அந்தி வானில் பூத்த பிறை

Vinkmag ad

——அந்தி வானில் பூத்த பிறை——-

பச்சையாய் பரந்த விரிப்பில்
பண் பாடும் மாதுளைச் செடியின்
பட்டு இதழில் படுத்துறங்கும்
பனித்துளி வைரங்கள்

புதிய பனித் தேனமுது உண்டு
புணர்ந்த அந்த பொன்வண்டுகள்
மாதுளை மொட்டுக்குள் முடங்கின

மணந்து கருவுற்ற மாதுளையின்
மாணிக்க பரல்கள் வெடித்து
மத்தாப்பாய் சிந்திய சிரிப்பு

வாய் பிளந்து கிடந்த சிப்பிக்குள்
வந்து விழுந்த வான் துளிகள்
வடிவங்கள் மாறி முத்துக்களாயின

விண்வெளியில் வீசி எறிந்த இந்த
பொன் முத்து மாணிக்க வைரங்கள்
விண்மீன்களாய் விளையாடும்
கண்சிமிட்டி கவிதைப் பாடும்

அந்த பால்வீதியில்
வெண்பஞ்சு முகில்கள் கிழித்து
தண்மதியின் முதல் படியாய்
தலை காட்டியது ஒளிகீற்றாய்

காலமகள் பிய்தெறிந்த நககீற்று
கண்ணில் பட்டு நொடியில் மறைந்த
கண்ணியம் நிறைந்த ஈத்பிறை
காரிருள் நீக்க வந்த கன்னிப் பிறை

புத்தம் புதிதாய் பெருநாள் பிறை
புது வாழ்வு தர வந்த ஷவ்வால் பிறை
புதிதாய் பூத்ததே அந்தி வானில்

இறையில்லங்கள் வரவில்லை நாம்
இருந்தும் தொழுதோம் எம் இல்லங்களில் இதய சுத்தியோடு

இளவல்கள் இமாம்களாய் பூத்தனர்
ஈமானின் ஒளிவெள்ளம் காட்டினர்
குடும்பமே ஒரு புள்ளியில் குவிந்தனர்

ஊரடங்கால் உலகம் முடங்கியது
உள்ளங்கள் உறங்கவில்லை
உணர்வுகள் ஒடுங்கவில்லை

தேடிச் சென்றோம் அங்கெல்லாம் தேவையுடைய பலரைக் கண்டோம்
திரண்ட செல்வத்தின் அவர் பங்கை
திரட்டிக் கொண்டு கொடுத்தோம்

மனித நேயம் மிளிர்ந்தது அதன்
மகத்துவம் மக்களுக்குப் புரிந்தது
மாநபி சொன்னதும் நிறைவேறியது

ஒட்டி வாழ்ந்த உறவுகளோடு
எட்டி வாழ நிபந்தனைகள் சில
இதயங்கள் கனத்தாலும் அதிலும்
இழைந்தோடும் அன்பு பிரவாகம் பல

இத்தனையும் இருந்தது
எதிலும் குறைவில்லை
இருந்தாலும் இது புதுமை ரமழான்

புத்தாடை அணியவில்லை எனினும்
புதிதாய் அதனை கொண்டாடுவோம்

மு முகமது யூசுப். உடன்குடி

News

Read Previous

நல்ல மனம் வாழும்!

Read Next

உண்ணா நோன்பின் உன்னத நோக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *