காதல்!

Vinkmag ad

இது காதலர் தினத்திற்காக இல்லை,
காதலுக்காக!
**********

— கவிஞர் அத்தாவுல்லாஹ் —
சூரிய சந்திரனோடு
பூமியைச் சுற்றும் நவகிரகங்கள்
இன்னொரு கிரகமாய்
காதல்!

சிலருக்குக் கனி
சிலருக்குச் சனி!

ஆதாம் கடித்த
அந்த கனியின் மிச்சம்
இன்னும் கொஞ்சம்
சொச்சம் இருப்பதால்தான்
காதலின் எச்சம்
இருந்து கொண்டிருக்கிறது!

காதல் இல்லை என்றால்
இந்தப் பூவுலகம்
எப்போதோ புழுத்துப் போயிருக்கும்!

அந்த அபவாதம்
நடக்கக் கூடாதென்றுதான்
நடக்கிறது – இந்த ரசவாதம்!

இந்த உலகின்
அழகான மொழியாக
அங்கீகரிக்கப் பட்டிருப்பது
காதல் மட்டும்தான்!

அதனால்தான்
இது எல்லா மனங்களிலும்
நேசிக்கப் படுகிறது
உலகம் முழுவதும்
வாசிக்கப் படுகிறது!

பேசுவதென்னவோ மவுனம்தான்
ஆனாலும்
அமர காவியங்களை எல்லாம்
அற்புதமாய் ஆக்கி விடுகிறது!

இங்கு மட்டும்தான் –
ஊமைகள் பேசுகிறார்கள்…

காது கேளாதோர்
கேட்கிறார்கள் …

விழியிழந்தவர்
பார்க்கிறார்கள்!

இது பாகுபாடு காட்டாத
பரலோகம்போல!

இங்கே கேளுங்கள் –
தரப்படும் –
காதல் வரங்கள் …

தட்டுங்கள் –
திறக்கப்படும் …
இதயங்கள் ….

தேடுங்கள் –
கண்டெடுக்கப் பெறுவீர்கள்
துணைகளை…

இங்குதான் நீங்கள்
குழந்தைகளைப்போல
குதூகலப் படுவீர்கள் !

ஞானிகளைப் போல்
ஏகத்துவம் ரசிப்பீர்கள்!

இங்கே
ஞானிகள்
ஒதுக்கப் படுகிறார்கள்
சாத்தான்கள்
செதுக்கப் படுகிறார்கள் !

இது விழிகளின் முத்தம்
அதனால்-
வெளியில் கேட்காது சத்தம் …
மனம் மட்டும் பரிசுத்தம்!

மானுடம் நேசித்தல் காதல்
மனங்களை நேசித்தல் காதல்
மானுடம் நேசித்தலின்றி
இறைவனை நேசித்தல் எங்கனம்?

காதல் –
காலம் முழுவதற்குமானது!
வாழ்க்கை முழுவதற்குமானது!

விழித் தூரிகைகள் கொண்டு
இதயங்களில் எழுதப்படும்
வாழ்க்கைப் புத்தகம் காதல்!

அதை ஒருநாளைக்கு மட்டும்
கூத்தாடிக் கொண்டாடுவதில்
எனக்கு உடன்பாடில்லை!

வாழ்நாள் முழுவதும்
நாம் காதலை நேசிப்போம்
கடவுள் நம்மை நேசிப்பான்!

துபாயில் ஒரு கவியரங்கில் பாடப் பெற்ற கவிதையின் ஒரு பகுதி….

News

Read Previous

திமுக கூட்டணி அதிருப்தி

Read Next

காதலர் தினம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *