செம்மொழியான தமிழ் மொழியாம் !

Vinkmag ad

 

–    கவிஞர் அத்தாவுல்லா –

 

மொழிகளில்

நீ மூத்த மொழி

கல்தோன்றி மண்தோன்றும் முன்னமே

பூத்த மொழி !

 

நீ – ஒரு வகையில்

வானம் போல் !

பார்க்கவும் படிக்கவும்

முடிகிறது

தூரம் மட்டும்

இன்னும் தென்படவேயில்லை !

 

நீ – ஒரு வகையில்

பூமி போல் !

தோண்டத் தோண்ட

எங்கும் சுவை நீராய் !

 

நீ – எங்கள் மூலதனம்

சேதாரப்படாத

செல்வக்களஞ்சியங்கள்

உன்னில் அதிகம் !

 

எம்மொழியிலும் இல்லாமல்

தம்மொழிக்குள்ளேயே

மும்மொழி கண்ட

செம்மொழி நீ !

 

முக்கடலும் முத்தமிடும்

தென் குமரியைப் போல்

இயல் –

இசை –

நாடகம் எனும்

முத்து உறையும்

முத்துறையும் உனக்குள் !

 

நீ …

உயிராய் …

மெய்யாய் …

உயிர்மெய்யாய்

உலகமெங்கும் கோலாச்சுகிறாய் !

 

முச்சங்கங்களில்

வளர்ந்த பயிர் நீ

கபாடபுரங்களில்

கலந்த கடல் நீ

எங்களின் உயிர் நீ !

 

இமயவரம்பில்

இசைக்கும் சிலம்பு நீ

எங்கள் இதயக்கூட்டில்

சுரக்கும் அமுது நீ !

 

நீ பாதி மனிதனின்

படையல் இல்லை

ஆதிமனிதன்

பேசிய அதிசயம் !

 

உன் மூத்த முகிழ்வே

காப்பிய இலக்கணத்தை

யாத்த நெகிழ்வாய்

எழுந்து நிற்கிறது !

 

ஒப்புக்குக்கூட வடிவமெனும்

துப்பில்லாத மொழிகளிடையே

தப்பில்லாத மொழி நீ

ஒப்பில்லாத மொழி நீ !

 

சுரந்த பிற மொழிகளின்

தாய் மடி நீ

தனித்து நிற்கும் தனித் தமிழ் நீ !

 

எல்லா மொழிகளிலும்

கட்டில் உண்டு

உனக்கு மட்டும்தான்

நாகரீகத் தொட்டில் உண்டு !

 

சுரைகளைச் சுமந்த ஏடுகளே

அநேக இடங்களில்

மொழிகளாகின்றன !

 

மொழிகள்

ஒருவகையில் வேட்கையைப் பேசுகின்றன

நீ மட்டும் தான்

வாழ்க்கையைப் பேசுகிறாய் !

 

எழுத்தும் சொல்லும்

எங்கும் அடங்கும்

‘பொருள்’ – நீ மட்டுமே

பெற்ற அருள் !

நீ மட்டும் தான்

வாழ்க்கை முறைகளையே

வடித்துக் காட்டுகிறாய் !

 

அதனால் தானே

களவியலில் கூட

கற்பியலைப் பேசுகிறாய்

பாலையிலும்

தென்றலாய் வீசுகிறாய் !

 

மொழிகளில் கூட

குலங்களைக் குறிக்கிறார்கள்

நீ மட்டும் தான்

நிலங்களைக் குறிக்கிறாய் !

 

முல்லை …

குறிஞ்சி …

மருதம் …

நெய்தல் …

பாலை என்று

ஐவகை நிலங்களைக் குறிக்கிறாய் !

வாழ்க்கை முறைகளை

நெறிப்படுத்துகிறாய் !

 

காலக்கணக்குகளைக் கூட

மேற்கணக்கு

கீழ்க்கணக்கு – என

கணித்திருக்கிறாய்

நீ மட்டும்

காலம் கணிக்க முடியாமல்

இனித்து நிற்கிறாய் !

 

எல்லா மொழிகளும்

‘புறம்’ பேசுகையில்

நீ மட்டும் தான்

‘அகம்’ பேசுகிறாய் !

 

அநேக விழுதுகள் உன்னில்

நீ மட்டும்

வீழாத ஆலவிருட்சமாய் !

 

இறைவன் தந்த

மதி மூலம்

நதி மூலம் கூடக்காணலாம்

உன் ஆதிமூலந்தான்

காண முடியாத

அற்புதமாய்

அதிசயித்து நிற்கிறது !

 

படிக்கப் படிக்கப்

பெருகும் உன் அற்புதம்

வடிக்க வடிக்க

மிஞ்சும் சொற்பதம் !

 

பரவாயில்லை

காலம் கொஞ்சம் கடந்தேனும்

உனக்கொரு

கவுரவம் கிடைத்திருக்கிறது

அதில்

எங்கள் மனம்

நிறைந்திருக்கிறது !

 

 

News

Read Previous

யூனுஸுக்கு ஆண் குழந்தை

Read Next

இந்தியாவில் காணாமல் போன மொபைல் திரும்ப கிடைக்க …..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *