கடுதாசி என்னும் காதல் பேசி

Vinkmag ad

நடுநிசி நேரத்துல

நானுந்தான் உறங்கல

கடுதாசி வரும்வரை

கதவையும் திறக்கல

என்னெஞ்சைப் புரிஞ்சவரே

எழுதுங்கக் கடுதாசி

மின்னஞ்சல் வேணாங்க

மின்னலாய் மறைஞ்சுடுமே

வாசக் கதவை மூடிவிட்டு

வாசிப்பேன் உன் கடுதாசி

நேசக் கதவைத் திறந்துவச்சு

நெஞ்சுக்குள்ளே பூட்டிவச்சு

மண்ணுக்குள் உழுதாக்கி

மறைச்சு வச்ச விழுதாக்கி

எண்ணத்தை எருவாக்கி

என்னையே கருவாக்கி

கடுதாசிப் பூ தந்தாய்

காகிதப் பூ ஆனாலும்

தொடுநேசிப்பு உணர்ந்தேனே

தொடரும் மன வாசனையில்..

கண்ணுக்குள் வாழுமென்

கண்ணான மச்சானே

பெண்ணுக்குள் மறைஞ்சுள்ள

பொக்கிசமாய் வச்சானே

உண்”மை”யால் நிரப்பிய

உன்கடுதாசி என்பேனா

உண்மையில் மனசாய்

உள்ளதெனக் காண்பேனா?

அழியாத காகிதம்

அதுவென் இதயம்

கிழியாத அதன்மேலெ

கிறுக்கினாய் உன்கடிதம்

அழியாத ஓவியம்

அழகான காவியம்

விழியோர முத்தம்

விழிக்கும் உணர்வின் சத்தம்

உன்கடுதாசிக் கவிதை

உள்ளத்தினுள் விதை

உன்கடுதாசிக்  கதை

உரசி உணர்வூட்டும் சதை!

படுதாயின்னுப் பரிதாபமாய்ப்

பாடுவதாய்ப் படிக்கின்றேன்;

கடுதாசி என்னோடு

கதறுவதாய்த் துடிக்கின்றேன்!

தூக்கத்தைக் கலைச்சுப்புட்டு

தூரத்தில் இருப்பவரே!

ஏக்கத்தை விதைச்சுப்புட்டு

ஏனுங்கக் கடுதாசி?

பாயும் பழமும்

பார்த்தென்னைச் சிரிக்குது

நோயும் நோவும்

நித்தமுமென அரிக்குது

கடுதாசி வேகத்திலெ

கடிதாக வாங்க மச்சான்

படுத்தாலும் தூக்கமில்லா

பரிதாபம் ஏங்க மச்சான்?

அதிரை கவியன்பன் கலாம், அபுதாபி

News

Read Previous

பாங்கு

Read Next

அவதானப் புலவர் அபூபக்கர்

Leave a Reply

Your email address will not be published.