மனைவி

Vinkmag ad

 

‘பொற்கிழி’ கவிஞர் மு. ஹிதாயத்துல்லா இளையான்குடி

அலைபேசி : 99763 72229

 

மனைவி …!

யாரவள் …?

நம் உயிரின் நகல் !

நமக்கான … பகல் !

 

மனைவி !

நம் காரியங்களுக்கு

மருந்து !

நம் கண்களுக்கு அவளே,

எப்போதும் விருந்து !

 

மனைவியொரு…

மந்திரி …! – அவள்

மதிநுட்பம் வாய்ந்த

ராஜ தந்திரி !

 

அடுப்படிக்கும்

வீட்டு ஹாலுக்குமாய்

’ரன்’ எடுத்தே…

களைத்துப் போகும்,

கன்மணி !

 

சில சமயம்,

இல்லறப்படகு

கவிழப்போகும் சமயத்தில்,

துடுப்பை வைத்தல்ல,

தம் தோள்களை கொடுத்தே,

நிமிர்த்துகிறவள் மனைவி !

 

காலையில் எழுந்ததும், முதலில்,

நாம் முகம் பார்க்கும்

கண்ணாடி !

பாலையில்

நாம் பார்க்கும்…

பன்னீர் ஊற்று !

 

தாய்க்குப்பின்

நம் குடும்பச் சுமைகளை

நம்மோடு பங்கேற்க வரும்

ஆதாயம் கருதாத …

பங்காளி…. !

 

பிள்ளைக் கரும்புகளைப்

பெற்றுத் தரும்,

படைப்பாளி !

 

மனைவி…..!

நம்மோடு இருக்கும்,

ஒளி !

 

நமக்கென இடர்வந்தால் – அதைச்

சினமாய் சிதைக்கும்

உளி !

 

இன்னும் அழகாய்…

நம் வள்ளுவப் பெருந்தகை

சொல்லியிருக்கிறான்,

மனைவி நம்

வாழ்க்கைத் துணை நலமென்று !

 

நம் காவியக்கவிஞர் கண்ணதாசன்

சொன்னவரிகள்…

என்ன தெரியுமா…?

“ஆலம் விழுதுகள் போல் – உறவு

ஆயிரம் இருந்தென்ன…?

வேரென நீயிருந்தால் – அதில்நான்

வீழ்ந்து விடாதிருப்பேன் !” என்று

மனைவியின் அருமையை

மணக்கத் தருகிறார் !

 

வாழும் மூத்த கவிஞர் வாலி,

மனைவியின் பெருமையை

எளிமையாக – ஆனால்

ஏற்றமாக,

ஆதரவான வார்த்தையை

பேசி !

அருமை மிகுந்த மனைவியை

நேசி !

அன்பெனும் பாடத்தை

அவளிடம்…

வாசி !

அவளைவிடவா

உயர்ந்தது…

காசி ! என்று கேட்கிறார் !

 

பெற்றதாய்….

வணக்கத்திற்குரியவள் !

மனைவியோ …..

வாழ்த்துக்குரியவள் !

 

அவள் முகம் காணாதபோது…

அதென்னவோ

அந்தப்பொழுதுகளில்

உறைந்துபோகிறது…

என் இதய நதி !

 

இனிய தாம்பத்தியத்தை

ஈருடல் ஓருயிர் என்கிறது,

நம் பழங்காலப்

பழமொழி !

 

கணவனுக்காக….

மனைவியும்

மனைவிக்காக…..

கணவனும்

சேர்ந்தே சுவாசிக்கிற

சினேகமே

சிறந்த இல்லறமாகும் !

 

ஆண், பெண் இருவர்

ஒருவர்க்கொருவர்

ஆடைகளென்று … நம்

தோழமை இஸ்லாம்

தோளுயர்த்திச் சொல்கிறது !

 

தோல்வியில் நாம்

துவண்டு விடாமல்…

மீண்டும் எழ,

நமக்கு நம்பிக்கை

ஊட்டுகின்ற

புன்னகை நட்சத்திரமே

மனைவி !

 

பொறந்த வீடா ?

புகுந்த வீடா …? என்று

வருகிறபோது ..

இருவர் வீட்டையும்

இழக்க விரும்பாத

ஈர இதயம் கொண்டவள்,

மனைவி !

 

நல்ல மனைவி

நல்ல பிள்ளை

நல்ல குடும்பம் தெய்வீகம் என்பர் !

 

நல்ல குடும்பம்

பல்கலைக்கழகம் என்பது

நாடறியும்., நாம் அறிவோம்..!

 

குடும்பத்தில்

பிரச்சினைகளின் போது…

மனைவியோடு

சில நிமிடங்கள்

‘கவுன்சிலிங்’ செய்து கொள்கிறபோது

தெளிவான் ’முடிவு’ தென்படும் !

 

மனைவி என்பவள்

இறைவன் கொடுத்த

வரமென்பார்கள்…!

ஆனால் ……

சில குடும்பங்களில்

இதற்கு விதிவிலக்காய்…

அந்த வரமே…

சாபமாக அமையப் பார்த்திருக்கிறோம் !

 

இல்லாள் அகத்திருக்க

இல்லாதது ஒன்றுமில்லைதான் !

ஆம்,

மனைவி இல்லாமல்

சுகம் ஒன்றுமில்லை.!

 

தலையணை மந்திரம்

மனைவி சொல்லே மந்திரம்

என்பார்கள் ..!

எது எப்படி ஆயினும்…

மனைவி இல்லாவிட்டால் …

நாமெல்லாம்

பேச முடியாத

வெறும் இயந்திரம் தான் !

 

 

 

 

News

Read Previous

முதுகுளத்தூர் பேருந்து நிலையத்தின் தோற்றம்

Read Next

பட்டுக்கோட்டையில் நடந்த சமூக பொருளாதார கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம்

Leave a Reply

Your email address will not be published.