சிந்துபூந்துறை

Vinkmag ad
சிந்துபூந்துறை
=======================================ருத்ரா
நைல் நதியாம்
தேம்ஸ் நதியாம்
கங்கை யமுனைகளாம்.
யாருக்கு வேண்டும் அவை?
திருநெல்வேலியின்
தாமிரபரணி
தன் பளிங்குக்காகிதத்தில்
மெல்லிய கிசு கிசுக்களை
கவிதையாக்கி எழுதித்தருவாளே!
அதில் உலக இலக்கியம்
கூழாங்கற்களாய்
உருண்டு உருண்டு வரும்.
புதுமைப்பித்தன்
தன் மந்திரப்பேனாவை
அதற்குள் தான்
ஒளித்து வைத்திருந்தானா?
கரையோரத்து
பனங்குட்டிகளையே
தன் “விசிறிகளாக்கி”க்
கொண்டவன் அவன்.
அந்த “கயிற்றரவும்”
மற்றும்
“கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்”
சிந்துபூந்துறையின்
ஆற்றங்கரையில்
நெய்யப்பட்ட‌
சமுதாயத்தின் ஆற்றுப்படைகள்
அல்லவா!
சென்னை திருவல்லிக்கேணி வரை
அந்த ஆற்று அலைகளின்
திவலைகள் தெறிப்பதுண்டு.
மேரீனா அலைகளும்
சிந்துபூந்துறையில் வந்து
சிலிர்த்துக்கொள்வது உண்டு.
வறுமை
என்ன அவ்வளவு பயங்கரமா?
ஆம்.
நாம் என்றால்
கிழிந்த பாயின் கந்தலாய் அல்லவா
கிடப்போம்.
அவன் அதன் ஆழத்தில்
முக்குளித்து
இலக்கிய முத்துக்களை
அள்ளிக்கொண்டிருப்பான்.
“சுண்டெலியும் மனிதர்களும்”
என்ற உலகப்புகழ் பெற்ற‌
நாவலைத்தந்த‌
ஸ்டீன்பெக்கின்
எழுத்தின் மணம்
மனிதனை சவமாக்கி விடுகிற‌
வறுமையையே
அடித்து சவட்டி விட்டது.
அப்படி
புதுமைப்பித்தனின்
எழுத்துக்கள்
சமுதாய கோரைப்பற்களின்
இடையிலும் புகுந்து கொண்டு
மயிலாப்பூர் சாக்கடையின்
கொசுக்களை விரட்டி அடித்தது.
அவன் எழுத்துக்களுக்கு
ரீங்காரத்தை சுருதி சேர்க்க‌
அந்த கொசுக்கள் எனும்
“சிறகு முளைத்த” குண்டூசிகள் தான்
உலாக்கள் வரும்.
கலைவாணியின்
நவரத்ன வீணையா வந்து
“ஆனந்த பைரவியை” பாடும்.
தமிழ்ச்சிறுகதைகளில்
அவன் சொற்றுளிகளின்
சிற்றுளிகளில்
எங்கிருந்தோ ஒரு விடியல் சிற்பம்
“சில்ஹௌட்” எனும் கீற்று வெளிச்சத்தை
கசிய விட்டுக்கொண்டே இருக்கும்.
சிந்துபூந்துறை
தண்ணீர் அல்ல.
ஆறு அல்ல.
உயிர்ப்போடு ஓடுகின்ற‌
அவன் எழுத்துக்களின்
இன்றைய மியூசியம் அது.

News

Read Previous

அலறிய காமராஜர்

Read Next

உதவி கரம் நீட்டுவோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *