பாரதியின் குயில்

Vinkmag ad
பாரதியின் குயில்
_______________________________________________ருத்ரா
எல்லா கவிதைகளுமே
கா..கா..கா என்கின்றன.
அந்த காக்கா கூட்டங்களுக்கு நன்றி.
ஏனெனில்
அந்த இரைச்சல்கள் எல்லாம்
தாகம் கொண்டிருந்தன.
அதை தணிப்பதற்கென்றே
எங்கிருந்தோ ஒரு
இசை கேட்டது.
அது தான் “குயில் பாட்டு.”
“புல்லை நகையுறுத்தி
பூவை வியப்பாக்கி
நீரில் மலர்ச்சி தரும்”
சூரியனையே இனிப்பால்
குளிப்பாட்டும்
குயில் பாட்டு.
பாரதியின் கவிதை
எங்கோ சுருண்டு கிடந்தது.
இதில் தான் ஏழு கடல்களின்
மொத்த அலையாய்
பொங்கி எழுந்தது.
காதல்
அப்படியொரு காந்த விசையா?
மண் மரம் மட்டையெல்லாம்
குயிலின் இசை வழியே
காதலைப்பூசிக்கொண்டன.
மாடும் குரங்கும் கூட
குயிலின் மேல் காதல் கொண்டன.
காதல் கைக்கு எட்டாத வானமா?
அப்படியென்றால்
அது தொலையட்டும்.
காதலாம் காதல்.
“போனால் போகட்டும் போடா”
என்று அன்றே பாடினான் இப்படி:
காதல் காதல் காதல்
காதல் போயின் காதல் போயின்
சாதல் சாதல் சாதல்.
காதல் இனிது
சாதல் அதை விட இனிது.
இப்படியொரு “பஜ கோவிந்தம்”
காதலுக்கும் சாதலுக்கும்
பாடினான் பாரதி.
40 களின் 50 களின்
எழுத்துகள் எல்லாம்
காதலின் வெற்றி
மரணம்
எனும் மரணமில்லா இலக்கியமாய்
 குவிக்கப்பட்டன.
“தேவதாஸ்” என்ற அந்த திரைப்படம்
காலத்தால் தேய்ந்து போன‌
மூளியாக கச்சாபிலிம் போல்
தெரிந்தாலும்
தேவதாஸ் பார்வதியின் காதல்
அதனுள் இன்னும்
ஏழுவர்ணங்களில் மின்னல் நரம்புகளை
மீட்டி ஒலிக்கும் காதல்
ஒலி பூத்துக்கொண்டே இருக்கிறது.
இப்போதைய கணினி யுகத்தில்
இளமையின் ஜீன்கள் எல்லாம்
வறட்டு “பூலியன் அல்ஜிப்ராவில்” அல்லவா
காதலை
பிறாண்டிக்கொண்டிருக்கின்றன.
இருந்தாலும் இறந்தாலும்
காதல் என்றும் வாழ்க‌
என்று
பாரதியின் குயில்
தன் அடி உள்ளத்து அமுதத்தை
பிழிந்து ஊற்றிக்கோண்டே இருக்கிறது.
“டப்பென்று” மூடிவிடு அந்த வரிகளை.
இளைய யுகமே!
காதல் எனும் மைல்கல்லில்
உன் இறுதி நடுகல்லை
நட்டுக்கொண்டு விடாதே
என்பது தான்
நேற்று வரை சக்கையாய்
நாம் பிழிந்து எடுத்துக்கொண்ட
சாறு.
வாழ்க்கையில் நொந்து நூலாவதும்
காதலுக்கு நொந்துபோய்
காணாமல் கரைந்து விடுவதும்
ஒற்றைப்புள்ளியில் வந்து நிற்கிறதே!
சரி!
வாழ்க்கையை காதலிப்போம்.
வாழ்க்கையை முழுதுமாய்
வாழ்ந்து பார்த்து
அந்த “பொருள் விளங்கா” உருண்டையை
அல்லது
அந்த பொரி விளங்கா உருண்டையை
சுவைத்துக்கொண்டே இருப்போமாக!
குயிலா?
அது பாட்டுக்கு கூவிக்கொண்டே
இருக்கட்டும்.

News

Read Previous

வெள்ளிப்பனி மலையில்…

Read Next

செல்வி என்ற நர்ஸக்கா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *