முதல் கவிதை

Vinkmag ad
\\கவிதை எழுத முயற்சித்தேன்
பல வார்த்தைகள் கிடைத்தும் 
மனதில் ஒரு தயக்கம்! 
 
எதை பற்றி எழுதுவது, 
நட்பு,காதல்,இயற்கை என மாறி மாறி 
மனம் குழம்பிக்கொண்டிருக்க, 
பேனா மையில் ஈரம் காய்ந்தது 
வார்த்தை வரவில்லை! 
 
சில நேர நிசப்தம்,இறுதியில் 
என் கை எதையோ எழுதத்தொடங்கியது! 
பின்னர் பார்த்தேன் கண்களில் ஈரம், 
அந்த வார்த்தை அம்மா!!!!
 

— எழுதியவர் :சரண்\\

 
 
 
என் முதல் கவிதை:
 
1973 ஆம் ஆண்டு பள்ளியிறுதியாண்டு: தமிழாசிரியர்  புலவர் திரு. சண்முகனார் அவர்கள் (காதிர்முஹைதீன் உயர்நிலைப் பள்ளி, அதிராம்பட்டினம்) வகுப்பில் யாப்பிலக்கணம் நடத்திக் கொண்டிருந்தார்கள்; அவர்கள் ஓர் “ஈற்றடி” யைக் கொடுத்து விட்டு மீதமுள்ள மூவடிகளை உருவாக்கி ஒரு வெண்பா எழுதச் சொன்னார்கள். எவரும் எழுதவில்லை; இறையருளால், கருவில் திருவுடைய அடியேன் உடனே எழுதிய வெண்பா இதுவாகும்; எல்லாப் புகழும் இறைவனுக்கே!
 
அத்தமிழாசிரியர் அவர்கள் கொடுத்த ஈற்றடி:
 
’’சும்மாவே சுற்றல் சுகம்?’’
 
 

அன்பாய்ப் பணிந்தால் அனைவரும் நாடுவர்

வம்பை விதைத்தால் வசைகளைப் பாடுவர்

அம்மாவின் சொல்லை அனுதினம் கேட்டுநட

சும்மாவே சுற்றல் சுகம்?

இப்பாடலுடன் கீழ்க்காணும் வெண்பாக்களையும் இணைத்து இப்பொழுது உள்ள மனநிலைக்கு யான் வனைந்த வெண்பாக்கள்:
தலைப்பு: கேள் மகனே கேள்!

தாளாய் நினைப்பது தாளா அதுவெகு

நாளாய் உழைத்ததை நானிங்குச் சேமித்தேன்;

தூளாய் நினைத்துத் தொலைக்கவும் வேண்டாமே

கேளாய் மகனேநீ கேள்

படிப்படியாய் ஏறு  படிப்பினில் தேறு

பிடிப்புடன் பற்றிப் பிடித்து பலமாய்த்

துடிப்புடன் போராடு துன்பம் களைந்து

படியுமே வெற்றியும் பார்

 

 

 

எதிர்காலம் உன்கையில் எப்படி யாகும்?

புதிர்களாய்ச் சிந்தை புலம்பி அழுமே

கதிர்களாய் உன்னையும் காப்பாற்றி வந்தும்

பதர்களாய் ஆகாமல் பார்


”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பாடசாலை)
அபுதபி(தொழிற்சாலை)
என் வலைப்பூ தோட்டம் http://www.kalaamkathir.blogspot.com  (கவிதைச் சோலை)
மின்னஞ்சல் முகவரி: kalamkader2@gmail.com
                                       shaickkalam@yahoo.com
                                       kalaamkathir7@gmail.com
அலை பேசி: 00971-50-8351499 / 056-7822844

News

Read Previous

துபையில் வாகனம் வாடகைக்கு ………..

Read Next

நூல் : ராஜபாளையம் ராஜுக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *