காஞ்சியிலே பிறந்த அண்ணா

Vinkmag ad

அரவணைக்க வருவாரா !

(எம். ஜெயராமசர்மா ….. மெல்பேண் )

 

காஞ்சியிலே பிறந்த அண்ணா

கண்ணியத்தைக் காத்தமையால்

வாஞ்சையுடன் அவரைமக்கள்

மனத்தினிலே இருத்திவிட்டார்

 

வாமன உருவுடையார்

மனங்களை வெற்றிகண்டார்

தூய்மையாய் ஆட்சிசெய்ய

துணிவுடன் அண்ணாவந்தார்

 

இன்பத் தமிழுடனே

இங்கிதமாய் ஆங்கிலத்தை

பங்கமின்றிப் பேசி

பலபேரும் மெச்சநின்றார்

சங்கத் தமிழறிவார்

சபையறிந்தும் பேசவல்லார்

எங்கும் அவர்முழக்கம்

ஈடின்றி ஒலித்ததுவே

 

எதிரிகளைக் கூட அவர்

இன்முகமாய்ப் பார்த்தாரே

சதிகாரக் கும்பலையும்

தலைவணங்க வைத்தாரே

நட்புக்கு இலக்கணமாய்

நம் அண்ணா இருந்தாரே

நாடெல்லாம்  அவர்புகழை

நாளுமே சொல்லுதிப்போ

 

மதிநுட்பம் மிக்க அவர்

மன்னிக்கும் இயல்புடையார்

நதியாகி நின்றுஅவர்

நாட்டு வளமானாரே

பொதுவாகப் பேசிடினும்

பொடிவைத்துப் பேசிடுவார்

நிதிபோல இருந்ததனால்

நெஞ்சமெலாம் நிறைந்துவிட்டார்

 

தென்னாட்டின் பேர்னாட்ஷா

என்றழைத்தார் அண்ணாவை

சீர்திருத்தக் கருத்தையெலாம்

சினமின்றிச் சொல்லிநின்றார்

மற்றவரின் மனமுடைய

வக்கிரமாய்ச் சொல்லாது

தேனோடு மருந்தாக

சிந்தனையை ஊட்டினரே

 

வெற்றிலை காவியொடு

வீசிஎறி சால்வையுடன்

வித்தகர் சபைதனிலே

விபரமாய்ப் பேசினரே

எத்திக்கு வினாவரினினும்

எதற்குமே அஞ்சாது

ஏற்றபதில் கொடுத்தாரே

எமதருமை அண்ணாவும்

 

எதிர்க்கட்சி சொன்னாலும்

ஏற்றுநிற்கும் பண்பாளர்

எதையுமே தனக்காக

எடுத்தொதுக்கி வைக்கவில்லை

மாடிமனை சேர்க்கவில்லை

வங்கியிலும் வைக்கவில்லை

தேடிதேடி வாசித்தார்

திறனுடய நூல்களையே

 

பண்புநிறை அரசியலை

பலருக்கும் காட்டிநின்றார்

தன்புகழைப் பாடாது

தரமுடனே அவர்நின்றார்

அன்புகொண்டு அரவணைத்தார்

ஆரையுமே நோகடியார்

துன்பமெலாம் பட்டிடினும்

துடிப்புடனே செயற்பட்டார்

 

அண்ணாவின் அடியொற்றி

ஆரையுமே காணவில்லை

அவர்பெயரைச் சொன்னபடி

ஆட்டமெலாம் போடுகிறார்

அண்ணாவின் கால்பதிந்த

அருமைத் தமிழ்நாடே

அண்ணாவைப் போலொருவர்

அரவணைக்க வருவாரா !

News

Read Previous

ஏடிஎம் ரசீது தாள்களால் புற்றுநோய் ஏற்படுமா? ஒரு பகீர் தகவல்

Read Next

செப்டம்பர் 23, மதுரை காமராசர் பல்கலைக்கழக நிகழ்வு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *