இரு தெருவுக்கிடையில்…!

Vinkmag ad

கவிதை:
இரு தெருவுக்கிடையில்…!
-ஆரூர் புதியவன்.

தெருக்கோடியில்
தீயை ‘வை’
என்று சொன்ன
சந்தியாராஜனை
புருவம் உயர்த்தி
உருவம் சிலிர்த்து
குறுகுறுவெனப்
பார்த்தான்
ரைனா..!

அந்தப் பார்வைக்கு
ஏன்…….?
என்று பொருள்..

“நான் சொல்வதெல்லாம்,
துளியும் உண்மைக்
கலப்பற்ற
தூய பொய்கள்
என்பதைக்
தெருவினர் அனைவரும்
தெரிந்து கொண்டனர்,

என் வெட்டிப் பேச்சு
அத்தனையும்
வீணாய்ப் போச்சு..?

வாயால் வடைசுடுபவன்
என்று
வைத்துவிட்டனர்
பட்டப்பெயர்…
தெருவெல்லாம் எனக்கு
கெட்டப்பெயர்..

உன் தெருவிலிருந்து
பரவிய தொற்றுநோயை
நீ அடக்கிவிட்டாய்..
நான் அடக்கவில்லை,
மக்களைத்தான்
அடக்கத் தலங்களில்
அடக்கிவருகிறேன்…

தெருவின் தெற்குப்பகுதியில்
உள்ள தெளிவானவர்கள்
அனைத்துத் துயரத்திற்கும்
நானே காரணம்
என்று
அறிந்து கொண்டனர்,
இந்நிலையில்,
தெருபக்தி என்ற
ஒற்றைத்
துருப்புச் சீட்டுதான்
எனது
குற்றங்களை மறைத்து
நான்
கோலோச்ச உதவும்..”

சந்தியா ராசன்
சொல்லி முடித்ததும்
ரைனா
கேட்டான்
“நீயே சொல்வதால்
தீயை வைக்கிறேன்
ஆனால்
தெருக் காவலர்களுக்கு
இது
ஆபத்தாய் ஆகுமே..?

“தெருக் காவலர்களா முக்கியம்
தெருத் தலைமைதான்
எனக்கு முக்கியம்”
என்று
சிந்தியா சந்தியா
சீறி வெடித்தான்

“சில மாதங்கள்
முன்பு
உன் தெருவுக்கு நான்
விருந்துக்கு வந்ததை
ஊரே பார்த்ததே
என்றான் ரைனா..?

“நான் உனக்காக
அடுப்பு மூட்டுவதும்
நீ எனக்காக
தீ மூட்டுவதும்
சுய நலத்தின்
சூதாட்டத்திற்காகத் தானே”
என்றான்
சகலகலாவல்லன் சந்தியா…

இருட்டில் நடக்கும்
திருட்டுத்தனத்தை
குருட்டுமனிதர்கள்
அறிவதா நடக்கும்..!
அறியா சனம் மேல்
ஆதரவு வைத்து
அரியாசனமோ
அனைத்தும் நடத்தும்…!

தெருக் கோடியில்
திடீரென
தீ
எரியத் தொடங்கிவிட்டது
பற்றி எரியும்
அந்த நெருப்பில்
தன்
குற்றங்களை எரித்துக்
குதூகலிப்பதோடு,

தெருப்பற்றைப் பற்றித்
தீவிரமாகப் பேசி
அம்பலப்படுத்துவோரை
அந்நிய ஆதரவாளர்களாக,
தெருத் துரோகிகளாக,
சித்திரித்துக் காட்டிவிட

உத்தம வேடத்தில்,
ஒளிப்பதிவுக் கூடத்தில்,
ஒத்திகைப் பார்க்கிறான்
சனங்களை ஏய்க்கும்
சதிகளின் அதிபதி
சந்தியாராஜன்..!

தெருவெங்கும்
கேட்கும்
மரண ஓலங்களை
விஞ்சிக் கேட்கிறது
அவன்
மனதின் குரல்…!

News

Read Previous

புத்தகங்களே…

Read Next

கேரளாவில் சாதிக்கும் இளம் ஐஏஎஸ் பட்டாளம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *