கனவு காணுங்கள்

Vinkmag ad

“கனவு காணுங்கள்”
===============================================ருத்ரா

“கனவு காணுங்கள்”
மேதை திரு அப்துல்கலாம்
நமக்கு விட்டுச்சென்ற வரி.

இதற்கு உறங்க வேண்டும்.
அதற்கு ஒரு வீடு வேண்டும்
அதற்கும் ஒரு முகவரி வேண்டும்.
காடோ நாடோ
அதுவும் வேண்டும்.
ஹிட்லரோ காந்தியடிகளோ
யாராவது வேண்டும்.
அதர்மத்தை வைத்துதானே
தர்மத்தை அடையாளப்படுத்த முடியும்.
பூனை தூங்கினாலும் சரி
அடுப்பு வேண்டும்
அவ்வப்போது
அது எரியவும் வேண்டும்.
தீயை அணைக்க தீயே வேண்டும்.
பசியை அணைக்க சோறு வேண்டும்
சோறு தின்ற பிறகு
தூக்கம் வரலாம்.
அதில் கனவும் வரலாம்.
கனவுகள் ஆயிரம் வந்தது.
நான் விரும்பும் கனவும்
தலையணை ஓரங்களில்
நங்கூரம் பாய்ச்சவில்லை.
ஏசு நாதர் ஒரு ரொட்டித்துண்டை
வைத்து
ஆயிரம் ஆயிரம் பேர்களுக்கு
பசி ஆற்றினாராமே.
அந்த ரொட்டித்துண்டுகள்
எத்தியோப்பியாவின்
எலும்புக்கூடுகளின் பிரதேசத்தில்
மழையாய் பொழிந்தால் என்ன?
இன்னும்
வட்டமாய் சூரியனையும் நிலவையும்
மட்டுமே கண்டு
ஒட்டிய வயிறுகளில் கிடக்கும்
வாய்களுக்கு
இட்லியோ தோசையோ இல்லை
பேன்கேக்கோ
எதுவாவது கிடைத்துக்கொண்டிருக்கக்கூடாதா?
கோவில்களில் அன்னதானம்
கிடைக்கிறதே
இறைவனே கொடுத்தாலும்
அது பிச்சை தானே.
இறைவனுக்கு பசியெடுத்தது
அதற்காக பிச்சை எடு
என்று சொன்னாலும்
இறைவனின் பசி இப்படி
கொச்சைப்படுத்தப்பட‌லாகுமா
என்று
என் பசியை
அவன் பசிக்கு உணவாக்குவேன்.
என் கேள்விகளே
அவனுக்கு உணவுகள்.
கனவு
என்பது தூக்கத்துக்கான‌
தசை நார்களால் மிடையப்பட்டது
அல்ல.
எல்லாருக்கும் எல்லாமும் வேண்டும்.
இங்கு
இல்லாமை இல்லாமை ஆகவேண்டும்
என்று
ஒரு கவிஞன் கனவு கண்டான்.
அந்தக் கனவு முளைவிட‌
இந்த நிலத்தை துப்பாக்கிகள் கொண்டா
உழவேண்டும்?
ஐயோ
பேய்க்கனவா?
வேண்டவே வேண்டாம்.
…………….
…………….
கனவு காணுங்கள்….
அந்த மேதை சிரித்துக்கொண்டே
சொல்லிக்கொண்டே இருக்கிறார்.
நானும்
கனவு காணத்தொடங்கி விட்டேன்
மயிற்பீலிகளை க்கொண்டு
எரிமலைகள் கட கடக்கும்
பசி வயிறுகளில்
அந்த தீக்கடலின் அலைகளை
கிச்சு கிச்சு மூட்டுவதாய்
கனவு கண்டு கொண்டிருக்கிறேன்.

=====================================================

News

Read Previous

மருத்துவர் எஸ்.எம்.சந்திரமோகன்

Read Next

ஊரடங்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *