பாடிய நிலா பாலுவுக்கு ஒரு பாடல்…

Vinkmag ad
பாடிய நிலா
பாலுவுக்கு ஒரு பாடல்…
 – கவிஞர் குமரி ஆதவன்
என் பாடலை
நீ பாட வேண்டுமென்று
ஆசைப்பட்டேன்
நீ திரும்பி வருவாயென்று
நம்பியிருந்தேன்
இரண்டும் இல்லாமல் போனது!
கொரோனா கிருமி உன்
சுவாசப் பையை அடைத்தபோது
நானும் கொரோனாவுக்கு வாழ்க்கைப்பட்டு
நிம்ஸ் மருத்துவமனையில்
செயற்கை சுவாசத்தில் இருந்தேன்
இன்று நீ போயிருக்கிறாய்
நான் எழுந்திருக்கிறேன்
நீ சுவாசம் நிறுத்தியபோது
நான் இயற்கை சுவாசத்திற்கு வந்தேன்
வந்ததில் மகிழ்ந்த நான்
உன் குரல் இனி இல்லை
என்றானபோது
அழுது தான் போனேன்!
என் மனைவி மக்கள்
என் மறுபிறப்புக்கு மகிழ்கிறார்கள்
நீ
மறுபிறப்பாக
எங்கு பிறக்கப் போகிறாய்?
உனக்கு உன்
மனைவியே உலகம்
பிரிந்ததே இல்லை
சண்டை போடுவதே இல்லை
‘நீ பக்கத்தில் இல்லாமல்
எப்படி இருப்பேன்?’
என்றாயாமே
உன் சக்தியிடமிருந்து
பிரிந்ததால் தான்
பிரிந்தாயோ?
வைரமுத்து
அணுவை விட சிறிது
அணுகுண்டை விட கொடியதென்ற
கொரோனா விழிப்புணர்வு பாடலை
உன் விரல் சொடுக்கு இசையில்
வடிவமைத்தாயே
அந்த அணுகுண்டே
உன்னை துளைத்து விட்டதே!
‘மண்ணில் இந்த காதல் இன்றி’
மூச்சு விடாது பாடல் பாடிய நீ
மூச்சை விட்டு விட்டாயே!
கடைசியாக தெய்வம் வந்து காக்கலியே!
‘ஆயிரம் நிலவே வா’
உனது முதல் தமிழ் பாட்டு
தமிழ்த் திரையுலகில்
அதிகம் நிலவு பாட்டு பாடியது நீ தான்
அந்த நிலவோடு
நிலவாக கலந்து விட்டாயே!
நிலா முற்றத்தில்
உன் பாடலை கேட்டு ரசித்தோம்
இனி நிலா எமக்கு
இன்னொரு பாடும் நிலா
எங்கள் பாலு
குடியேறிய நிலா!
உலகின் பதினாறு மொழிகளில்
உன் குரலை மொழிகடந்து
உலகம் முழுதும் காற்று
ஒலிபரப்புகிறது
இசைக்கு மொழி எது?
பாலு உனக்கு அழிவேது?
உனது
நாற்பதாயிரம் பாடல்கள்
இன்னும்
நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கு
திசையெங்கும் இசைக்கும்
புவியெங்கும் முழங்கும்
தலைமுறைகளின் தசை துடிக்கும்
நரம்புகள் பலம் பெறும்
ஒவ்வொரு
இசைக் கச்சேரிகளும்
உன் குரலை மறுபடி
இசைத்தேயாகும்
உன் ஒற்றைக் குரல்
இனி ஓராயிரம் குரலாய்
திசையெங்கும் ஒலிக்கும்
ஒருவன்
ஓராயிரமாய் மறுரூபமடைந்துவிட்டாய்!
ஒவ்வொரு நடிகனின்
உதட்டு அசைவிற்கும்
உன் குரல் தானே உயிர் கொடுத்தது
ஒவ்வொரு பாடலாசிரியனின் வரிகளும்
உன் உச்சரிப்பில் தானே
உயிர் பெற்றன
ஒருவனே ஈரிடத்திற்கு
உயிர் பிச்சை தந்த
அதிசயம் நீ!
உன்
நாக்கும்
நாபியும்
கொஞ்சி விளையாடிய
விளையாட்டில்
எத்தனை
இசை குழந்தைகள்!
தானாய்ப் பழுத்து
சுவை தள்ளும்
வருக்கைப் பலா
தேன் சுளைகள்
உன் பாடல்கள்!
திரைக்காட்சிகள்
எங்கள்
விழிகளைப் பறித்துக்
காட்சிகள் அசிங்கமாக்கிய போதும்
எங்கள் செவிகளைச் சிங்காரித்துத் தந்தவன் நீ!
ஒரு தகப்பனின் நினைவாய்
தவப்புதல்வன் பதித்து வைத்த
குரல் பதிவைப் போல்
உன் பாடலை உலகம் பதித்து வைத்துள்ளது.
காற்றோடு உன் வாசம்
எப்போதும் உன் கபடற்ற முகம்
ஒலியின் ஜதியில் கலந்தது
உன் அமுதக் குரல்
உலகின் அமுதாய் ஒலிக்கட்டும்
கானக்குயிலே!
முகம் தெரியாத
இளைஞர்களின் பாடல்களுக்கு
முகமும் முகவரியும்
கொடுத்தாய்.
தேசம் நடந்த உன் கால்களை இனிகாண முடியாது
எலும்பு தசை இல்லை
உன் குரல் உண்டு
உலகம் உள்ளவரை உண்டு!
அதிசயக் குரலின்
அரசன் நீ உறங்குகிறாய்
ஒரு யாழ்
உடைந்து கிடக்கிறது
ஒரு வீணை
விழுந்து கிடக்கிறது
ஒரு ஆர்மோனியப் பெட்டி
சரிந்து அழுகிறது
பின்னணிகள் இன்றி
உன் குரல்
என் கண்ணீரோடு
முன்னணியில் நிற்கிறது!
உன்னை
கொரோனா கிருமி
பறித்தது கொடுமை!
ஒரு நூறு வயது ராஜாவின் மரணம் போல்
நடக்க வேண்டியது
பாரதியின் இறுதிச்சடங்கு
போலாகி விட்டதே!
உன் தாமரைப்பாக்கம் கல்லறையில்
இனி பழமரப்பறவைகள் வராது
பாடற் பறவைகள் வரும்
கவிஞர் கூட்டம்
வரிகளோடு வந்து
வாய் திறக்கக் கேட்கும்
வானம் அழுகிறது
பூமி சிரிக்காமலே உன்னை உள்வாங்கிக் கொண்டது.
விதையாய் விழுந்த உனக்கு
என் கண்ணீர் அஞ்சலி!
—–

News

Read Previous

மண்ணில் இனி எஸ்பிபி இன்றி..

Read Next

இசை மேதை எஸ்.பி. பாலு

Leave a Reply

Your email address will not be published.