச்ச நடிச்ச மீனாட்சிசுந்தரம், இப்போ திருத்துறைப் பூண்டியில்
சப் – ரிஜிஸ்திராராக உள்ளான் . மனோகரன், தல்லாகுளம் பேங்க்கில் இருக்கிறான் .  ஹாஸ்டலில் ஒரு நாள் அந்த ‘ xXx ‘ சம்பவம் நடந்துவிட்டது . ஆம் … XXX ரம்மை முதன்முதலாக குப்பியில் பாட்டில் மூடியில் ஊற்றி ராவாக அடித்தோம் . ‘அப்ப நான் வரேண்டா ‘ என்று ஜன்னலைத் திறந்து வீட்டுக்குப் போக எத்தனித்திருக்கிறேன். எனக்கு  ஊற்றிக் கொடுத்த கலைச்செல்வன் , இன்று மதுரையில் ‘ ரெப் ‘ . அதைப் பார்த்து ரசித்த பாஸ்கர், இன்று சென்னை ராமகிருஷ்ணா பள்ளியில் டீச்சர் .
மதுரை பாண்டியன் ஓட்டலில், ஃபேன்ஸி டிரெஸ் காம்படிஷன். கல்லூரி சார்பில் எங்கள் கேங் சென்றது . ‘பெண் வேடம் போடலாம்’ என்று திடீரென்று முடிவாக … அங்கேயே பாத்ரூம் சென்று மீசையைத் தியாகம் செய்தேன் . புடவை , ஜாக்கெட் , உள்பாவாடை என்று பசங்க உபகரணங்களை ரெடி பண்ண … பெண்ணாக மாறினேன் . கண்ணாடி முன் பார்த்தபோது ஆஹா… முக்கியமானது மிஸ்ஸாகி இருப்பது தெரிய, உடனே ஒரு ஐடியா . அன்று பாண்டியன் ஓட்டலில் ரெண்டு டர்க்கி டவல்கள் காணாமல்போயின . புரிஞ்சவங்க புரிஞ்சுக்குங்க… புரியாதவங்க புரிஞ்சவங்ககிட்டே கேட்டுத் தெரிஞ்சுக்குங்க!
இவ்வாறாக தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விவேக், ஓடி , ஆடி பல சேட்டைகள் சில்மிஷங்கள் செய்துகொண்டிருந்த காலத்தே , விதிதேவன் அவனை சவுக்கால் அடித்தான் . அந்தச் சவுக்கின் பெயர்தான் பேராசிரியர் சுதானந்தா.
கல்லூரி ஆண்டுவிழா. நாடகம் எழுதும் பொறுப்பு எனக்கு. எழுதிக் குவித்த… படித்தபோது பலர் ரசித்துச் சிரித்த… முப்பது பக்கங்களை … வெறும் பத்து பக்கங்களாகத் திருத்திச் சுருக்கினார் சுதானந்தா. பாத்திரத்தை மீறிய வசனங்களைத் துண்டாடினார் . ஒத்திகை என்ற பெயரில் எங்களை ஒத்தைக்கு ஒத்தை பார்த்தார் . கடனே என்று கடுப்புடன் உடன்பட்டோம் .
ஆனால் , மேடையேறிய நாடகம் வெற்றிமாலை சூடியது. அரங்கமே கைதட்டலால் ஆடியது. என் அகந்தையும் என்னைவிட்டு ஓடியது. நான் , ராம்தாஸ் , முகில் , கலை , நியூட்டன் , மனோ , ஜோசப் ஆகியோர் நடிகர்கள் ஆனது அந்த பொன்னான தருணத்தில்தான்.
அதன் பிறகு என் யூத் டிபார்ட்மென்ட்டை படிப்பு , நடிப்பு என்று பிரித்தேன் . எனக்கு வந்த பதினாறு லவ் லெட்டர்களை ( பெயர் சொல்ல மாட்டேன்.அந்த சகோதரிகள் எங்கிருந்தாலும் வாழ்க ! ) கிழித்துப்போட்டேன்.
புரொபசர் வசந்தனின் ஷேக்ஸ்பியரிலும் , Curtain Clubலும் நாடக வடிவம் தெரிந்துகொண்டேன் . சாலமன் பாப்பையாவிடம் பப்ளிக் ஸ்பீக்கிங் க்ளாஸ் மாணவனானேன் . காந்தி மியூசியத்தில் காலைத் தூக்கினேன் . ஆம், யோகா கிளாஸ் . கல்யாணி ராமசந்திரனிடம் பரதம் பயின்றேன் .
காலங்கள் உருண்டோடின . கன்னத்தில் உருண்ட கண்ணீருடன் கல்லூரிவிட்டு வெளிவந்தேன் . படிப்பு முடிந்துவிட்டிருக்கலாம் … ஆனால் , என் பந்தம் இன்னும் முடியவில்லை. தொடர்கிறது . இப்போதும் மதுரை செல்லும்போதெல்லாம் என் கல்லூரிக்குள் எட்டிப்பார்ப்பேன் . நான் நேசித்த மரங்களைத் தட்டிப்பார்ப்பேன் . நான் படித்த க்ளாஸ் ரூமில் உட்கார்ந்து பார்ப்பேன் . சுதானந்தாவைத் தேடுவேன் . சேப்பலில் சென்று பியோனோவைத் தடவிப்பார்ப்பேன் . ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவிடம் கேட்கிறேன்… டேப்ரிக்கார்டரில் rewind பட்டன் இருக்கிற மாதிரி கல்லூரி வாழ்க்கைக்கும் ஒரு rewind பட்டன் தாருமய்யா!

News

Read Previous

ஆங்கிலம் கற்க அருமையான இணையதளங்கள்

Read Next

விவேக் என்றொரு சிரிப்பு வேந்தன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *