கண்ணிய கஃ பாவே …! போய் வரட்டுமா ?

Vinkmag ad

கண்ணிய  கஃ பாவே …!

போய் வரட்டுமா 😕

 

கவிஞர் மு ஹிதாயத்துல்லா

இளையான்குடி

 

( கடந்த 2011 ஆம் ஆண்டு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட கவிஞர் இவ்வாண்டு புனித ஹஜ் செய்யும் வாய்ப்பினைப் பெற்றார்.

 

புனித ஹஜ்ஜை முடித்து விட்டு புனித மக்காவினை விட்டுப் பிரியும் நேரத்தில் எழுதிய கவிதை )

 

 

 

பிரிய மனமில்லாமல் நான்

உன்னைவிட்டு

உன் மண்ணைவிட்டுப் பிரிகிறேன்.

போய் வரட்டுமா..?

 

கண்ணோரம் நீர்கசிந்து – என்

கன்னத்தை நனைக்கிறது

எதைச்சொல்வது

எப்படிச் சொல்வதென

மொழிகள் – முட்டிக் கொள்கிறது !

உற்சாகமாய் ………….

தல்பியா சொன்ன நாவு கூட

சோகம் உடுத்தியிருப்பதை …..

உணர்கிறேன் !

வாழ்வில் வசந்தம் என்கிறார்களே

அது

உன்னைப் பார்த்த பிறகுதான்

நிஜமெனத் தெரிந்தது !

 

கண் வழி புகுந்து

கல்பினில் நிறைந்த ….

க அபாவே !

அப்படி யென்ன

உன்னிடம் இருக்கிறது ?

கோடிக்கண்கள் பார்த்தும்

குறையாத அழகாயிருக்கிறாய் !

சங்கைக்குரிய எங்கள்

கோமான் நபி ஸல் அவர்கள் பார்த்த

குன்றாத பேரழகாய் ….

காட்சிதருகிறாய் …!

 

 

உன்னோடு இருந்த நாட்களை

இபாதத்தில் கரையவைத்தாய் !

எங்கள் ஈமானையும் கொஞ்சம்

புதுப்பித்து தந்தாய் !

உன்னைச் சுற்றி ….

மலைகள் !

மலையின் மடியில் .. இருக்கிறாயோயென

எண்ணத் தோன்றுகிறது !

அந்தக்

காலைச் சூரியன்

பனி நீரால்

தன் ஒளிக்கிரகணத்தை

உளுச் செய்து

விட்டு வந்தே

உன்னைப் பார்த்துப் போகிறது

 

 

குளத்தில்தானே … தாமரை !

ஆனால் … நீ

வெப்ப நிலத்தில் பூத்த …

தாமரையா …?

 

மனித சமுத்திரத்தையே

தவாபாய் … சுற்ற வைத்திருக்கிறாயே !

இந்த விந்தை

எந்த மண்ணிலும் கிடையாது

ஒருவனே இறைவனென்று

உரத்துச் சொல்லத்தானோ

உட்காராமல்

நின்று கொண்டிருக்கிறாய் ..!

 

கறுப்புத்திரையணிந்த

க அபாவே …!

ஒருவரையொருவர்

நேசிக்கலாம்

ஆனால் …

உலக முஸ்லீம்கள் அனைவரும்

உன்னை நேசிக்கிறார்களே …!

இது … காதலா…? இல்லை

அதையும் கடந்ததா..?

எனக்குச் சொல்லத் தெரியவில்லை !

 

தரைவழி வந்தால்

எங்கே … புழுதிபடியுமென்று

உன்னைக் காண

வான்வழி பறந்து வந்தேன் !

 

உன்னை மீண்டும்

காணத்தான் … ஆசை !

வல்ல அல்லாஹ்வின் நாட்டம்

எப்படியோ …?

 

இருந்தாலும்

உன்னைத் தினமும்

கனவிலாவது பார்த்துக்கொள்ள

உன்னை யென்

கண்களால் சுமந்து போகிறேன்

 

உன் மண்ணில் வாழ்ந்த நாட்களை

என் ஞாபக டைரியில்

வைரவரிகளால்

எழுதி வைத்திருக்கிறேன்

போய் வரட்டுமா ?

அல்லாஹு அக்பர்

News

Read Previous

கோபம்

Read Next

காகிதப் பூ மணக்காது, கள்ளிப்பாலும் சுவைக்காது !

Leave a Reply

Your email address will not be published.