வசந்தகாலம்

Vinkmag ad

வசந்தகாலம்
——————–
அறுபத்து மூன்றாண்டு காலம்….
பூமிப்பந்து தனது புனிதத்தைப்
புதுப்பித்துக் கொண்ட காலம்…

இருபத்து மூன்றாண்டு காலம் ….
மறுமை நாள் வரை
நீளும் நிமிடங்களின் நெறிமுறைகள்
நிறைவு செய்யப்பட்ட காலம்…

பக்கத்து வீட்டுக்காரன்
புசிக்காமல் பசித்திருக்க
தான் மட்டும் உண்ணுபவன்
தர்மம் தவறியவன் என்னும்
ஒற்றை வாக்கியத்தால்
பட்டினிக்கு முற்று வைத்த
பெரு மகனார் வாழ்ந்த காலம்!

வருமானத்தில் இரண்டரை சதவிகிதம்
வறியவர்க்கு வழங்க வேண்டும்….
வரியாக….விதியாக….
வள்ளல் நபிகளாரின் சட்ட ஏடுகள்
வறுமைக் கோடுகளை
இல்லாமல் ஆக்கிய இனிய காலம்…
எல்லோரும் வாழ கனிந்த காலம்….

பூவையர்க்கும் சொத்தில் பங்களித்து
பூத்துக் குலுங்கியது சமதர்மம்……
கருணை நபியின் கட்டளையால்
காரிருள் மறைந்த கதிரவ காலம்…..

விதவைப் பெண்களின் மறுவாழ்வு ..
விதைக்கப்பட்டது பெண்ணுரிமை……
உதிர்ந்த இலைகள் மீண்டும்
ஒட்டிக்கொண்டது கிளைகளுடன்…
அமைதியின் மடியில் மனித சமூகம்
ஆஹா அழகிய வசந்த காலம்….

வட்டியும்,மதுவும்,கொலையும் ,களவும்
ஓடி ஒளிந்த உன்னத காலம்….
நிற இன பேதம் நீர்த்துப் போக
ஓரிறை வணக்கம் ஓங்கிய காலம்…

அண்ணல் நபி நாயகத்தை
அகிலத்தின் அருட்கொடையாய்
அல்லாஹ் அறிமுகம் செய்த
அற்புதம் நிறைந்த அருள் நிறைக் காலம்…

புவியின் பொற்காலத்தில்
பிறந்திடும் பேறு எட்டாமல் போனேனே..
பெருமான் நபியின் பூமுகம் ஒருமுறை
பார்க்கும் பாக்கியம் கிட்டாமல் போனேனே!
இதயம் எங்கிலும் ஏக்கம் ஏக்கம் ….
எங்கள் நபியை எங்கே காண்பேன்?
இறைவா அருள் செய்
கனவிலும்,நினைவிலும் நபியைக் காண…
வாராமல் வந்திடின் அந்த நாளே
வசந்த காலம் என் வாழ்விலென்பேன்…..

லா இலாஹா இல்லல்லாஹ்
முஹம்மதன் ரசூலுல்லாஹ்….

வசந்த காலத்தை எதிர் நோக்கி….
கவிமகன் காதர்

News

Read Previous

சாதனைச் செம்மல் ஷைகுல் மில்லத்

Read Next

நாற்பது பேர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *