உறுதிமொழி

Vinkmag ad

மக்களுக்கு அன்பான வேண்டுகோள்

 
 
மாண்புமிகு  தமிழக மக்களே , 
மாண்பில்லாத , மாண்புகளைநம்பி 
மாண்பை இழந்தோம் நாமும்,  நம் 
மாண்பு மிகு தமிழகமும். 
 
வீரத்திற்கும், விருந்தோம்பலுக்கும் 
கலைக்கும், கலாச்சாரத்திற்கும் , 
தியாகத்திற்கும், தர்மத்திற்கும் , 
நீதிக்கும் , நிர்வாகத்திற்கும் 
பார் புகழ  இருந்த நம் தமிழகம் 
 
ஊழலுக்கும்,  லஞ்சத்திற்கும், 
கொலை , கொள்ளைகளுக்கும் , 
அநீதிக்கும், துரோகத்திற்கும் , 
கடமை தவறும் நிர்வாகத்திற்கும் 
பார் இகழும் வண்ணம் மாறியது .
 
 
நம்வசம் உள்ள ஓட்டைப்பெற்று  பதவியை 
தம்வசமாக்க  நினைத்த  , தரங்கெட்ட  அரசியலார் 
இலவசங்கள் என்னும் எலும்புத்துண்டைக் காட்டி
ஏமாற்றி வருவதை  உணராதிருக்கிறோம். 
 
சிறிய மீனைப்போட்டு , பெரியமீன் பிடித்து 
சீமான்களாக நினைப்போரை அறியாதிருக்கிறோம். 
 
கால்நடையாய்த்  திரிந்த  வட்டபிரதிநிதிகூட 
கமிஷனிலும் , கட்டப்பஞ்சாயத்திலும் , 
கணிசமாய்ப் பணம் சேர்த்து , 
காரில் வலம்வருதல் கண்டும்  
காணாததுபோல் இருக்கிறோம். 
 
வீடு கட்ட ஆரம்பித்தால்  , 
ஓடிவந்து காசு   கேட்கும்  
கேடு கேட்ட கவுன்சிலர்களை 
கேள்வி கேட்க யாருமில்லை . 
 
நமது வரிப்பணத்தில்  சம்பளம்  பெற்றுக்கொண்டு 
நம்மிடமே  வேலை செய்ய கிம்பளமும்  கேட்கின்ற 
நம்மிடையே  வாழ்ந்து வரும் அரசு ஊழியர்களை 
நாம் எவரும் வெறுப்பதில்லை. வருமானத்திற்கதிகமாகக் 
கொண்டுவரும் ஊழியரின்   குடும்பமும் மறுப்பதில்லை. 
 
புரட்சி செய்யச் சொல்லவில்லை , போராடச்  சொல்லவில்லை 
மிரட்சி கொள்ளத்தேவையில்லை , மிரட்டிடவும் சொல்லவில்லை 
 
போடுகின்ற வோட்டுக்குக்  காசெதுவும் வாங்காமல் , 
சாதி , மதம் ,  மொழி , இனம் , கட்சி என்று பாராமல் 
நாணயமாய்  , நாட்டு நலன் கொண்டவராய்  இருப்போரை, 
குற்றப்பின்னணிகள் இல்லாதிருப்போரை  , 
 
தொகுதியில் இருப்போரை , தொகுதி நிலை அறிந்தோரை 
தொகுதிக்கு சேவை செய்யும் தொண்டுள்ளம் கொண்டோரை 
 
என்ன தருவார் என்று எதிர்பார்க்கும்  எண்ணமின்றி 
என்ன செய்வார்  என்று எதிர்நோக்கும் மனம் கொண்டு 
மணல் கொள்ளை அடிக்காமல் , மழைநீரை சேமிக்க 
தடுப்பணைகள்  கட்டி , தண்ணீரை சேமிக்கவும் 
ஆக்கிரமிப்புகள் அகற்றி , ஆற்று வெள்ளம் தடுக்கவும், 
லஞ்சம் , ஊழல் தவிர்க்க , நெஞ்சில் உரம் கொண்டோரை 
நம் தேசம், நம் மக்கள் , நலம் வாழ நினைப்போரை 
வாக்களித்துத் தேர்ந்தெடுக்க  உறுதிமொழி ஏற்றிடுவீர் . 
 
சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம் ,  

News

Read Previous

முறையாமோ !

Read Next

இரா.இளங்குமரனார் நேர்காணல்

Leave a Reply

Your email address will not be published.