துளி துளி மழைத்துளி

Vinkmag ad

தூறும் மழைதான் துயரம் துடைக்கும்

மீறும் பிழையால் மிதமும் உடைக்கும்

இடைமழை வரம்தரும் இயல்பில்  நல்லதாம்

அடைமழை   நகரம்   அழிப்பதில் தொல்லைதாம்

முகிலும் முகிலும் மோதிடும் வேளையில்

திகிலும் மிகைத்திடும் திகில்தான் சூழுமே

சூறைக் காற்றுச் சுழலும் சொந்தம்

பாறை  மேலே படரும் சந்தம்

உயிர்களும் மழையை உயிராய் எண்ணும்

பயிர்களும்  மழையை பசியா(ற)    உண்ணும்

வானம்  அழுது வடித்து வழியும்

ஈனம்   பொழுதில் இடிந்து ஒழியும்

நிலத்தை மழைத்துளி நெகிழ்ந்து  நிறைக்கும்

நலத்தை விதைத்திட நிலமும் சிரிக்கும்

மண்ணில் மழைத்துளி மலரும் வாசனை

எண்ணி  மகிழ்வதால் இனிமை வீசுமே

பஞ்சமும் நாட்டில் பரந்துளப் பசியும்

அஞ்சியோர் வாழ்வில் அல்லலும் மசியும்

ஆற்றின் ஓட்டம் அழகுற நண்பன்

சேற்றில் நாட்டும் செயலில் வம்பன்

கடலின் நீரால் கருவாய்ப் பிறந்தான்

திடலின் சேறால் திருவாய்ச் சிறந்தான்

பிறந்த கடலில் பின்னர் மீட்சி

சிறந்த வாழ்வியல் செப்பும் சுழற்சி

— அதிரை கவியன்பன் கலாம், அபுதாபி

News

Read Previous

கடவுள் மொழிபேசும் கடவுள்

Read Next

மழை

Leave a Reply

Your email address will not be published.