பாரதி – என் தந்தை

Vinkmag ad

பாரதி – என் தந்தை

இப்போது

என் பேனாவிற்கு

இடுப்பு வலி?

ஏனென்றால்-

பெற்றெடுத்த தந்தையையே

நான்

பிரசவிக்க வந்துள்ளேன்.

 

அதனால்

என் பேனாவிற்கு

இப்போது

இடுப்பு வலி.

 

பாரதி – என் தந்தை !

என் தந்தையை உங்களுக்கு

அறிமுகப்படுத்துவதில்

நான்

ஆனந்தம் கொள்கிறேன் !

ஏனென்றால் –

அவன்

அன்னைத் தமிழை

அகில உலகுக்கும்

அறிமுகப்படுத்தியவன் !

 

பாரதியை

தந்தையென்று நான்

தனிஉரிமை கொண்டாட

யாரும்

தடைபோட மாட்டார்கள் !

 

ஏனென்றால்

பொருள் சேர்த்து

வைத்திருந்தால் தானே

புதல்வர்களிடையே

போட்டு வரும்?

அவனோ

காசு பண ஆசைகளைத்

தூசி போலத்

துடைத்தவன் அல்லவா?

 

பாரதி – என் தந்தை !

நானோ ஒரு

வித்தியாசமான

குழந்தை !

 

நான் குடித்த பால்-

தாய்ப் பாலல்ல

தந்தைப் பால் !

தந்தை பால் நான்

தந்தை பால் அருந்தியவன் !

 

அதனால்-

அப்பா பிள்ளையா

அம்மா பிள்ளையா – என்று

எப்போது கேட்டாலும்

தப்பாது சொல்வேன்

நான்

அப்பா பிள்ளைதான் !

 

ஓர்

அப்பாவிப் பிள்ளைதான் !

என் தந்தையுடைய

இதய

வெள்ளைத் தாளில்

சிறிய என்பேனா

சில சமயம்

கீறிய துண்டு.

 

அப்போதெல்லாம்

காயங்களை

அவன் வாங்கிக்கொண்டு

கவிதைகளை

எனக்களித்தான் !

 

அவன் எனக்குப்

புத்தகங்கள்

வாங்கிக் கொடுத்தான் !

 

சொற்புதிது – பொருள் புதிது

சுவைபுதிது – வளம் புதிது

என்று

அவனே ஒரு

புதுமையான

புத்தகமாகவும் இருந்தான் !

 

அவன்

கொடுத்த புத்தகத்தைப்

படித்து முடித்துவிட்டேன்.

அவனைத்தான்

இன்னும் கூட

படித்து முடிக்காமல்

பாக்கி வைத்திருக்கிறேன் !

 

ஒவ்வொரு முறை

படிக்கும் போதும்

ஒவ்வொரு விதமாய்-

 

தர்மமாய்

தைரியமாய்

ஞானமாய்

நாணமாய்

ஓ !

புரிகிறது …

அவன் ஒரு

புத்தகமல்ல-

புத்தகசாலை !

 

 

( ஒரு வானம் இரு சிறகு – மு.மேத்தா எழுதிய நூலிலிருந்து )

News

Read Previous

விடியலும் வந்தே சேரும் !

Read Next

பனங்கருப்பட்டிதான் மிக உசத்தியானது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *