அம்மாமாரே ! ஐயாமாரே !

Vinkmag ad

செ. சீனி நைனா முகம்மது

 

ஏழு’ஏ’க்கள் எடுத்தால்தான் வெற்றியா? – நாங்க

‘இ’ யைத்தாண்டி ‘சி’ எடுத்தால் எங்கபடிப்பு வெட்டியா?

ஆளுக்காளு குத்துறாங்க ஈட்டியா – எங்க

ஐயாமாரே ! கல்வியென்ன நூறுமீட்டர் போட்டியா?

 

 

வசதிக்கேற்ப வாய்ப்புகளும் மாறுங்க – நாங்க

வாழ்வதையும் வளர்வதையும் வந்துநல்லாப் பாருங்க !

கசங்கிப்போன வெள்ளைத்தாளு போலங்க – அன்பு

காட்டிநீங்க விரிச்சுவிட்டாக் கவிதைஎழுத லாமுங்க !

 

 

பட்டகாலில் இன்னும்பட்டாப் புண்ணுங்க – நாங்க

படிக்கவந்த இடத்திலேயும் இடிக்கலாமா எண்ணுங்க !

கெட்டதுவும் நல்லதுவும் மனமுங்க – அது

கேட்டதெல்லாம் கிடைக்கலன்னா கெட்டுவிடும் குணமுங்க !

 

 

வளர்ந்ததையும் வாழ்த்தவேணும் உண்மைதான் – இங்கே

வாடிநிற்கும் செடிகளுக்கும் நீர்தெளிச்சா நன்மைதான் !

கொழுந்திலேயே காயம்பட்டா ஆறுமா? – ஒரு

கூட்டத்தையே புறக்கணிச்சா நம்மஇனம் தேறுமா?

 

திறமையான பிள்ளைகளைப் பொறுக்கலாம் – சிலர்

தேவைக்கேற்பப் பணத்தைவாங்கித் தனிவகுப்பும் நடத்தலாம் !

குறையில்லாமல் ஏழுஏக்கள் கிடைக்கலாம் – அதைக்

கூட்டம்போட்டு சாதனையாய்த் தம்பட்டமும் அடிக்கலாம் !

 

வசதியின்றி வாய்ப்புமின்றி வெம்பியே – நாங்க

வழக்கமான பள்ளிக்கூடப் பாடங்களை நம்பியே !

திசையறியா எளியவரின் பிள்ளைகள் – நாங்க

தெரிந்தவரை முடிந்தவரை தேர்வில் ‘சி’க்கள் வாங்கலாம் !

 

அந்த ‘ஏ’யும் இந்த ‘சி’யும் ஒன்று தான் – இன்னும்

ஆழமாகப் பார்த்தீங்கன்னா அதிலும் இது நன்றுதான் !

சொந்தமான எளியவர்கள் சாதனை ! – இதைச்

சொல்லிவாழ்த்த யாருமில்லை என்பதுதான் வேதனை !

 

 

வலியவரே வாழ்ந்திருந்தால் காடுங்க – தான்

வளர்ந்தபின்னே எளியவரை வளர்ப்பதுதான் நாடுங்க !

அலைகளிலே ஏற்றத்தாழ்வு ஏதுங்க – காற்று

அடிக்கையிலே முன்னும்பின்னும் மாறிமாறித் தோணுங்க !

 

 

வன்முறையின் ஆணிவேரைத் தேடுங்க – அது

வரண்டுவாடும் மனங்களிலே முளைச்சுவந்த பூடுங்க !

இன்முறையில் பரிவுகாட்டிப் பாருங்க – அது

எல்லாருக்கும் கிடைத்துவிட்டால் வன்முறைகள் ஏதுங்க !

 

 

அம்மாமாரே ஐயமாரே கேளுங்க ! – பொது

அமைப்புகளே இயக்கங்களே அருகில்கொஞ்சம் வாருங்க !

அம்மாவாகி அப்பாவாகிப் பாருங்க – நாங்க

அழுகலாமா? தவிக்கலாமா? அணைத்து ஏக்கம் தீருங்க !

 

 

நன்றி :

 

உங்கள் குரல்,மலேசியா

சனவரி 2006

 

News

Read Previous

பாத யாத்திரை — க.து.மு. இக்பால், சிங்கப்பூர்

Read Next

தங்கைக்கோர் …. திருவாசகம் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *