பாச நபிமணி (ஸல்) அவர்களுக்கு வாசமாய் … ஒரு மாலை !

Vinkmag ad

(    ‘தமிழ்மாமணி கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ், இளையான்குடி. )

 

ஒன்றுயிறை அல்லாது

வேறில்லை என்பதையே

மன்றத்தில் பதிவு செய்த

மாமணியே ! நாயகமே !

 

அன்றிருந்த சிலை வணக்கம்

ஆகாதெனச் சொல்லி

எந்தவொரு சக்தியும்

அதற்கில்லையென உரைத்து

 

சிந்திக்க வைத்த

சித்திரமே ! நாயகமே ! – எம்

கண்களைத் திறந்து வைத்த

கண்மணியே ! நாயகமே !

 

ஆங்காங்கே கூட்டங்களாய்

அலைந்து திரிந்தோர்க்குப்

பாங்காகத் தீனைப்

பக்குவமாய் எத்திவைத்து

 

காண்போர் வியக்கும்

கைருல் உம்மத்தாய்

மாண்பாய் இணைத்த

மகத்துவத்தை என்னென்போம் !

 

படைத்த ரப்பின்

பரிசளிப்பாய் எங்களுக்கு

கிடைத்த பெரும் பேறே !

கீர்த்தியுள்ள நாயகமே !

 

ஒரு மாதிரியின்றி

உலகம் தவிக்கையிலே

ஒரு ’மாதிரி’ யாய் வந்த

உத்தமரே ! நாயகமே !

 

உங்களை அழகிய

முன்மாதிரி யென்போம் !

முதல் மாதிரி யென்போம் !

நன்மாதிரி யென்போம் ! – எங்கள்

நலம் நாடும் நாயகமே !

உம்மி நபியானாலும்

உலகம் படிக்கின்ற

செம்மைசேர் அறிவுச்

சீர்சோலை நாயகமே !

 

அசத்தியம் அழிந்திடவே

நீங்கள் எடுத்து வைத்த அடிகளிலே

சத்தியமாக நாங்கள்

‘நிதானம்’ பயின்றோமே !

 

தாயிப் நகரினிலே

தாஹா உங்கள் சோதனையில்

ஆஹா ! பொறுமை யென்னும்

அணிகலனைக் கண்டோமே !

 

மக்கா விட்டு மாமதீனா

ஹிஜ்ரத் சென்றீர்கள் !

ஹக்கான தீனுக்காம்

தியாகமென உணர்ந்தோமே !

 

மக்கத்து முஹாஜிர்களையும்

மதீனத்து அன்ஸாரிகளையும்

தக்கதோர் விதமாக

ஒன்றிணைத்த சாதனையில்

சங்கையான நல்ல

‘சகோதரத்துவம்’ படித்தோமே !

எங்கேயும் இதுபோல

நடந்ததாய் … அறியோமே !

 

பத்ருப் போரில் உங்களின்

‘சாணக்கியம்’ படித்தோமே !

எதிரிகளை மன்னித்த

ஏற்றம் கண்டு வியந்தோமே !

பசிதணிக்க கல் கட்டி

படுத்திருந்த உங்களைப்போல்

ஆட்சியாளர் யாரையும்

அறிந்ததில்லை நாயகமே !

 

ஈச்சமரக் கட்டில் தந்த

இனிய கொடைத் தழும்பெல்லாம்

ஆட்சியாளர் யார் பெற்றார் ?

அண்ணல் நபி நாயகமே !

 

வாழும் காலத்தே தீனின்

வளர்ச்சி கண்டு பூரித்த

மாநபியே ! யெங்கள்

மணிவிளக்கே ! நாயகமே !

 

ஏவல் விலக்கல்

எதுவென்று தெரியாத

நாட்டுப் புறமாயிருந்தோம்

நாகரீக உடை தந்தே – எங்கள்

தன்மானம் காத்தீர்கள் !

தங்கநபி நாயகமே ! – இங்கே

பெண் வாழ்வும் மலரப்

பெரிதாய் உழைத்தீர்கள் !

 

மற்ற நபிமார்கள்

மாண்புடையோர் ஆயினும் – நீங்கள்

பெற்ற பெரும்பேறு

பெரிதன்றோ … நாயகமே !

 

பாங்கில், தொழுகையில்

பரவசமாய் உங்கள் பெயரை

நாங்கள் உச்சரிக்க

நற்பேறு பெற்றோமே !

 

இம்மையில் மட்டுமல்ல; நாளை

மறுமையிலும் எங்கட்காய்

கண்ணிய ஷஃபாதத்  வழங்கும்

கன்னலே ! நாயகமே !

 

உம்மத்தே முஹம்மதாய்

உலகில் பிறந்ததற்காய்

கோடி கோடியாய் நன்றியை

குவிப்போமே நாயகமே !

 

 

News

Read Previous

விஞ்ஞான‌மே………..! உன் விடையென்ன‌ ………?

Read Next

கண்ணதாசனின் பொன்மொழிகள்

Leave a Reply

Your email address will not be published.