கவிக்கோ நீ ஒரு இலக்கியப் புவிக்கோ!

Vinkmag ad

கவிக்கோ அப்துல்ரகுமான் புதுக்கவிதையுலகின்
புவிக்கோ
புவியுலகில் மெய்யுடலால்
நம்மை விட்டு ‘அகன்ற’
இந்நாளில், நினைவுகளெல்லாம்
அவருடன் மனமொத்துப் பழகிய
அழகிய நாட்கள் நெஞ்சில்
ஈரமாய் என்றென்றும், இன்றும்.. .!

நினைவுகளின் தொடரலைகள்
உங்களுடன் … !
……………………………
கவிக்கோ நீ ஒரு இலக்கியப்
புவிக்கோ!

கவிக்கோ நீ
கண்ணியக் கடலில்
விளைந்த பவளம் !

தொப்பியை
கழற்றினால் மட்டும்
தலை கவிழ்கிறது
உன் பேனா
வார்த்தைகளுக்கு !

வாடிய கவியுலகில்
தேடியபோது
தேடாமலே ஓடிய வைகைக்கரைதொட்டு
பாடியே வந்துதித்த கவிக்கோ !

உன்னை வாசித்தால்
பொற்கோவை
இதழ் மடியும்
பால்கோவாவின்
சுவை வடிவம் !

தட்டிலே மட்டும் அழகாய்
பட்டினில் பொதிந்த கவிதையை
சுட்டிடும் அழகு தீபமாக்கி
விட்டிலாய் தமிழர்களை
சுட்டிட அழகு பார்த்தவர் !

சேற்றுக்கு மேல் நின்றாடும்
நாற்றுக்கு நளினமாய்
காற்றுக்கே கவிதை பாட
கற்றுத்தந்த காற்றாடி !

பண்டிதர் மட்டுமே படித்து
ஒண்டியாய் இழுத்த தமிழ்த்தேரை
புதுக்கவிதை வடம் பூட்டி
பாமரனுடன் உலாவரவைத்த கவிக்கோ !

நீயோ
தலைக்கனமற்ற புள்ளி
எளியவரும் வறியவரும்
எப்பொழுதும் தேடிவரும்
பெரும் புள்ளி !

நேர்மையும் தர்மமும்
நித்தமும் நீதொழும் பள்ளி !
என்போன்ற தமிழ்க்கவிதை
ஆர்வலருக்கு நீ ஒரு
தமிழ்ப்பள்ளி !

அறிவுசார் கவிஞர்க்கோ
கல்விச்சாலையின் தரமான
தனிப்பள்ளி !

இன்னும் தொட்டுப்பார்த்து
ரசிக்க நினைக்கும்
தமிழ்த்தோழி !

கவிதை எழுத என்
பேனா நினைக்கும்
போதெல்லாம்
வருகிறாய் நீ ஒரேஒரு
விடிவெள்ளி !

நீ கவிதை விஞ்ஞானி
இலக்கியப் பொறியாளர்
செந்தமிழ் ஓடத்தை
உந்த வைத்து ஓட்டிய
புதுக்கவிதைத் துடுப்பு !

கவிதைப் பட்டறையில்
கனன்ற ‘படிம’ உருக்கு !
வார்த்தை இருப்புக்களை
புதுப்பொலிவால்
புடம்போட்டு கூராக்கியவன் !

யாப்பையும் தளையையும்
‘காப்பு’க் கட்டிவத்து
புதுக்கவிதைத் திருவிழாவுக்கு
புதுமரத்தில்
கொடியேற்றியவன் !

கண(நேரத்)த்துக்குக்
கணக்கு பார்த்துக்
கவிதை வார்த்தைகள்
வர்த்தகமாகும்
வெள்ளித்திரைச் சந்தையில்
பணத்துக்கு
விலை போகாதது
உன்பேனா !

நீ கண்ட நல்ல தமிழ்க்கனவுகள்
நிஜமாய் பலிக்கட்டும்
நிறைவாய் தமிழ்த்தாயின்
தமிழமுது வற்றாது சுரக்கட்டும் !

உன் நினைவுகளால்
என்றென்றும் …

மஸ்கட் மு. பஷீர்

News

Read Previous

கவிக்கோ

Read Next

அச்சம் என்பது மடமையடா அல்லாஹ்வின் துணை இருக்கையிலே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *