பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள்

Vinkmag ad

 

Translate message
Turn off for: Tamil

 

 

 

 

சேர்த்துக் கட்டிய முல்லை வேண்டு மென்றேன்-நல்ல
சேயிழை அவள் சிரிப்பு முல்லை தந்தாள்!
பார்த்துப் பறித்த தாமரைப்பூத்
தீர்த்து விலைக்குக் கொடடி என்றேன்

பூத்த முகத் தாமரையாள்
புதுமை காட்டி மயங்கி நின்றாள் சேர்த்து…..
தேவையடி தாமரை இதழ் என்றேன்
தேனொழுகும் வாயிதழ்மலர் ஆகின்றாள்-ஒரு
பூவை  என்பேர் பூவை என்றாள்

ஆவல் அற்றவன் போல் நடந்தேன்
அவள் விழிதனில் அலரி கண்டேன் சேர்த்து….
காவல் மீறிக் கடைக்கு வந்து விழுந்து – பலர்
கண்பட வாடிய மருக்கொழுந்து நீ !

மேவா தடி என்று சொன்னேன்
வேங்கையில் ஈ மொய்க்கா தென்றாள்
தேவைக்கு மணம் வேண்டும் என்றேன்
திருமணம் என்று தழுவி நின்றாள். சேர்த்து….

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

கசங்கு சீவடி பரம்பு சொற்றடி
கைவேளை முடித் திடலாம்-நம்
பசங்கள் பசிக்கு விரைவில் சென்றால்
பழயபைக் கொடுத் திடலாம்

பிசைந்து வைத்துள மாவும்தேனும்
பீரக்கங் கொடியின் ஓரம்-அந்த
உசந்த பானை திறந்து கரடி
உருட்டிடும் இந்த நேரம்

கூடைமுறங்கள் முடித்து விட்டேன்
காடை இறக்கை போலே-இனி
மூடுதட்டும் குழந்தை மூச்சிலும்
முடிப்பதுதான் வேலை

காடுவெட்டவும் உதவி யில்லாக்
கழிப்புக் கத்தியைத் தீட்டி-நீ
ஏடுபத்தாய் மூங்கில் பிளக்க
எழுந்திரு கண்ணாட்டி

சோடியாக நா மிருவர்
கூடி உழைக்கும்போது-நம்
ஓடும்நரம்பில் உயிர் நடப்பதை
உரைத்திட முடியாது

பாடி நிறுத்தி நீகொடுத்திடும்
பாக்கு வெற்றிலைச் சருகும்-அத
னோடு பார்க்கும் பார்வையும் என்
உயிரினை வந்து திருகும்

 

 

– அகரமுதல மே நாள் சிறப்பிதழ்

 

 

காடு களைந்தோம் – நல்ல கழனி திருத்தியும் உழவு புரிந்தும்

நாடுகள் செய்தோம்: – அங்கு நாற்றிசை வீதிகள் தோற்றவும் செய்தோம்.

வீடுகள் கண்டோம்: – அங்கு வேண்டிய பண்டங்கள் ஈண்டிடச் செய்தோம்.

பாடுகள் பட்டோம் – புவி பதமுறவே நாங்கள் நிதமும் உழைத்தோம்.

 

மலையைப் பிளந்தோம் – புவி வாழவென் றேகடல் ஆழமும் தூர்த்தோம்.

அலைகடல் மீதில் – பல் லாயிரங் கப்பல்கள் போய்வரச் செய்தோம்.

பல தொல்லையுற்றோம் – யாம் பாதாளம் சென்று பசும்பொன் எடுத்தோம்.

உலையில் இரும்பை – யாம் உருக்கிப்பல் இயந்திரம் பெருக்கியுந் தந்தோம்.

 

ஆடைகள் நெய்தோம் – பெரும் ஆற்றை வளைத்துநெல் நாற்றுகள் நட்டோம்.

கூடை கலங்கள் – முதல் கோபுரம் நற்சுதை வேலைகள் செய்தோம்.

தேடிய பண்டம் – இந்தச் செகத்தில் நிறைந்திட முகத்தெதிர் வைத்தோம்.

 

வாழ்வுக் கொவ்வாத – இந்த வையத்தை இந்நிலை எய்தப் புரிந்தோம்.

ஆழ்கடல், காடு, – மலை அத்தனை யிற்பல சத்தை எடுத்தோம்.

ஈழை, அசுத்தம் – குப்பை இலைஎன்ன வேஎங்கள் தலையிற் சுமந்தோம்.

 

கந்தை யணிந்தோம் – இரு கையை விரித்தெங்கள் மெய்யினைப் போர்த்தோம்.

மொந்தையிற் கூழைப் – பலர் மொய்த்துக் குடித்துப் பசித்துக் கிடந்தோம்.

சந்தையில் மாடாய் – யாம் சந்ததம் தங்கிட வீடு மில்லாமல்

சிந்தை மெலிந்தோம் – எங்கள் சேவைக் கெலாம்இது செய்நன்றி தானோ?

 

 

 

 

– அகரமுதல மே நாள் சிறப்பிதழ்

 

 

அழுக்குத் துணிக்குள்ளே அறத்தோடு பிணைந்துள்ள
அவ்வுயிரே என்றன் ருயிராம்!
பழுப்பேறக் காய்ச்சிய இரும்பினைத் துாக்கி
உழைப்பாலும் உணர்வாலும் உலகை உண்டாக்கி-இவ்
வழுக்கு துணிக்குள்ளே…

பழக்காடும் கிளியும்போல் நானும் அத்தானும்
பகற்போதைக் கழித்தபின் அவன் கொஞ்சமேனும்
பிழைஇன்றி லைக்குச் சென்றுதன் மானம்
பேண இராவேலையைக் காணாவிடிலோ ஊனம்
தழற் காட்டிலே இரும்புச் சரக்கும் உருகக்கண்டு
விழிப்போடிருந்து வேண்டும் உருப்படி செய்வதுண்டு
அழுக்குத் துணிக்குள்ளே….
அறம்புரிவார் எய்தும் இன்பமே இன்பம்
அயலார்க்கு நலம்செய்யார் எய்துவார் துன்பம்
இறந்து படும்உடலோ ஏகிடும் முன்பும்
எழில் உள்ளம் நன்மைதீமை இனம்கண்ட பின்பும்
.அறம்செய் அறஞ்செய் என்றே அறிவேஎனை அழைத்தால்
இறந்தார்போல் இருப்பேனோ. என்பான்என் அத்தான்
அழுக்குத் துணிக்குள்ளே…

வெய்யில்தாழ வரச் சொல்லாடி-இந்தத்
தையல் சொன்ன தாகச் சொல்லடி
வெய்யில் தாழ வரச் சொல்லடி
கையில் கோடாலி கொண்டு
கட்டை பிளப் பாரைக் கண்டு
கொய்யாக் கனியை இன்று
கொய்து போக லாகும்எனறு
வெய்யில் தாழ வரச் சொல்லடி
கூரைக்குப்பின்னால் இருக்கும் தென்னை-அதன்
கூட இருக்கும் வளர்ந்த புன்னை
நேரினிலே காத்திருப்பேன்! என்னை
நிந்திப்பதில் என்னபயன் பின்னை?

வெய்யில் தாழ வரச் சொல்லடி

தாய் அயலுார் சென்றுவிட்டாள்; நாளை-சென்று
தான் வருவாள் இன்றுநல்ல வேளை
வாய் மணக்கக் கள்ளொழுகும் பாளை-நாள்
மாறிவிட்டால் சை எல்லாம் துாளே
வெய்யில் தாழ வரச் சொல்லடி.

 

 

– அகரமுதல மே நாள் சிறப்பிதழ்

 

 (சித்திரை 14, 2045 / 27 ஏப்பிரல் 2014 இதழின் தொடர்ச்சி)

  விலக்கம் உற்ற தண்ணீரின் எடை எவ்வளவோ, அவ்வளவு குறைவு பொருளின் எடையிற் காணும். ஏனெனில் தண்ணீருள் அமிழும் பொருளை தண்ணீர் எப்போதும் மேல் நோக்கித் தள்ளுகிறது. இவ்வாறு கீழே அமிழும் பொருளை மேல் நோக்கித் தள்ளும் தண்ணீரின் ஆற்றல், பொருளால் விலக்கம் உற்ற தண்ணீரின் எடைக்கு ஒப்பாகும் எடுத்துக்காட்டாக, ஓர் இரும்புத் துண்டு 4 கிலோ கிராம் எடையுள்ளதாகக் கொள்வோம். இது தண்ணீருள் முழுதும் மூழ்கும்படி தொங்கவிடப்பட்டால் ஏறத்தாழ அரைகிலோகிராம் எடையுள்ள தண்ணீர் விலக்கப்படும். எனவே தண்ணீருக்குள் அதன் எடை 8 கிலோ கிராம் தான்.

மேற்கூறிய அடிப்படையிற்றான் நாம் தண்ணீரில் எளிதாக மிதந்து நீந்துகின்றோம். நாம் நீந்தும்போது நமது உடலால் விலக்கம் உறும் தண்ணீரின் எடை ஏறத்தாழ நமது எடைக்கு ஒப்பாகும். நம் எடைக்கு ஒப்பான ஆற்றல் கொண்டு தண்ணீர் நம்மை மேல் நோக்கித் தள்ளுகிறது. எனவே தான் தண்ணீரினுள் நமக்கு எடையே இல்லாததுபோல் புலப்படுகின்றது. அதனாற்றான் தண்ணீருக்கு மேலே தலையை வைத்து நீந்துவதை விட, உடல், தலையாவும் தண்ணீருள் ஆழ்ந்த நிலையில் நீந்துவது எளிமையாக இருக்கிறது. தலையும் சேர்ந்து தண்ணீருள் அமிழும்போது விலக்கம் உறும் தண்ணீரின் அளவும் பெரிதாகிறது. அதனால் முன்னைய நிலையை விடப் பின்னைய நிலையில் தண்ணீரின் மேல் நோக்கித் தள்ளும் ஆற்றலும் பெரிதாகிறது. ஒரு மரக்கட்டை அதன் எடை என்னவோ அவ்வெடையுள்ள தண்ணீர் விலக்கம் உற்றதும் மிதத்தல் பெறுகிறது. இவ்வாறே படகும் கப்பலும் மிதக்கின்றன. நீர் மூழ்கிக் கப்பலும் ஆர்க்கிமிடிசின் இத்தத்துவ அடிப்படையிற்றான் இயங்குகிறது. ஆர்க்கிமிடிசு கணிதம் அறிவியல் இவற்றில் பெரும் புலமை பெற்று விளங்கினார். அவர் கல்லறையும் உருளை உருண்டை வடிவங்கள் பொறிக்கப்பட்டுப் பார்ப்போர்க்குக் கணித அறிவை ஊட்டவல்லதாய் அமைந்துள்ளது.

(குறள்நெறி – வைகாசி 2, 1005 / 15.05.1964)

– அகரமுதல மே நாள் சிறப்பிதழ்

அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க. 

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.inஇலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:

www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

News

Read Previous

அம்மா தொட்டுப்பார்த்த வயிறும்; அதில் நானும்.. (அம்மா கவிதை) வித்யாசாகர்!

Read Next

முதுவை நகரின் வசந்த காலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *