மழை

Vinkmag ad

–    அத்தாவுல்லா –

 

காய்ந்த நிலங்களைக்

குத்திக் கிளறும்

ஊசி முனைகளாய்

உன் துளிகள் ! – அது

மண்ணைக் கிளறும்

மனங்கள் குளிரும் !

 

வந்து போன தேசங்கள் யாவும்

மண்வாசம் மணம் வீசும் !

 

வருவதற்கு முன்பே

தென்றல் குளிராய் பேசும் !

 

நீ

இந்த பூமிக்கு

உயிரூட்டும் உயிர்

உன்னால் செழிக்கும்

மானிடப் பயிர் !

 

நீ எழுகையில்

உலகம் எழும்

நீ – அழுகையில்

உலகம் சிரிக்கும் !

 

நீ வானத்தின் அழுகையா?

உலகத்தின் எழுகையா?

 

நீ ஓய்ந்தால்

எல்லாம் ஓயும்

பசிப்பிணியில்

வயிறுகள் காயும் !

 

நீயொழிந்தால் ஒடுங்கும்

உயிர்களின் நாவும்

கவிஞர்களின் பாவும் !

 

நீ

குளிர் வெப்பத்தின்

குதூகலக் கலவை !

 

இடியோசைகள்

உன் வருகைக்குக்

கட்டியங்கூறும் மேளதாளங்கள் !

 

வானவில்

சிவப்புக் கம்பளம் !

 

கறுப்பு மேகம் – உனைக்

கவுரவிக்கும் பொன்னாடை !

 

நீ வந்தால் ஏரோடும்

மக்களின்

நல்வாழ்வுத் தேரோடும்

இல்லையேல் போராடும் !

 

நீ கொடுத்தால் சிரிப்பு

கெடுத்தால் நெருப்பு !

நீ உலகை

வாழ்த்திப் பாடும்

வானத்துளிதான்

வரவில்லை என்றால் – வாழ்க்கையே

கண்ணீர்த்துளியல்லவா?

 

நீ அளவோடு வந்தால்தான் அழகு

இல்லையேல் ஆபத்து !

 

உன் பயணம்

வானுக்கும் பூமிக்குமல்ல

மக்களின்

மனதுக்கும் வயிறுக்கும் !

 

வயல்வெளிகளின்

பச்சைக் கம்பளப் புன்சிரிப்பே !

 

வாழுகின்ற காலமெல்லாம் வா !

வாழ வைக்க வா !

பொய்க்காமல் வா !

அருளாகப் பொருளாக வா !

 

News

Read Previous

ஆசிரியர் இல்லாத உலகம் .!

Read Next

ப்ளாக் தொடங்குவது எப்படி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *