சொல்லத்தான் நினைக்கிறேன்

Vinkmag ad

சொல்லத்தான் நினைக்கிறேன்

முகவை இதயா

அன்னையின் கருவறை விட்டு

அகிலத்தின் மண்ணறைதொட்டு

மலர் கொத்தாய் மலர்ந்தேன்…

பக்கத்து வீட்டுப்

பரிமளம் பாட்டி

பரிதாபத்துடன் சொன்னாள்…

“பொட்டச் சிறுக்கி

பொறந்திருக்கா”

அப்போதே

வாயை மூடடி

வாயாடிக் கிழவியென

சொல்லத்தான் நினைத்தேன்

ஆனால்

சொல்ல வாய் இல்லையே !

 

படிப்பில் கெட்டித்தனம்

துடிப்பில் சுட்டித்தனம்

பாராட்டுப் பட்டங்கள்

பலர் தந்த போதிலும்

பொட்டைக்கு ஏனிந்த

பொல்லாத படிப்பெனும்

கடுப்போடு சொல்லி எனை

அடுப்போடு அடைத்து வைத்தார்

என் தந்தை…

அப்போதும்

சொல்லத்தான் நினைத்தேன்

ஆனால்

சொல்ல வயதில்லையே !

 

”பெரிய மனுஷி”

ஆயிட்டா நம்ம

அருக்காணி

நாணில் புறப்பட்டுச்

சீறிப்பாயும்

சிறிய அம்பு போல்

செய்தி பரவியது

 

செவ்வனே ஊருக்குள்

குலமகளிர் குலவையிட

முறைமாமன் பந்தலிட

சந்தனம் பூசி – நல்

மந்திரம் ஓதி

பக்குவமாய் நடந்தன

பாரத நாட்டுப்

பண்பாட்டு முறைகள்

அன்று முதல்

சிறகிருந்தும்

கூண்டுக் கிளியானேன்

சீசாவிற்குள்

சீறும் அலையானேன்;

அப்போதும்

சொல்லத் தான் நினைத்தேன்

சொல்ல உணர்வில்லையே !

 

பருவம் வந்தது

ஆசைகளும் என்

பக்கம் வந்தன…

கனவில் வந்த ராசகுமாரன்

என் நனவில் வருவானோ?

 

அழைத்து வந்தார்

என் தந்தை…

 

இமைகள் துடிக்க

விழிகள் சிவக்க

இதயம் வலுக்க

சன்னல் ஓட்டை வழியே என்

அண்ணல் நோக்கினேன்

 

திருமணச் சந்தையின்

திருந்தாத பேச்சுக்கள்

அசிங்கமாய் அரங்கேறின…

விலை சற்று படியவில்லை

 

படி கடந்ததார்

தாய் சொல் தட்டாத

தனயன்

அப்போது கூட

சொல்லத் தான் நினைத்தேன்

ஆனால்

சொல்ல வழியில்லையே !

 

முப்பது வரன்கள்

முட்டிப் பார்த்து

செவ்வாய் தோசமென

ஒவ்வாமல் பேசியே

முப்பது வயது

முடிந்து போனது… எனக்கு ..

 

”விளங்கா சிறுக்கி”

இது

அம்மாவின் அன்புச் சொல்…

“சுமை கழுதை”

அப்பாவின் அழகுப் பட்டம்

“வயசாளி”

வரன்களின் வசைபாடு

இத்தனைக்கும் நடுவில்

நான்…

 

ஒன்றே ஒன்று மட்டும்

இப்போதாவது சொல்லிக் கொள்கிறேன்

 

ஏ, சமூகமே !

பஞ்சாங்கத்தைப்

பொசுக்கி விடு

இல்லையேல்

பெண்ணிணத்தை

நசுக்கி விடு

கை கூப்பிப் பெண்ணை

கடவுளாய் வணங்கி விட்டு

காலடியில் போட்டுப்

பொண்ணை

காலமெல்லாம் மிதிக்காதே.

 

கங்கை யமுனை யெனப்

பெண் பேரை

நதிகளுக்குச் சூட்டி

பெண்மையை உண்மையில்

சவக்குழியில் தள்ளாதே !

 

ஏ சமூகமே !

திருந்தி விடு…

இல்லையேல்

கண்ணகியால்

பற்றி யெறிந்து பாழ்பட்ட

மதுரை போல்

அகிலமெல்லாம்

அழிந்து போக

நான் தருவேன்

சாபம்.

News

Read Previous

நம்பிக்கை வேண்டும்

Read Next

பணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *