ராசி இல்லா ராசாக்கள் ?

Vinkmag ad

 முதுவைக் கவிஞர் ஹாஜி அ. உமர் ஜஹ்பர் பாஜில் மன்பயீ –

 

நானொரு நாடு விட்டு நாடு வந்த சபுராளி !

நல்லதொரு நாடுதனைத் தேடிவந்த தொழிலாள் !

தேனான தீன்மொழியும் தெய்வீக வாசனையும் !

தினஞ்சுற்றி வந்தாலும் துடிக்கிறது என் மனது !

 

ஊரெல்லாம் ஊரை விட்டு உலகெல்லாம் ஓடுகிறார் …………

உனக்கென்ன கேடு’ யென என் வீட்டில் போராட்டம் !

காரென்ன ? காடென்ன ? வீடு தோட்டம் இருந்தென்ன ?

கடல் தாண்டிப் போவது தான் பலபேர்க்கு கொண்டாட்டம் ?

 

பசியின்றி வாழ்ந்தாலும் பகட்டாக அணிந்தாலும்

போதாது ! வீடு கூட்டும் விலக்குமாறும் வெளிநாட்டில்

குஷியாக வர வேண்டும் ! குனியாமல் கூட்ட வேண்டும் !

குணங்கெட்ட மாதருக்குக் குறையாத பொருள் வேண்டும் !

 

 

வெளிநாட்டில் அல்லல்படும் அவலங்கள் ஆயிரங்கள் !

விதவிதமாய்க் கண்டாலும் கேட்டாலும் கவலையில்லை !

சிலவாண்டு சென்று வந்தால் செல்வந்தர் ஆகிடலாம்

சீக்கிரமாய்ப் புறப்படுங்கள் என்றார்கள் இல்லத்தார் !

 

 

பொருள்விற்றுப் பொன்விற்றுப் புறப்பட்டேன் வெளிநாடு !

பணங்காசு கட்டாக அனுப்புகிற கனவோடு !

அருள்சூழும் ஆசையிலே இருள்சூழ ஆகி விட்டேன்

அவலநிலை அத்தனையின் குழியினிலே வீழ்ந்துவிட்டேன் !

 

 

சொன்னபடி உழைப்பில்லை ! சம்பளமோ போதவில்லை !

சொகுசான வாழ்க்கையென எண்ணியதில் உண்மையில்லை !

எண்ணியது வேரொன்று இருப்பதுவோ மற்றொன்று !

என்செய்வேன் இங்கிருந்து ?  யாரிடத்தில் நான் சொல்வேன் !

 

உழைத்து விட்டு உண்பதற்கு உணவெடுத்து உட்கார்ந்தால்

வரிசையென வருகிறது மனைவிமுகம் மக்கள் முகம் !

களைப்புதனைத் தீர்ப்பதற்கு படுக்கையிலே போய் விழுந்தால்

கண்ணிறைந்து நிற்கிறது உறவுகளும் நட்புகளும் !

 

தொலைபேசி ஒலியினிலே என்மகளின் பிஞ்சுமொழி !

தொடராக ஒலிக்கிறது என்மனைவி கொஞ்சுமொழி !

அலைபேசி அழைப்பினினே என் அன்னை நெஞ்சமொழி !

அனைவரையும் நான்காண என்ன வழி ? என்ன வழி ?

 

நடுநிசியில் துயிலெழுந்தால் மறுபடியும் தூக்கமில்லை !

நோய்வந்து பாய்படுத்தால் ஏனென்க நாதியில்லை !

‘சுடும் நினைவு’ அலைகளினால் மனதினிலே அமைதியில்லை !

சுகமென்ற சொல்லுக்கு ஏதுமில்லை ! ஏதுமில்லை !

 

மனைவிக்கு  நோயென்றால் மனம்கிடந்து துடிக்கிறது !

மக்களுக்கு நோயென்றால் மனம்வெதும்பிச் சாகிறது !

தனிமைக்குள் சிறைவைத்த துயரத்தால் அழுகின்றோம் !

தீயிட்டப் புழுப்போலத் துடிக்கின்றோம் ! துவழ்கின்றோம் !

 

 

இறப்பென்ற செய்திவந்தால் தனிமையிலே அழுகின்றோம் !

பிறப்பென்ற செய்திவந்தால் தனியாகச் சிரிக்கின்றோம் !

மறைப்பதற்கு ஒன்றுமில்லை ! மாயைதான் இவ்வாழ்க்கை !

உடலுக்கும் உயிருக்கும்   ஒட்டில்லாப் பொய்வாழ்க்கை !

 

 

கனவுகளும், நினைவுகளும் இதயத்தை வாட்டிடுதே !

காண்கின்ற பக்கமெலாம் எனைப் பார்த்துச் சிரிக்கிறதே !

மனவாசை கொண்டலையும் என்போன்றான் ஆசையிலே

மண்விழுந்து – பிறந்திட்ட மண்ணோக்கிச் செல்கிறதே  !

 

ஆயிரமாய் அனுப்பினாலும் மறு செய்தி ‘கடன் செய்தி’ !

அத்தனைகளும் அனுபவித்தும் வரவில்லை சுபச்செய்தி !

மாயுமெங்கள் தொழிலாளர் மனதினிலே மகிழ்வில்லை !

மறு முடிவு செய்திடவும் உடனடியாய் வழியில்லை !

 

இரத்தத்தை வியர்வையென வடித்துவிட்டு ஒடிந்துவிட்டேன் !

இங்கு வந்து உணர்வுகளை வலிமைகளை இழந்துவிட்டேன் !

இருப்பதனை இழந்துவிட்டுப் பறப்பதனைப் பிடிக்கவந்தேன் !

இருசிறகும் ஒடிந்து விட்ட பறவையெனக் கிடந்து விட்டேன் !

 

உழைப்பதற்கு வழியிருந்தும் வெளிநாடு செல்வோர்க்கு

என்வாழ்வு ஒரு பாடம் ! இருக்கின்ற சிலகாலம்

பிழைக்கின்ற வழிதேடிப் பொருளீட்டிச் செல்லட்டும் !

பிறந்தமண் பூமியிலே பணங்காசை வெல்லட்டும் !

 

 

——-

 

அல்ஹம்து லில்லாஹ்.மிகவும் அருமையான எதார்த்தத்தை வெளிக்கொண்டு வரும் கவிதை.
இக்கவிதையை அயல் நாட்டினருக்காக அரும்பாடு பட்டு எழுதிய என் மதிப்பிற்குரிய
மாமு முதுவை கவிஞர் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

வஸ்ஸலாம்

N.சய்யிது ஷம்சுத்தீன் சாதிக்
தேரிருவேலி

Syed Sadiq <shamsudeen79@gmail.com>

 

—————————

 

அஸ்ஸலாமு அலைக்கும்…
“சிந்தித்தால் பேசலாம்;ஆனால் மனம் உருகினால்தான் கவிதை எழுத முடியும்” என்றார் பேரறிஞர் அண்ணா.
அந்த ஆழ்ந்த மன உருக்கம் கவிஞர் ஹாஜி உமர் ஜஹ்பர் அவர்களின் கவிதையில் இருக்கிறது.
கவிதையைப் பாராட்டுவதா,அந்தக் கவிதை உணர்த்தும் உண்மைகளை எண்ணி வருத்தப்படுவதா என்று எண்ணுகிறேன்.
அல்லாஹ் அனைவருக்கும் அருள் செய்வானாக.

Yembal Thajammul Mohammad <newlightpdkt@gmail.com>

 

——————————–

 

News

Read Previous

வெற்றி இலக்கை அடைய உதவும் எட்டு

Read Next

டி.இ.எல்.சி. பள்ளிக்கு ஸ்டேட் வங்கி உதவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *