கள்ளோடு கவியாக்கி உயரத்தில் ஏற்று மனமே!- கவியரசு கண்ணதாசன்

Vinkmag ad

கோடிட்ட முந்தானை 

       கொஞ்சிக் குழைந்தாடக் 

கோலமயில் போலவரு வாள்  

       கொடியோடும் இடையாட  

இடையோடும்  கனியாடக்  

       குழல்மூடி ஆடிவரு வாள்  

 

காடிட்ட வெண்பூக்கள் 

       கடைவாயில் நின்றாடக்  

கண்ஜாடை நடனமிடு வாள்  

       கட்டான திருமேனிப்  

பட்டாளம் கொண்டென்னைக்  

       கைதாக்கிச் சிறையிலிடு வாள் 

 

ஊடிட்டுக் கூடிட்டு 

       உடலோடு சுவையிட்டு  

உறவாடும் வஞ்சி மயிலை  

       உள்ளத்தின் உள்ளூறும்  

கள்ளோடு  கவியாக்கி 

       உயரத்தில் ஏற்று மனமே!

 

வாராழி கலசங்கள்  

       தேரேறி வருகின்ற  

வடிவங்கள் சொர்க்க மிலையோ  

       வைகாசிப் பிறைப் போலக்  

கைவீசி நடமாடும் 

       மஞ்ஜைகள் தெய்வ மிலையோ

 

நீராழி அலைசாய 

       நிலையான தவ ஞானம் 

நிகழ்கின்ற உலக மிலையோ 

      நிழல்தேயு மானாலும்  

சுவைதேய மாட்டாது  

       நீள்கின்ற இரவு மிலையோ!

 

ஓராழி அளவாக  

       உலகத்தின் கதைசொல்லி  

உறவாடும் கன்னி மயிலை 

      உள்ளத்தின் உள்ளூறும் 

கள்ளோடு  கவியாக்கி 

       உயரத்தில் ஏற்று மனமே!

 

 

கவியரசு கண்ணதாசன்

News

Read Previous

பென்டிரைவ் வைத்து உள்ளிர்களா ?

Read Next

முதுகுளத்தூர் சோணைமீனாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கருத்தரங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *