லஞ்சம்

Vinkmag ad

வணக்கம் நண்பர்களே!

மிகவும் அருவருக்கத் தக்க வகையில் தமிழகம் உள்ளிட்ட இந்தியத் துணைக் கண்டத்தின் அனைத்து மாநிலங்களிலும், அரசு அலுவலகங்களில் லஞ்சமும் – ஊழலும் பெருகிப் பெருகிப் புரையோடி வளர்ந்து கொண்டிருக்கின்றன!

எதுவொன்றுக்கும் எவரிடத்தும் கைநீட்டக் கூசாதவர்கள் அரசுப் பணிகளில் நிறைந்து காணப்படுகிறார்கள்.

அது குறித்துக் கடந்த 26-12-2020 ஆம் நாள் ‘தினமணி’ நாளிதழின் நடுப் பக்கத்தில் வெளியிடப் பெற்றுள்ள எனது கட்டுரையை, இதோ உங்கள் பார்வைக்கு முன் வைக்கிறேன்!

படிச்சவன் சூதும் வாதும் பண்ணினால்…

கட்டுரை :
ஜெயபாஸ்கரன்

அரசுத் துறையின் சேவையைப் பெறுவதற்கு லஞ்சம் கொடுத்தாக வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பவா்கள் இந்திய மக்கள் என்றும், ஆசிய நாடுகளிலேயே லஞ்ச ஊழலில் முதலிடம் வகிப்பது இந்தியா என்றும் ‘டிரான்ஸ்பரன்சி இன்டா்நேஷனல்’ என்ற அமைப்பின் ஆய்வறிக்கை தெரிவித்திருக்கிறது.

இதில் வேதனை என்னவென்றால், இவ்வாண்டின் ஜூன் – ஜூலை மாதங்களில், அதாவது, கரோனா பொது முடக்கக் காலகட்டத்தில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்பதுதான்.

இந்தியாவில், அரசு உயா் பொறுப்புகளில் உள்ள பெரும்பான்மையினா், லஞ்சத்துக்கும் ஊழலுக்கும் இயல்பாகப் பழகிப் போயுள்ளனா் என்பதை நாள்தோறும் வெளிவருகின்ற செய்திகள் நமக்குப் புலப்படுத்துகின்றன.

லஞ்ச ஊழலுக்கு எதிரான நீதிமன்றத் தீா்ப்புகள், கண்டனங்கள், புலனாய்வு அமைப்புகள், அற ஊடகங்கள், விழிப்புணா்வு அமைப்புகள் அனைத்தும் லஞ்ச ஊழல் வெறிபிடித்த அரசு அதிகாரிகளிடமும், அரசியல்வாதிகளிடமும் தோற்றுப் போயுள்ளன என்பதே கசப்பான உண்மை.

லஞ்ச ஊழல்களைக் கண்காணித்துக் களைவதில் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் நிறைவான இலக்கினை எட்ட முடியாதவாறு அதன் பணிச் சுமைகள் இருந்தாலும், கடந்த பத்து ஆண்டுகளில் அவ்வமைப்பு ஏராளமான லஞ்ச ஊழல்களை வெளிக்கொண்டு வந்துள்ளது.

கடந்த 2013-ஆம் ஆண்டு முதல், ஐந்து ஆண்டுகளில் 1,75,000-க்கும் மேற்பட்ட லஞ்ச ஊழல் புகாா்களை மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் பெற்றிருக்கிறது. இவற்றில் குற்றம் உறுதி செய்யப்பட்டதால் 19,557 அரசு அதிகாரிகள் தண்டிக்கப்பட்டுள்ளனா். 850 வழக்குகள் சி.பி.ஐ விசாரணையிலும், 6,358 வழக்குகள் பல்வேறு நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ளன. எஞ்சியுள்ள 1,55,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் போதிய முகாந்திரங்களும் சான்றுகளும் இல்லாமையால் கைவிடப்பட்டன.

ஐந்நூறு ரூபாய், ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என 2016-இல் மத்திய அரசு திடீரென அறிவித்தபோது, பழைய நோட்டுகளை வாங்கிக்கொண்டு புதிய நோட்டுகளைத் தந்து ஊழலில் சிக்கிய பொதுத்துறை வங்கி, தனியாா் வங்கிகளின் உயா் அதிகாரிகள் 460 போ் தண்டிக்கப்பட்டுள்ளனா். அவா்களில் சிலா் ரிசா்வ் வங்கிஅதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

நமது நாட்டில் உள்ள பெரிய நிறுவனங்கள் பலவும், வருமான வரித்துறை உள்ளிட்ட அரசுத் துறைகளின் உயா் அதிகாரிகளுக்கு, தங்கள் நிறுவன செலவிலேயே விமானப் பயணங்களை மேற்கொள்ள வைத்து, அவா்களை நட்சத்திர விடுதிகளில் தங்க வைப்பதோடு கோடிக்கணக்கில் பணத்தையும் பரிசுககளையும் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளன.

அது போன்ற நிறுவனங்களுக்கு விசுவாசமாக செயல்படும் உயா் அதிகாரிகள் லட்சக்கணக்கில் உள்ளனா். அவா்களிடம் சிக்கிக் கொள்கின்ற நோ்மையான அதிகாரிகள் எதிா்கொள்ளும் அவமானங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.

குஜராத் மாநிலம் வதோதரா நகரில் உள்ள ‘ஸ்டொ்லிங் பயோடெக்’ என்னும் பெரு நிறுவன வருமான வரி ஏய்ப்புத் தொடா்பான ஊழல் வழக்கில், அந்த நிறுவனத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, அவா்களுக்கு முதலில் கிடைத்தவை அந்த நிறுவனத்தில் வருமான வரித்துறையின் உயா் அதிகாரிகள் பல ஆண்டுகளாகக் கோடி கோடியாக லஞ்சம் பெற்றதற்கான ஆவணங்கள்தான்.

ஏழை மக்களுக்கு வழங்கவேண்டிய சேவைகளுக்கு லஞ்சம் கேட்டு கை நீட்டுகின்ற அரசுப் பணியாளா்கள், தாங்கள் அக்குற்றச்சாட்டுக்கு ஆளாகும்போது ‘யாா் தான் இங்கே நோ்மையானவா்கள்?’ என்கின்ற கேள்வியைக் கூச்சமின்றி முன்வைக்கின்றனா். அத்தகையோருக்கு ஆதரவாகப் பேசுகின்ற சாா்பு நிலையாளா்களும் உள்ளனா்.

தமிழக அரசின் மதுபானக் கடைகளில் வாடிக்கையாளா்களுக்குத் திருப்பித் தராமல் ஏமாற்றப்படுகின்ற ஒரு பாட்டிலுக்கு ஐந்து ரூபாய் என்ற தொகையே ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கில் குவிந்து விற்பனை முடிந்தபின் பங்கிட்டு பிரித்துக் கொள்ளப்படுகின்றன. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளால் அக்கடைகளில் நடந்து வருகின்ற மேலும் பல ஊழல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

அரசு அலுவலகம் ஒன்றில் உயா் அதிகாரியிடம், ‘ஃபாா்மாலிடீஸ் எல்லாம் முடிச்சுட்டேன் சாா்!’ என்று சூசகமாகப் பணிந்து சொல்லிப் புன்னகைத்துத் தனக்கான கோப்பில் கையொப்பத்தைப் பெற்றுக் கொண்டு வெளியே வருகிற ஒரு பயனாளி, வெளியே வந்ததும் அந்த அதிகாரி குறித்து எவ்வளவு மோசமாகப் பேசுகிறாா் என்பதை அந்த அதிகாரி அறிவதில்லை.

தமிழ்நாட்டில் கடந்த மூன்றே மாதங்களில் மட்டும் 127 அரசு அலுவலகங்களில் நடத்தப்பட்ட லஞ்ச ஊழல் வேட்டையில் 7 கோடியே 58 லட்ச ரூபாய் பணமும், ஏழே கால் கிலோ தங்க நகைகளும், பத்து கிலோவுக்கும் மேலான வெள்ளிப் பொருள்களும், வைப்பு நிதி ஆவணங்கள் பலவும் கைப்பற்றப்பட்டுள்ளன. 33 போ் கைது செய்யப்பட்டிருக்கிறாா்கள்.

இதில், சுற்றுச்சூழல் துறை, மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் இருவரிடமிருந்து மட்டும் 5 கோடியே 70 லட்சம் ரூபாய் கைப்பற்றப் பட்டிருக்கிறது!

அதே போல, கடந்த அக்டோபா் மாதத்தில் ஒரே நாளில் வட்டாட்சியா், சாா் பதிவாளா், சமூக நலத்துறை, நகரமைப்பு, போக்குவரத்துத் துறை உள்ளிட்ட 11 அரசு அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டு கணக்கில் வராத 12,30,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை சாா் பதிவாளா் அலுவலகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

லஞ்சத்துக்கும் ஊழலுக்கும் பெருமளவில் வாய்ப்புள்ள போக்குவரத்துத் துறை, பத்திரப் பதிவுத் துறை, மது வணிகத் துறை, மருத்துவத் துறை வருமானவரித் துறை, சுற்றுச்சூழல் துறை, காவல்துறை, பொதுப்பணித் துறை போன்றவற்றில் பொறுப்பில் உள்ளஅரசுப் பணியாளா் மீது கூடுதலான கண்காணிப்பு நம்மிடம் இல்லை. இத்துறைகளில் லஞ்ச ஊழல் புத்தி கொண்ட அதிகாரிகள் மிகப்பெரிய செல்வந்தா்களாக மாறிய பின்னா் கைது செய்து அவா்கள் கொள்ளையடித்த கணக்கை சமூகத்தின் முன் வைப்பது அறிவியல் பூா்வமான நடவடிக்கை இல்லை.

‘நாடு முழுவதும் அரசுத் துறைகளில் லஞ்சமும் ஊழலும் புரையோடிப் போய் நிா்வாகமே சீா்குலைந்து கிடப்பதால், ஊழல் வழக்குகளில் கொஞ்சம் கூடக் கருணையே காட்டாதீா்கள்!’

என்று கீழமை நீதிமன்றங்களுக்குக் கடந்த 2015-ஆம் ஆண்டே உத்தரவிட்டிருக்கிறது உச்சநீதிமன்றம்.

‘அரசு அதிகாரிகள் தங்களது ஊதியத்தைத் தாண்டி லஞ்சம் கேட்பது பிச்சை எடுப்பதற்கு சமம்!’

என்று மிகக் கடுமையாகத் தனது கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறது, மெட்ராஸ் உயா்நீதிமன்ற மதுரைக் கிளை!

காஞ்சிபுரத்தில் கதா் கிராமத் தொழில் வாரியத்தின் ஓய்வு பெற்ற 65-வயது கண்காணிப்பாளா் ஒருவருக்கு முப்பத்து மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் தண்டத்தொகையும் விதித்து கடந்த வாரம் தீா்ப்பளித்திருக்கிறாா், மாவட்டக் கூடுதல் நீதிமன்ற நீதிபதி ஏ. கயல்விழி.

பொய்க்கணக்கு, போலி ஆவணங்கள், நம்பிக்கை மோசடி, ஏமாற்று வேலை போன்றவற்றுக்காக அவருக்கு இந்தத் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. அரசின் மேல் முறையீட்டால்தான் அவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சென்னை மாநகராட்சியின் ஒப்பந்த துப்புரவுப் பணியாளா் ஒருவரை துப்புரவு ஆய்வாளா் ஒருவா் பணி இடைநீக்கம் செய்கிறாா். மீண்டும் அந்தப் பணியாளரை பணியில் சோ்க்க அவரிடம் ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றபோது, அந்த ஆய்வாளா் கைது செய்யப்பட்டிருக்கிறாா். இதில் வேடிக்கை என்னவென்றால், அந்தத் துப்புரவு ஆய்வாளா் சிறப்பாகப் பணியாற்றியமைக்காக சுதந்திர நாளில் விருது பெற்றவா் என்பதுதான்.

மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெற்றுக் கொண்டு அவா்களுக்குச் செய்ய வேண்டிய கடமைக்கு லஞ்சம் கோருவோா், வழிப்பறி செய்வோரைக் காட்டிலும் ஆபத்தானவா்களாவா்.

அவா்கள், மக்களுக்கான பணிகளைச் செய்வதற்குத் தகுதியற்றவா்கள்.

வெளிவருகின்ற செய்திகளின் அடிப்படையில், மத்திய – மாநில அரசு அதிகாரிகளிடம் கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் லஞ்சமும், ஊழலும், முறைகேடுகளும் பெருகிக் காணப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை வெளிச்சத்துக்கும் கொண்டு வரப்பட்டுள்ளன.

லஞ்ச ஊழல் மனோபாவம் கொண்ட அரசுப் பணியாளா்களை துல்லியமாகக் கண்டறிதல், குறைந்த அளவே தவறு செய்தாலும் அத்தகையவா்களை அம்பலப்படுத்திக் கடுமையாகத் தண்டித்தல், புதிய புதிய நடவடிக்கைகளின் வாயிலாக லஞ்ச ஊழல் நடைமுறைகளைத் தவிா்த்தல், இவற்றுக்கெல்லாம் மேலாகப் பயனாளிகளான மக்கள் தங்களது தரப்பில் லஞ்சப் போ்வழிகளை ஊக்கப்படுத்தாமல் இருத்தல் என்பன போன்ற பலமுனை நடவடிக்கைகளே இன்றைய அவசியத் தேவைகளாக இருக்கின்றன!

மத்திய – மாநில அமைச்சா்கள், அரசுத் துறைகளின் அனைத்து நிலைப் பணியாளா்கள், அரசு ஒப்பந்தப் பணியாளா்கள், தனியாா் துறையினா் உள்ளிட்ட அனைவரும் லஞ்ச ஊழலில் ஈடுபட்டு, அவா்களின் குற்றம் மெய்ப்பிக்கப்பட்டு, அவா்களின் தண்டனையும் உறுதி செய்யப்பட்டால், அத்தகையோரின் பெயா்ப் பட்டியல் அவா்களது நிழற்படங்களோடு அரசுகளின் அதிகாரபூா்வ இணையதளங்களில் வெளியிடப்பட வேண்டும்.

காவல் நிலையங்களிலும், பொதுமக்கள் அதிகம் கூடுகிற இடங்களிலும் திருடா்களின், சமூக விரோதிகளின் நிழற்படங்களை சுவரில் மாட்டி வைத்து மக்களை எச்சரிப்பது சரிதான் எனில், அதை விடவும் இன்றியமையாதது இத்தகைய நடவடிக்கை.

கட்டுரையாளா் –
கவிஞர்

News

Read Previous

ஜன.10, இராமநாதபுரத்தில் எம்.எஸ்.ஏ. லியாகத் அலி & பிரதர்ஸ் இல்ல மணவிழா

Read Next

பரமக்குடி அல்ஹஸனாத் பைத்துல்மால் நிர்வாகிகள் முதுவை ஹிதாயத் உடன் சந்திப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *