மகாகவி பாரதி வாழ்க மாதோ !

Vinkmag ad

மகாகவி பாரதி வாழ்க மாதோ !

பாரதிகாவலர் டாக்டர் கே. ராமமூர்த்தி – துபாய்

 

சீர்மிகுந்த செந்தமிழின் சீராளர்;

செகம்புகழும் கவிதந்த பேராளர்;

கார்த்திகைத் தீபத்திங்கள் திருநாளில்,

கதிரெனவே அவதரித்தார் பாரதியார்.

 

நேர்த்தியுடன் பாநெய்த தறியாளர்;

நிலையறிந்து நூலிழைத்த குறியாளர்;

பாரதிசெவ் வாய்மலர, உருவான

பைந்தமிழ்ச் சொல்தங்கக் கருவூலம்.

 

கல்வியினால் காழ்ப்புதன் னிடமில்லாமல்

கவிக்குலத்து முன்னவரைப் படம்பிடித்தார்;

புல்முளைத்தே இருளடைந்த இந்நாட்டை,

பொலிவாக்கும் திருப்பணிக்கே வந்துதித்தார்.

 

முந்தையரின் புகழலையில் பொருந்தியதால்,

முகிழ்ந்தகடற் செல்வி ஆழம் இருந்தவாறே

சந்தமினிமை, முத்துப்பவளம் பாலித்தாள்;

தங்கக்கவி, தொடுத்ததனை மாலையிட்டார்.

 

பாவானம் பார்த்தறியா விடிவெள்ளி;

பாரதநாட்டு விடுதலையின் தீக்கொள்ளி;

மாகாளியம் மகாசக்தி, அருட்சக்தி,

மாகவியாய் வந்ததமிழ்ப் பெரும்சக்தி.

 

வளர்கின்ற பொற்காலம் தமிழனுக்கே

வாராதோஎன விசனிக்கின்ற பொழுதினிலே

களமிறங்கித் துறைதோறும் பாடிவைத்தார்;

காசினியில் மனிதநேயம் நாடிநின்றார்

 

புலர்காலைப் பொழுதுவரும் ஞாயிறுபோல்,

புரட்சிக்கே பாட்டாயுதப் பாயிரத்தால்

தளர்வின்றிச் சமூகவானில் சிறகடித்தே,

சமத்துவத்தைத் தாரணிகேட்க முரசடித்தார்

 

செந்தமிழ்ப் பாலதினில் மொய்ம்புறவே,

தேசபக்தி, தெய்வபக்தி நெய்யெடுத்தார்;

வந்தனைகள் புரிந்துநலம் சூழ்ந்திடவே,

வையமெலாம் பாரதிபுகழ் வாழ்கமாதோ !

News

Read Previous

கர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி!

Read Next

ஐக்கிய நல அறக்கட்டளை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *