மனைவி

Vinkmag ad

மனைவி

முபாரக் ரஸ்வி

Rasvi1967@in.com

 

 

மணவறையில் அமர்ந்து

மன அறையில் குடியேறிய

மாசில்லா மாணிக்கம்

 

உதட்டளவில் உச்சரிப்பதை விட

உயிரளவில் உணர்ந்து பார் !

உன்னதமான அவளின் உருவம்

உன் உள்ளத்திலே தெரிவதை உணர்வாய் !

 

உன்னளவிலே உறவைச் சுமந்து

உன்னை பல உயிருக்கு உடமையாக்கியவள்

உன்னை தந்தை என

உலகிற்கு உவமையாக்கியவள்

 

அன்புக் கணவனுக்கு துணைவியாக

ஆசைக் குழந்தைக்கு அன்னையாக

படிக்கும் பிள்ளைகளுக்கு ஆசிரியராக

அடுப்படியே தன் அலுவலகமாக்கிய சமையல்காரியாக

வீடுகளை சுத்தமாக்கும் வேலைக்காரியாக

விருந்தினர்களை சமாளிப்பதில் விவேகமானவளாக

விடுமுறையே இல்லாத உழைப்பாளியாக

 

கணவனின் முகத்தைப் பார்த்தே

கணித்துவிடும் திறமைசாலியாக

களைப்பாக இருந்தாலும் காளையாகப் பாயும் உன்னை

கடமையென சுமக்கும் விலையில்லா மாதுவாக

 

தனக்காக இல்லாவிடினும்

உனக்காக நோன்பிருக்கும்

ஆன்மீகவாதியாக

 

உன் உடல் நலமில்லையெனில்

உரிய நேரத்தில் உதவிடும் பணிப்பெண்ணாக

குடும்ப பாரத்தை சுமக்கும் குலவிளக்காக

 

இல்ல வேலைகளை

இயன்றவரை சமாளிக்கும்

இல்லத்தரசியாக

 

தந்தைக்கும் – பிள்ளைக்கும் இடையே

தத்தளிக்கும் சமாதானத் தூதுவராக

நீ வன்மையாகப் பேசினாலும்

மென்மையாகப் பேசும்

தன்மையாளராக

 

கணவனின் உரிமையை

கடுகளவும் விட்டுக் கொடுக்காத

சர்வாதிகாரியாக

 

அடக்கமுடியாத கோபத்திலும்

அழகான ராட்சஷியாக

 

அத்துணை வேலைகளையும்

அயராது செய்துவிட்டு

ஹவுஸ் ஒய்ஃப் என்று

அடக்கமாய் சொல்பவளாக

எத்தனை எத்தனை

எண்ணிலடங்காத அவதாரங்கள் !

 

வாழ்க்கை என்ற நாடகத்திலே

இத்தனை வேஷத்தைப் போடுவது

ஆஸ்கார் விருதுக்கு அல்ல !

 

அன்பான உன் அரவணைப்புக்கு

பண்பான உன் நடத்தைக்கு

பாசமுள்ள உன் பரிவுக்கு

நேசமுள்ள உன் நெருடலுக்கு

கள்ளமில்லா உன் உள்ளத்திற்கு

களங்கமில்லாத உன் உறவிற்கு

 

காதல் மாளிகையாக

காட்சியளிக்கும் தாஜ்மஹால் கூட

கட்டிய மனைவியை

காதலித்ததால் வந்தது தான் !

 

இப்போது உன் உள்ளத் திரையிலே

அவளின் உணர்வுகளை

ஒரு சில நிமிடம் ஓடவிட்டுப் பார் !

உன்னையறியாமலே உன்

உடல் சிலிர்ப்பதை உணர்வாய்

உண்மையாய் உன் மனைவியை

நேசிப்பவனாய் இருந்தால்…

 

( குவைத் – நீதியின் குரல் – ஜுன் 2009 )

News

Read Previous

குஞ்சாலி மரைக்காயர்கள்

Read Next

பாலைவனப் பறவை நாங்கள்

Leave a Reply

Your email address will not be published.