இனிய நண்பனே!

Vinkmag ad

இனிய நண்பனே!

______________________________

உனக்கு

என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

உலகத்தின் எந்த புள்ளியிலும்

கர்ப்பம் திறக்காத‌

தருணங்களே இல்லை.

அந்த ஒரு பொன்னான தருணத்தில்

உதித்தவனே!

நீ வாழ்க! நீடூழி வாழ்க!

வாழ்க்கை எனும் ஒரு

மயிற்பீலி உனக்கு கிடைத்திருக்கும்.

அதை விரலில்

சுழட்டி சுழட்டிப்பார்.

அதன் வண்ணங்கள் உன்னைக்

கிறங்கடிக்கலாம்.

அந்த மயில் வேட்டையாடப்பட்டதா?

அந்த மயிலே உனக்கு

இறகு உதிர்த்துக்கொடுத்ததா?

வாழ்க்கையின் காரணங்களை

நீ

தேடிக்கொண்டிருக்கும்போது

அது உன்னை விட்டு விட்டு

பல காத தூரம் அல்லவா

சென்றிருக்கும்.

சரி!

பின்னோக்கியே செல்லலாம்

என்று

நீ திரும்புவாயானால்

நீ வந்ததே தவறு.

பிறவி தான்

பாவத்திலும் பெரிய பாவம்

என்கின்றவர்கள்

உன்னை அந்த குகையில் மூடி

அஞ்ஞானப்பெரும்பாறை கொண்டல்லவா

அடைத்து விடப்பார்க்கிறார்கள்.

பிரம்மத்தை பார்க்கவேண்டும் என்று

சொல்பவர்கள்

இப்படி

நுனிக்கிளையில் உட்கார்ந்து கொண்டு

அதன் அடிக்கிளையையா

வெட்டுவார்கள்.

அரிது அரிது

மானிடராய் பிறத்தல் அரிது

என்ற ஞானமே

எல்லா பிரம்மஞானங்களையும்

பின்னுக்குத் தள்ளியது.

மனிதா!

முதலில் வாழ்க்கை உன்னை

தள்ளிக்கொண்டு போகும்

அந்த நடுக்கடல் வரை.

அப்புறம் அந்தப் படகின்

துடுப்புகளும் நீயே!

துடிப்புகளும் நீயே!

மண்டபங்களில் உபன்யாசங்கள்

கேட்டுவிட்டு

உன் “கொள்ளிச்சட்டிக்குள்”

போய் விழுந்து கொள்ளாதே.

பிரம்மம் என்பது

உயிர் ஆற்றலின் நீண்ட சங்கிலி.

அதற்கு கோடரி தூக்கும்

வேதாந்தங்களை குப்பையில் போடு.

பிணங்களாய் நீ குவிந்த போதும்

இந்த வைரஸ்கள் சொல்லும் பாடத்தை

படித்துப்பார்.

ஆம்!

மனிதா!

நீ பெருகு!பல்கிப்பெருகு!

உன் வெள்ளமே பேரறிவு.

உன் பெருக்கமே பேரொளி!

ஆற்றலாய் பெருகு!

இந்த பிரபஞ்சங்களே நீ தான்.

நீ வற்றாத ஊற்று.

சுரந்து கொண்டே இரு.

பிறந்து கொண்டே இரு.

இறப்பு

ஒரு நிறுத்தற்புள்ளி

முற்றுப்புள்ளி அல்ல.

நீ

பிறந்து கொண்டே இரு.

உனக்கு

நிரந்தரமாய்

உன் பிறந்த தின வாழ்த்துக்கள்

இந்த

சூரிய ஒளிப்பிழம்பில்

அச்சிட்டு அச்சிட்டு

வெளிவந்து கொண்டே இருக்கின்றன.

என் இனிய நண்பனே!

இந்த பிறந்த தின வாழ்த்துக்களே

இன்னும் இன்னும்

கோடிக்கணக்கான மைல்களுக்கு

உன்னை இட்டுச்செல்லும்.

_________________________________ருத்ரா

News

Read Previous

தமிழ்த் தாத்தா உ. வே. சா

Read Next

மூச்சிலும் பேச்சிலும் முதுமொழித் தமிழே!

Leave a Reply

Your email address will not be published.