நாயகம் ஒரு காவியம்

Vinkmag ad

மு.மேத்தா

நாயகம் ஒரு காவியம்

சிலந்தி மணிமாலை

கவிக்குரல்

சிலந்தி யென்றால் – அது
சாதாரணச் சிலந்தியா?
இல்லை…
சிங்கத்தின் குகைக்கே
ஆடை தைத்த
சிலந்தி!

பட்டொளி வீசிப்
பறக்கும் வெற்றிப் பதாகைக்குத்
துணி நெய்யத்தான்
அன்று அச்சிலந்தி
நூல் நூற்றதோ?

ஏகத்துவ நெறியெனும்
இனிய குழந்தைக்கு
தௌர்குகைச் செவிலித்
தாய் அவள்
வலைச்சட்டை பின்னி
மனம் மகிழ்ந்தாளோ?

வள்ளல் நபிகளார்
வருகை புரிந்தால்
குட்டைச் சிலந்திப்பெண்
குகையின் வாசலுக்கு – வெண்
பட்டுக் குஞ்சம்
கட்டிப் பார்த்தாளோ?

இன்று
அருமை நபிகளாம்
அண்ணலாரைப் பற்றி
எத்தனையோ நூல்கள்
எழுதப் படுகின்றன
அவற்றுக் கெல்லாம்
ஆதாரம்

சிலந்தி எழுதிய
அந்தச்
சிறுநூல் தானே?

வெறும் –
நூலாம் படைதான்!
ஆனாலும் அது
அண்ணலாரைக்
காட்டிக் கொடுத்து
ஐந்தாம் படையாய்
ஆகவில்லை – ஆதலினால்
அது
நாலாம் படைக்கும்
மேலாம் படைதான்!

உத்தமத் தலைவருக்கு
உறைவிடம் தந்ததனால்
தௌர் குகைக்கு
சிலந்தி என்கிற
சிறிய பிரமுகர்
பொன்னாடை போர்த்திப்
போற்றினாரோ?

சிலந்தி வலை என்னும்
கலங்கரை விளக்கம்
தேடி வந்த
பகைக் கப்பல்களைத்
திசைதிருப்பி அனுப்பியது..
மனித குலத்தின்
மாலுமியைக் காப்பதற்கு!

சிலந்தியே!
பெருமானாருக்கும்
பகைவருக்கும் நடுவே
நீ ஒரு திரை போட்டாய்!
அந்தத் திரையில்தான்
உத்தம நபியாம்
ஓவியக்காரர்
சாந்தி மார்க்கம் என்ற
சித்திரத்தை வெகு
சிறப்பாகத் தீட்டினார்!

சிலந்தியே! நீ பின்னிய
வலையின்
விலை என்ன தெரியுமா?
அன்றாடம் அதை
ஐந்துமுறை செலுத்துகிறார்!
லட்சோப லட்சம்
பள்ளிவாசல்களில் கேட்கும்
பாங்குச் சத்தம் – உன்
பங்குக்கு மார்க்கத்தார்
பகிர்ந்து தரும் சத்தம்!

ஆண்டவனே நீயொரு
அதிசயமானவன்!
உலக எதிரிகளை
ஊதி அழிக்கின்ற
பாதுஷாமாருக்கும்
கிடைக்காத பாக்கியத்தைச்
சாதாரண சிலந்திக்குத்
தந்தவன் நீ!
உன்னுடைய
பேரருளை நினைத்துப்
பிரமித்துப் போகின்றேன்!

இறைவா!
என்ன நாடகம் இது?
இரும்புக் கோட்டைக்குள்
இருப்பதாய் நினைத்தபடி
தருக்கிக்கொண் டிருப்போரின்
தர்பார் புகழையெல்லாம்
ஒரு சிலந்தி வலைமுன்னே
சேதப்படுத்தினாய்..
என்ன நாடகம் இது?

படைத்தவனே! நீ எம்மைப்
பாதுகாக்க நினைத்துவிட்டால்
படைபலங்கள் தேவையில்லை
சின்னஞ் சிறியதொரு
சிலந்தி வலைகூடப்
போதும் – என்பதை
நாங்கள்
புரிந்து கொள்ள முடிகிறது!

News

Read Previous

வாராமல் காத்திடுவோம் !

Read Next

உலக எய்ட்ஸ் தினம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *