போராடினால் வெற்றி நமதே

Vinkmag ad

சவாலே சாதிக்கத் தூண்டியது

கல்வி உடையவரே கண்ணுடையவர் என்பதை நிரூபித்துள்ளார் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றிபெற்றுள்ள பார்க்கும் திறனற்ற பூரண சுந்தரி.

மதுரையில் உள்ள மணிநகரம் பகுதியைச் சேர்ந்த விற்பனைப் பிரதிநிதி முருகேசன் – ஆவுடைதேவி தம்பதியின் மகள் பூரண சுந்தரி. இவருக்கு ஐந்து வயதில் பார்வை நரம்பு பாதிக்கப்பட்டதால், பார்வையிழப்பு ஏற்பட்டது.

மகள் பார்வை இழந்துவிட்டாள் எனச் சோர்ந்துவிடாமல், மகளுடன் சேர்ந்து சவாலான வாழ்க்கையை அந்தப் பெற்றோர் எதிர்கொண்டனர். பள்ளிப் பாடங்களை ஆடியோ கேசட்டுகளில் பதிவுசெய்து டேப் ரெக்கார்டரில் ஒலிக்கவிட்டு மகளைப் படிக்கவைத்துள்ளனர். பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் 471 மதிப்பெண் பெற்ற பூரண சுந்தரி, பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் 1092 மதிப்பெண் பெற்றார். கல்லூரியில் இளங்கலை ஆங்கிலம் முடித்துள்ளார். “பார்வைத்திறன் இன்மையால் சிறுவயதிலிருந்து கல்வி கற்பதில் எதிர்கொண்ட சவால்கள்தாம் என்னைச் சாதிக்கத் தூண்டின” என்கிறார் பூரண சுந்தரி.

போராடினால் வெற்றி நமதே

2016-ம் ஆண்டிலிருந்து இருபதுக்கும் மேற்பட்ட போட்டித் தேர்வுகளைத் தொடர்ச்சியாக எழுதிவந்துள்ளார். அவற்றில் தோல்வி அடைந்தாலும், தான் நிச்சயம் ஒருநாள் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கையை மட்டும் அவர் இழக்கவில்லை. இந்நிலையில் 2018-ல் வங்கிப் பணிக்கான போட்டித் தேர்வில் வெற்றிபெற்று அரசு ஊரக வளர்ச்சி வங்கியில் எழுத்தராகப் பணிபுரிந்துவந்தார். அரசுப் பணி கிடைத்துவிட்டது என நின்றுவிடாமல், தொடர்ந்து ஐ.ஏ.எஸ். தேர்வில் கவனம் செலுத்திவந்துள்ளார்.

2019-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்வில் 286-ம் இடம்பிடித்து பூரண சுந்தரி சாதனை படைத்துள்ளார். “லட்சியத்தை அடைய நம்பிக்கையுடன் போராடினால் வெற்றி நிச்சயம்” என்னும் தன்னுடைய வார்த்தைகளுக்கு, அவரே சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளார்.

(நன்றி : ஆகஸ்ட் 9 தமிழ் இந்து பெண் இன்று இணைப்பில் வெளியான கட்டுரை)

—————————————————————————————————————

பூரண சுந்தரிக்கு நம் அன்பான வாழ்த்துகள்!

News

Read Previous

இது தான் தமிழ் !

Read Next

வாராது வந்த மணி

Leave a Reply

Your email address will not be published.