புத்தாண்டு வாழ்த்துக்கள்

Vinkmag ad

புத்தாண்டு வாழ்த்துக்கள் – 2021

சென்ற ஆண்டு முடியும் தருணத்தில்
இவ்வாண்டு துவங்குதற்கு மக்களிடம்
எத்தனை வாழ்த்துக்கள் , எத்தனை ஆசிகள்
எத்தனை கணிப்புகள் , எத்தனை நம்பிக்கைகள் ,
எத்தனை எதிர்பார்ப்புகள், எத்தனை திட்டங்கள்
அத்தனையும் பொய்த்தது கொரோனாவெனும்
சித்தம்கலங்கவைத்த சீனக்கிருமியால் .
வர்த்தகம் குலைந்தது ,  வருமானம் குறைந்தது
வாழ்க்கை சிதைந்தது , வையகம் ஸ்தம்பித்தது,
மரணங்களாலே மனங்கள் கரைந்தன
இயல்பு நிலை இன்னும் திரும்பியபாடில்லை ,
எத்தைத்தின்னால் பித்தம் தெளியுமென்று
அத்தனையும் செய்தும் அச்சம் தீரவில்லை.
ஓரளவு நிலைமைகள் சீரமையும் நேரத்தில்
இங்கிலாந்திலிருந்து இன்னுமொரு கிருமியால்
இன்னுமொரு ஊரடங்கு திரண்டுவரப் பார்க்கிறது .
கண்ணுக்குத் தெரியாத கிருமியால் ஓரழிவும்
கண்ணெதிரே நடக்கின்ற ஊழலால் பேரழிவும் ,
பால்மணம் மாறாப்பச்சிளங்குழந்தை முதல்
கோலூன்றும் வயதுக் கிழவிவரை யாவருக்கும்
பாலியல் கொடுமைகள் , பாவிகளால் அரங்கேற்றம் .
மதவாதம் , தீவிரவாதம், பயங்கரவாதங்களால்
நிதமிங்கே நிகழ்கின்ற நிம்மதிச்சீரழிவும்
வருமாண்டிலாவது வாராதிருக்கட்டும் .
சிறுமதிகொண்டோரின் சிந்தனைகள் மாறட்டும்
அரசியலார் திருந்தி நல்லாட்சி நல்கட்டும்
மக்கள் நலத்திட்டங்கள் மக்களை சென்றடையட்டும்.
லஞ்சம் கொடுத்துவிட்டு , தரமற்ற பணிசெய்யும்
வஞ்சகராட்டம் இந்த ஆண்டோடு ஒழியட்டும்.
பிரிவினை வாதிகளின் பிதற்றல்கள் ஒழியட்டும் .
அக்கிரமக்காரர்கள் அடியோடு ஒழியட்டும்.
தூய்மை , வாய்மை , நேர்மை , ஒற்றுமை ஓங்கட்டும்.
 அன்பு அரசாளட்டும் , அமைதி நிலவட்டும்
பண்பு உயரட்டும்  , பாரெல்லாம் மகிழட்டும் .
இந்தக் கனவாவது , இனிது நிறைவேறட்டும்.
வழக்கம்போல் புத்தாண்டு வாழ்த்துச் சொல்லிடும்
பழக்கத்தால் உரைக்கின்றேன் , புத்தாண்டு வாழ்த்துக்கள் .
அன்புடன்
சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம் .

News

Read Previous

வயிற்றின் கொழுப்பை குறைக்க வீட்டு சிகிச்சைகள்!!

Read Next

புத்தாண்டு வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *