நாயகம் எங்கள் தாயகம்

Vinkmag ad
நாயகம் எங்கள் தாயகம்
–வலம்புரிஜான்
 
7.  அன்னை மடியில் அண்ணல் !
 
(பக்கம் 86 – 90)
“எவர் வளர்ப்பார் ஏந்தல் முகம்மதை?”
பாட்டனார் முத்தலீஃப்பை
பருவம் –
பதம்பார்க்கத் தொடங்கியது …
அவரது முதுகு
வானவில்லைப் போல
வளையத் தொடங்கியது …
தோலின் சுருக்கங்கள்
மலை ஏறுகிறவர்கள்
வெட்டிய படிக்கட்டுகளைப் போல
மதர்த்து நின்றன !
அல்லா என்னை
அழைக்கிறான்.
புறப்படுவதற்கு முன்னர்
அநாதையான முகம்மதுவை
உரியவரிடம் ஒப்படைக்கவேண்டும் !
கவலை கட்டிய
கண்ணீர்க் கூடுகளால்
முத்தலீஃபின்
புருவக் கிளைகள் …
முறியத் தொடங்கின !
மக்களை அழைத்தார்.
அன்னை தந்தை அன்பறியாத
அனாதைக் குழந்தை
ஆர் வளர்ப்பீர்கள்?
கேட்டார் முத்தலீஃப் !
அபூலஹப் எழுந்து வந்தார்.
நான் வளர்ப்பதென்றால்
நல்லது என்றார் …
முத்தலீஃப் பார்த்தார் –
நீ
பெரும்பணக்காரன்.
பொதுவாகவே
பணக்காரர்களிடத்தில் …
ஈரம் இடம் பெயர்ந்தால் தான்
பணச்செடி
பழுக்கத் தொடங்குகிறது !
ஆகவே …
அனாதையை வளர்க்கும்
ஆரம்பத் தகுதி கூட
உனக்கு இல்லை
அறைந்தார் முத்தலீஃப் !
அடுத்து ஹம்சா வந்தார்.
முத்தலீஃப் அவரை நோக்கி
முறுவல் பூத்தார் : எனினும் சொன்னார் –
புறப்படு ; போகலாம் என்று
சொல்லாமல் சொல்லும்
கைகாட்டி மரங்கள்
நாம் பெறும் குழந்தைகள் !
இறைவனைச் சுட்டும்
இன்பக் கேணிகள் – குழந்தைகள் !
இதுவரை உனக்குக்
குழந்தைகள் இல்லை.
மனிதக் காலையை
பார்க்காத உனக்கு
மழலையின் உச்சம்
எப்படிப் பிடிபடும்?
மன்னிக்க வேண்டும்
என்றார் பிதாமகர்!
அடுத்து வந்தார்
அப்பாஸ் என்பவர் …
இவர்தம் குழந்தைகளை
எண்ணவோ
வேறு கைகளைத்தான்
விலைக்கு வாங்கவேண்டும்.
உள்ளது போற்று!
உனக்கேன் சங்கடம்?
உதறினார் முத்தலீஃப்.
அடுத்து வந்தவர்
அபுதாலீஃப் …
பணக்காரன் நீ இல்லை.
பிள்ளைகளும் அதிகம் இல்லை.
உரைப்பதெல்லாம்
உண்மைதான் ;
தகுதி உண்டு உன்னிடத்தில்
என்றாலும் …
ஆறுவயதுப் பிள்ளை என்று
ஆரும் கருதல் ஆகாது!
இது –
எடைக்கல்லும் அல்ல ;
எதிர் அமரும் கிழங்கும் அல்ல ;
இறைவன் கைத்தாராசு.
ஆகவே –
அவரிடமே கேட்போம்
ஆண்டவன் சித்தம்
என்றார் முத்தலீஃப்.
அதிக நாள் வாழ்ந்திரேன்
அன்புப் பிள்ளாய்!
நான் வளர்ப்பேன் என்று
நால்வர் வந்துள்ளார்.
உம் விருப்பம் என்ன ?
உதிர்ந்தார் முத்தலீஃப்.
சூரியனை உமிழுகின்ற
சுத்தவெள்ளைத் தாமரைபோல்
முகம்மது மலர்ந்திட்டார்
எழுந்தார் ; நடந்தார் ;
அபூதாலீஃப் மடியினிலே
அடைக்கலமே ஆனார்கள்.
நாவல் பழம் போன்ற
முத்தலீஃப் கண்ணிரண்டும்
நழுவி விழுந்தது ;
நாளெல்லாம் அழுதது.
அண்ணல் அடைக்கலமானார்

News

Read Previous

அழிந்துபோன உயிரினத்தை மீட்க முடியுமா?

Read Next

அன்பு

Leave a Reply

Your email address will not be published.