என்னை அறிந்தால்

Vinkmag ad
என்னை அறிந்தால் …….. (அஜீத்  படம் பற்றி அல்ல )

என் எழுத்துக் கோர்வைகளை

என் கவிதைகளென்று வியந்து
என்னைப் பாராட்டும்
என் இனிய நண்பர்களே
என்னை அறியுங்கள்
என் திறனும் அறியுங்கள்
என்று நான் எழுதும்
என் சுய விமர்சனம் இது .
இலக்கணம் படித்தேன் பள்ளியில் பாடமாய்
பிலாக்கணம் செய்தேன் இது என் விதியென்று
மதிப்பெண் பெறவே மனனம் செய்தேன் -அன்றி
மதித்துப் படித்திலேன் மனமது ஒன்றி .
இலக்கணம் கற்கவில்லை
இலக்கியங்கள் படிக்கவில்லை
இலக்கியவாதியாகும்
இலக்கும் இருந்ததில்லை .
தொல்காப்பியம் , எனக்கு
தொல்லை காப்பியமாகும்
காப்பியம் படித்ததில்லை
காபிதான் குடிப்பதுண்டு
வெண்பா அறிந்ததில்லை
வெண்பொங்கல் தானரிவேன்
கலிப்பா எனக்கு
புலிப்பால் போலாகும்
ஆசிரியப்பா என்றால் – நான்
மாணவனப்பா என்பேன்
எதுகை என்றால்  -புற
முதுகைக் காட்டிடுவேன்
மோனை என்றாலோ
மௌனமாய் நின்றிடுவேன்
அணிகள் நானறியேன்
அணிகலன்கள் தானறிவேன்
தேமாங்காய் தெரியாது
வடுமாங்காய்தானறிவேன்.
புளிமாங்காய் தெரியாது
புளியங்காய் தானறிவேன்
மாமுன் நேர் நானறியேன்
மாமன் மகள் தானறிவேன்
விளமுன் நிறைஎன்பது
விளங்கவில்லை எனக்கு
அடியென்றால் அஜீத் என்பேன்
தொடை என்றால் ரம்பாவென்பேன்
சீர் நான் வாங்கியதில்லை
தளை எனக்கிட்டாரில்லை
விருத்தங்கள் தெரியாது – அதில்
வருத்தமும் கிடையாது.
வேற்றுமை உறுபுகளின்
வேற்றுமை அறிந்ததில்லை
பத்துப் பாட்டு தெரியாது
குத்துப் பாட்டுதான் தெரியும் .
பதினென் கீழ் கணக்கு – நான்
பருவத்தில் செய்தது .
தமிழின்பால் ஆர்வத்தால்
தகைத்திட்ட சிற்றறிவால்
வார்த்தைகளை நானடுக்கி
கோர்த்துக் கொடுத்தவற்றை
கவிதையென போற்றுகின்றீர்
களிப்படைகிறேன் நான் – சீ
கழுதையென்று ஏசினாலும்
கவலை கொள்ளேன்.
சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்
( துபாய் தமிழ்த் தேர் இதழ் வெளியீட்டு விழாவில் 2013ம் ஆண்டு எழுதி  வாசித்தது)

News

Read Previous

அன்பின் முகவரி அணைந்து விட்டது

Read Next

யோகா போட்டி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *