அலிகர் முஸ்லிம் பல்கலை

Vinkmag ad

amuஅலிகர் முஸ்லிம் பல்கலை.
————————————
வெறுங்கனவு அல்ல.
அது ஒரு பெருங்கனவு.
ஆனால்…..
====================

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

19 ,20 ஆம் நூற்றாண்டில் இந்தியத் துணைக்கண்ட முஸ்லிம்களின் சமூக அரசியல் பொருளாதார நிலையின் பின்புலத்தில் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் உருவாக்கத்தையும் அதன் கல்வி முறைகளையும் புரிந்து கொள்வதற்கு இந்த கட்டுரை நிச்சயம் உதவி செய்யும்.

சர் செய்யது அகமது கான் என்ற மகத்தான சமூகப் போராளி 19 ஆம் நூற்றாண்டின் மத்தியகாலப் பகுதியில் வாழ்ந்த இந்திய முஸ்லிம்களின் சமூக அரசியல் பொருளாதார அவல நிலையை நேரடியாக கண்டார்.

முஸ்லிம்களின் எதிர்கால வாழ்வில் இருள் சூழ்ந்துள்ளதை நுட்பமாக கணித்தார்.அதற்கான மூல காரணங்களையும் முதன்மை தீர்வுகளையும் தேடினார்.

முகலாய மன்னர் அவுரங்கசீப்பிற்குப் (1707) பிறகு அரசர்களாக பொறுப்புக்கு வந்த அவரது பிள்ளைகள் திறமையற்றவர்களாக தொலைநோக்கு இலக்கு இல்லாதவர்களாக நீர்த்துப் போனவர்களாக இருந்தனர்.அன்றைய கால அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சிகளில் அதிக கவனம் செலுத்தி முகலாய இராணுவத்தை நவீனப்படுத்திக் கொள்ளாமல் குடும்பச் சண்டைகள் கோஷ்டிப் பூசல்கள் மனதை மயக்கும் களியாட்டங்களில் சிக்கி சீரழிந்து கிடந்தனர்.

அதன் முடிவாக 1857 இல் முஸ்லிம்களுக்கும் கிழக்கிந்திய கம்பெனி படைகளுக்கும் நடைபெற்ற இறுதி போரில் தனது இரத்த உறவுகள் பலர் டெல்லியின் தெருக்களில் கொல்லப்பட்டு கிடந்ததை சர் செய்யது அகமது கான் நேரில் கண்டார்.

முஸ்லிம்கள் வட இந்தியா முழுவதும் ஆங்கிலேயரோடு போரிட்டுக் கொண்டிருக்கும் அதே காலத்தில் இந்தியாவின் மற்ற பகுதிகளில் ஆங்கில வழி பள்ளிக் கூடங்களை அவர்கள் உருவாக்கி வருவதை கண்டார்.

அதைவிட முக்கியமாக தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் ஒரு கலை கல்லூரியையும் (1854) கல்கத்தா மதராஸ் பம்பாய் ஆகிய மூன்று மாகாணங்களில் பிரம்மாண்டமான பல்கலைக்கழகங்களையும் (1857) உருவாக்கி வருவதை ஆச்சரியமாக கண்டார்.

மெக்காலே வடிவமைத்த கல்வித்திட்டத்தின் அடிப்படையில் ஆங்கிலேயரின் பாடத்திட்டங்கள் அனைத்தும் ஐரோப்பாவிலிருந்து இந்தியத் துணைக் கண்டத்தில் இறக்குமதியாவதை சர் செய்யது அகமது கான் கண்டார்.

(முதன் முதலாக உருவாக்கப்பட்ட கல்கத்தா பல்கலைக்கழகம் குறித்த வரலாற்று ஆசிரியர்கள் “The First University located to the east of Suez to teach European Classics, English Literature, European and Indian Philosophy, and Occidental and Oriental History ” என்று குறிப்பிடுவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.)

வங்காளம் மற்றும் தென்னிந்திய பிராமணர்கள் உள்ளிட்ட உயர்சாதியினர் இந்த பல்கலைக்கழகங்களில் ஆர்வத்துடன் படித்து பிரிட்டிஷ் இந்தியாவின் அரசுப்பணிகளில் உயர் பொறுப்புகளை கைப்பற்றுவதை சர் செய்யது அகமது கான் நேரடியாக கண்டார்.

651 ஆண்டுகள் இந்தியத்துணை கண்டத்தை ஆட்சி செய்த நாட்டின் முதன்மை குடிமக்களாக வாழ்ந்த முஸ்லிம் சமூகத்திடமிருந்து அனைத்து அதிகாரங்களும் வளங்களும் பிற உயர் சாதியினருக்கு கைமாறுவதை அதிர்ச்சியோடும் கவலையோடும் கண்டார்.

இந்தியாவில் முதன் முறையாக முஸ்லிம் ஆட்சி இல்லாத அந்நியர்களின் ஆட்சியில் முஸ்லிம் சமூகம் வாழவேண்டிய துர்பாக்கிய நிலை உருவாகியுள்ளதை கண்டார்.

1857 போருக்குப் பிறகு தன் சமூகத்தின் மானம் மரியாதை பறிபோய் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் பலியாகிப் போய் பலகோடி மதிப்பிலான செல்வங்கள் அபகரிக்கப்பட்டு பலநூறு அறிஞர்கள் தூக்கிலிடப்பட்டு ஒட்டுமொத்த முஸ்லிம் சமூக கட்டுமானமே சிதைந்து நிர்கதியாய் நிற்பதை கண்டார்.

புனரமைப்புப் பணிகளை எதிலிருந்து துவங்குவது ?

சர் செயது அகமது கான் அவர்கள் அன்றைய இந்திய முஸ்லிம்களின் கல்வி பொருளாதாரம் அரசியல் சமூகவாழ்வு எதிரிகளின் வலிமை என்று அனைத்து நிலைகளையும் கூட்டிசைவாக சிந்தித்தார்.

முஸ்லிம் சமூகத்தின் மீள்கட்டுமானம் கல்வியிலிருந்து தான் துவங்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த சர் செய்யது அகமது கான் ஒரு தீர்க்கமான இலக்கை நிர்ணயித்துக் கொண்டார்.

இனி ஆங்கில மொழியையும் ஆங்கிலேயரின் அறிவியல் தொழில்நுட்ப கல்வியையும் கற்பதை தவிர முஸ்லிம் சமூகம் மீளெழுச்சி பெறுவதற்கு வேறுவழியே இல்லை என்ற உறுதியான முடிவுக்கு வந்தார்.

ஆங்கிலேயர்களையும் ஆங்கில மொழி சார்ந்த அவர்களின் கல்வியையும் நாகத்தின் நஞ்சைவிட கொடியதாக முஸ்லிம்கள் கருதிய காலத்தில் சர் செய்யது அகமது கான் அவர்கள் முஸ்லிம்களின் மீளெழுச்சிக்காக ஆங்கிலேயரின் கல்விமுறை சார்ந்து ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்கும் முடிவை மிக துணிச்சலாக எடுத்தார்.

1875 இல் உ.பி மாநிலம் அலிகாரில் முகமடன் ஆங்கிலோ ஓரியண்டல் கல்லூரி (Muhammadan Anglo-Oriental College) என்ற பள்ளிக்கூடத்தை முதலில் துவங்கி தனது பல்கலைக்கழக பெருங்கனவிற்கான விதையை நாட்டார்.இதேபோல காஜிப்பூர் முராதாபாத் போன்ற ஊர்களிலும் பள்ளிக்கூடங்களை உருவாக்கினார்.

45 ஆண்டுகளுக்குப் பிறகு 1920 இல் அதாவது சர் செய்யது அகமது கான் மரணித்து 22 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த பள்ளிக்கூடம் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகமாக உருவாகி சர் செய்யது அகமது கான் என்ற சமுதாயப் போராளியின் பெருங்கனவை நினைவாக்கி நின்றது.

இப்போது நூறு ஆண்டுகளை நிறைவு செய்து வெற்றிமுகத்துடன் பயணித்து வருகிறது.

20 ஆம் நூற்றாண்டின் துவக்க காலத்தில் இந்திய துணைக்கண்டம் முழுமையும் ஆங்கிலேயர்களின் ஆட்சிமுறை மற்றும் கலாச்சார வாழ்வியல் சூழலுக்குள் வந்துவிட்ட நிலையில், ஆங்கிலேயரின் ஆட்சிமுறை வட்டத்திற்குள் முஸ்லிம் சமூகத்திற்கு கிடைத்த சமூக அரசியல் பொருளாதார வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதில் அலிகர் பல்கலையின் மாணவர்கள் முதன்மை இடத்தை பெற்றனர்.

பிரிட்டிஷ் அரசில் முஸ்லிம்கள் முக்கியத்துவம் பெறுவதை விரும்பாத ஆரம்ப கால காங்கிரஸ் தலைவர்கள் சிலரின் உள்ளடி வேலைகளையும், இந்துத்துவாவின் நேரடியான சூழ்ச்சிகள் மற்றும் எதிர்ப்புகளையும், கையாளுவதில் பிரிட்டிஷ் அரசின் நெருக்கத்தை பயன்படுத்தி அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் அவற்றை முறியடிப்பதில் அலிகர் முஸ்லிம் பல்கலையில் படித்த அறிஞர்கள் முன்னணியில் நின்றனர்.இப்போதும் நிற்கின்றனர்.

இவையெல்லாம் சர் செய்யது அகமது கான் என்ற கருத்தாழமிக்க போராளியின் சிந்தனையின் மூலம் பல்கி பெருகியவை என்பதில் மாற்றமில்லை.

ஆனால்…..

சர் செய்யது அகமது கான் அவர்களின் கல்விக் கொள்கையையும் அவர்கள் உருவாக்கிய ஆங்கிலோ ஓரியண்டல் பள்ளியையும் அவரின் பெருங்கனவான அலிகர் முஸ்லிம் பல்கலையின் கல்வி முறைகளையும்….
அல்குர்ஆன் ஹதீஸ் முன்னிறுத்தும் முஸ்லிம்களுக்கான இஸ்லாமிய கல்வி கொள்கையோடும், வரலாற்றில் இஸ்லாமிய பேரரசுகள் வளர்த்தெடுத்த கல்விப் பாரம்பரியத்தின் பின்புலத்திலும், உரசிப்பார்த்து ஒப்பீடு செய்தால் மிகப்பெரிய ஆதங்கமும் சங்கடமும் ஏற்படும் என்பதையும் இங்கே நாம் முக்கியமாக கவனப்படுத்திக் கொள்ள வேண்டும்.

சர் செய்யது அகமது கான் அவர்கள் கிழக்கிந்திய கம்பெனியில் பணியாற்றயதால் ஆங்கிலேயரின் ஆளுமையையும் அவர்களின் அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி பின்புலத்தையும் மிகவும் நேசித்தார்.

ஆங்கிலேயருடன் மிகவும் நெருக்கமாக இருந்தார். பிரிட்டிஷ் அரசால் முதன் முதலாக இந்தியாவில் உருவாக்கப்பட்ட ஆங்கிலேய மரபு நீதிமன்றத்தில் (இன்றைய நீதிமன்றங்கள்) முதல் முஸ்லிம் நீதிபதியாக சர் செய்யது அகமது கான் நியமிக்கப்பட்டார்.

இவையெல்லாம் அவரது மனதில் இனி ஐரோப்பிய கல்வி மற்றும் அரசியல் முறைகளுக்குத் தான் எதிர்காலம் இருக்கிறது என்ற எண்ணத்தை மிக ஆழமாக விதைத்திருந்தது. அது ஒருவகையில் சரியானது தான் என்பதில் மாற்று கருத்து இல்லை.

அதேநேரத்தில் இஸ்லாமிய கல்விமுறைக்கு எந்த எதிர்காலமும் இல்லை அவை காலாவதியாகிப் போனவை என்ற எதிர்மறையான எண்ணம் அவரிடம் மிகைத்திருந்ததால் இஸ்லாமிய கல்வி முறை குறித்தான எந்த விதமான புத்தாக்கப் பணிகளுக்கும் அவர் தயாராக இல்லை. இது அவருக்கு கடுமையான எதிர்ப்புகளை உருவாக்கியது.

இஸ்லாமிய புற அடையாளங்களை மட்டும் வைத்துக்கொண்டு முழுக்க முழுக்க மேற்கத்திய பாடங்களை வேலை வாய்ப்புக்காகவும் பொருளாதார தேடலுக்காகவும் சமூக அந்தஸ்த்திற்காகவும் மட்டுமே கற்பிப்பது இஸ்லாமிய கல்வி கொள்கையை சார்ந்தது அல்ல என்ற கருத்தை பல அறிஞர்கள் சர் செய்யது அகமது கானிடம் தங்களது அதிருப்தியாக தெரிவித்தனர்.

19 ஆம் நூற்றாண்டின் இஸ்லாமிய புனரமைப்பாளரான ஷேய்க் ஜமாலுதீன் ஆப்கானி அவர்கள் ஹைதராபாத் நிஜாம் அரசின் கல்விக் கொள்கையை சீர்திருத்தம் செய்வதற்கு 1875 இல் இந்திய வந்தபோது சர் செய்யது அகமது கான் அவர்கள் உருவாக்கிய முகமடன் ஆங்கிலோ ஓரியண்டல் கல்லூரியின் பாடமுறைகள் முழுவதும் ஆங்கிலேய முறைப்படி இருப்பதை கடுமையாக விமர்சனம் செய்தார்.

இஸ்லாமிய கற்கை நெறிகளை அவரவரின் தாய்மொழிகளில் நவீன காலத்திற்கேற்ப புனருத்தாரணம் செய்வதற்கு பதிலாக முஸ்லிம்களை அறிவாலும் கலாச்சாரத்தாலும் ஆங்கிலேயர்களாக மாற்றும் வேலை நடக்கிறது என்று கூறினார்.

துவக்க காலத்தில் இதில் பிடிவாதமாக இருந்த சர் செய்யாது அகமது கான் அவர்கள் ஆங்கிலோ ஓரியண்டல் பள்ளியின் முதல்வராக பொறுப்பு வகித்த தனது மகனின் நடவடிக்கைகள் இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு எதிராக இருப்பதை பார்த்து கல்வி குறித்த தனது சிந்தனைகளை பின்னாட்களில் பெரிதும் மாற்றிக் கொண்டார்.

20 நூற்றாண்டின் மிகச்சிறந்த சிந்தனையாளர் மௌலானா மௌதூதி அவர்கள் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் உள்ளிட்ட ஆங்கிலேய கல்விமுறை குறித்து கருத்து கூறுகின்ற போது மேற்கத்திய அறிவுத்துறையின் வளர்ச்சிக்கும் விரிவாக்கத்திற்கும் முஸ்லிம் பிள்ளைகளை தயாரிக்கும் வேலையை செய்கிறது என்று கூறியுள்ளதையும் இங்கே கவனிக்க வேண்டும்.

ஐரோப்பாவில் ஏற்பட்டு வந்த தொழில் புரட்சியையும் அதனால் ஐரோப்பியர்கள் அடைந்த அறிவியல் தொழில்நுட்ப ஆயுத வலிமையையும் பற்றி முஸ்லிம்கள் கொஞ்சமும் கவனம் கொள்ளாமல் இருந்ததின் விளைவாக ஏற்பட்ட உலகளாவிய வீழ்ச்சியிலிருந்து முஸ்லிம் சமூகம் மீளுவதற்கும் ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தியத் துணைக்கண்ட முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட மிகப்பெரும் அரசியல் சமூக பொருளாதார இழப்புகளை ஈடு செய்வதற்கும் உருவாக்கப்பட்ட ஒரு இடைக்கால ஏற்பாடு தான் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் கல்விமுறை என்பதை நாம் ஆழமாக புரிந்து கொள்ள வேண்டும்.

சர் செய்யது அகமது கான் அவர்கள் முன்வைத்த கல்வித் திட்டம் என்பது இஸ்லாமிய கல்வித் திட்டமோ அல்லது மத்தியகால முஸ்லிம்கள் வகித்திருந்த, உலகத்தின் அறிவியல் தலைமைத்துவத்தை மீட்டெடுக்கும் வகையிலான பாரம்பரிய கல்வித் திட்டமோ இல்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆங்கிலேயரின் மேற்கத்திய வாழ்க்கை சூழலுக்குள் விதிவசத்தால் சிக்கிக்கொண்ட இந்திய முஸ்லிம்கள் அந்த வட்டத்திற்குள் தங்களது வாழ்வை வளப்படுத்திக் கொள்வதற்கும் பெருகிவந்த இந்துத்துவ சிந்தனைவாதிகளை சமூக அரசியல் ரீதியாக எதிர்கொள்வதற்கும் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் பாடங்களும் பயிற்சிகளும் பெரிதும் பங்காற்றியிருக்கிறது.

இது நேற்றைய இன்றைய முஸ்லிம்களின் கட்டாயத் தேவை என்பதில் மறுப்பேதும் இல்லை. ஆனால் இதுவே நிலையானதும் நிரந்தரமும் அல்ல.

அதனால் தான் அலிகர் முஸ்லிம் பல்கலையிலிருந்து அல்லது அலிகரை பின்பற்றி தமிழகத்தில் துவங்கப்பட்ட முஸ்லிம்களின் பாரம்பரிய கலை அறிவியல் கல்லூரிகளில் இருந்து இஸ்லாமிய அறிவுப் பாரம்பரியம் கொண்ட சிந்தனையாளர்கள் அல்லது மார்க்க சமூக சீர்திருத்தவாதிகள் உருவாகவில்லை.

அதேபோல அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கான கருவை அல்குர்ஆனிலிருந்தும் ஹதீஸ்களில் இருந்தும் எடுத்து படைப்புகளை இஸ்லாமிய அறிவுக் கண்கொண்டு ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகளும் உருவாகவில்லை.

சர் செய்யது அகமது கான் என்ற ஒரு மகத்தான போராளியின் சிந்தனையை அவரின் அறிவுப் போராட்டத்தை உயர்வாக மதித்து அவர் உருவாக்கிய அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழத்தின் கல்வி முறைகளை இஸ்லாமிய பாரம்பரிய கல்வி முறைகளோடு நமது சிறிய அறிவைக் கொண்டு ஒப்பீடு செய்ததில் கிடைத்த அனுபவங்கள் தான் இவை.

இன்றைய முஸ்லிம்களின் கடமையாக இருக்கின்ற உலகின் அறிவுக் களஞ்சியங்கள் அனைத்தையும் ஒவொன்றாக இஸ்லாமியப்படுத்தும் நிரந்தர இலக்கை நோக்கி நகர வேண்டிய தேவைகளை இது உணர்த்துவதாக அமைந்துள்ளது.

News

Read Previous

தன்னம்பிக்கை

Read Next

சினிமாவில் வில்லன்.. நிஜத்தில் ஹீரோ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *